தீர்ப்பின் பிழை! | மகாராஷ்டிர சட்டப்பேரவை குறித்த தலையங்கம்


மூன்றாண்டு கால விவாதத்துக்குப் பிறகு, 1949 நவம்பர் 26-ஆம் தேதி அரசியல் சாசன சபை இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. அனைவருக்கும் வாக்குரிமை என்கிற அடிப்படையில் அரசியல் சாசனம் இந்தியாவுக்கு ஜனநாயகத்தை வழங்கியது.  அரசியல் சாசனத்தின் இறுதி வடிவத்தை அரசியல் சாசன சபையில் தாக்கல் செய்தபோது, அன்றைய மத்திய சட்ட அமைச்சர் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரின் தீர்க்கதரிசனமான கூற்றை இப்போது நினைவுகூரத் தோன்றுகிறது. 

"உலகிலுள்ள அனைத்து அரசியல் சாசனங்களையும் ஆய்வு செய்து, அதில் காணப்படும் ஒவ்வோர் சட்டப் பிரிவையும் விவாதித்து இந்த அரசியல் சாசனத்தை சமர்ப்பிக்கிறோம். தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அரசியல் சாசனம் சரியாகச் செயல்படாமல் போனால் எங்களைக் குறை கூறாதீர்கள். இதை நடைமுறைப்படுத்தியவர்கள்தான் அதற்குக் காரணம்' என்றார் டாக்டர் அம்பேத்கர். அவரது தொலைநோக்குப் பார்வை வியப்பை ஏற்படுத்துகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தியா உறங்கப் போனபோது, சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வராகப் போகிறார் என்பது உறுதியாகி இருந்தது. 288 பேர் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 56 உறுப்பினர்கள் கொண்ட சிவசேனைக்கு, 54 உறுப்பினர்கள் கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியும், 44 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்திருந்த நிலையில், அவருக்கு தனிப் பெரும்பான்மை இருந்தது. ஆனால், சனிக்கிழமை காலையில் இந்தியா விழித்தபோது மகாராஷ்டிரத்துக்கு புதிய முதல்வர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் உத்தவ் தாக்கரே அல்லர்; முந்தைய முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.  உச்சநீதிமன்றம் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருக்கும் நிலையில், தனக்குப் போதிய பெரும்பான்மை பலம் இல்லை என்கிற திடீர் ஞானோதயம் தேவேந்திர ஃபட்னவீஸýக்கு ஏற்பட்டது. சனிக்கிழமை  காலையில் பதவியேற்ற தேவேந்திர ஃபட்னவீஸ் செவ்வாய்க்கிழமை மாலையில் பதவி விலகியிருக்கிறார்.

இதுவரை தார்மிக அரசியல் குறித்துப் பேசிவந்த பாரதிய ஜனதா கட்சி இனிமேல் அரசியல் தர்மம் குறித்துப் பேச முடியாது என்கிற நிலைமையை ஏற்படுத்திவிட்டது மகாராஷ்டிர நிகழ்வு. முதல்வர் பதவி ஆசையினால் கூட்டணியில் இருந்து சிவசேனை கட்சி வெளியேறிய போது, தனக்கு ஆட்சி அமைப்பதற்கு போதிய எண்ணிக்கை பலம் இல்லை என்று கூறி பாஜக ஒதுங்கியதை பாராட்டத் தோன்றியது. தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு அந்தக் கூட்டணி வெற்றியும் பெற்ற பிறகு, ஆட்சியமைக்காமல் கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியேறியது விமர்சிக்கப்பட்டது. 100-க்கும் அதிகமான இடங்களை வென்று சட்டப்பேரவையில், அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியாக இருந்தும் பாஜகவை ஆட்சியமைக்க விடவில்லை என்ற போது பாஜகவின் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டிருந்தது. 

பிராந்திய வெறியும், ஹிந்துத்துவ கொள்கையும் கொண்ட சிவசேனையும், காங்கிரஸூம் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அமைத்த சந்தர்ப்பவாதக் கூட்டணி அப்போது ஆட்சியமைத்திருந்தாலும்கூட அதிக நாள் அந்தக் கூட்டணி நிலைத்திருக்குமா என்பது ஐயப்பாடுதான். கொள்கை ரீதியாக இணைய முடியாது என்பது மட்டுமல்லாமல், சிவசேனைக்கு முதல்வர் பதவியை வழங்கிவிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் நீண்ட நாள் அடக்கி வாசித்திருக்காது. இப்போது பாஜக நடத்திய இரவு நேரத் திரைமறைவு நாடகம், கொள்கை முரண்பாடுகளின் மொத்த உருவமான சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு ஞானஸ்நானம் வழங்கிவிட்டது. அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி அந்தக் கூட்டணிக்கு வலிமை சேர்த்த பெருமை பாஜகவைச் சாரும்.மகாராஷ்டிரத்தில் அரங்கேறிய அரசியல் நாடகத்தில்,  அரசியல் சாசனம் தனக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பட்டவர்த்தனமாக தவறாகப் பயன்படுத்தினார் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி என்பதில் ஐயப்பாடு இல்லை. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் பேரவை அமைக்கப்படாமல் இருப்பதற்கு உடனடித் தீர்வு வழங்கப்பட்டிருக்கிறது. முறையான பெரும்பான்மை பலம் கொண்ட ஆட்சி அமைவதற்கும் உச்சநீதிமன்றம் வழிகோலியிருக்கிறது. 

உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்னை குறித்த இறுதித் தீர்ப்பை வழங்கவில்லை. சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தாக்கல் செய்திருக்கும் வழக்கை உச்சநீதிமன்றம் இரண்டு பிரிவுகளாக அணுகியிருக்கிறது. உடனடித் தீர்ப்பாக தற்காலிக அவைத் தலைவரை நியமித்து, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது; அதைத் தொடர்ந்து வெளிப்படையான தேர்தல் மூலம் பலப்பரீட்சை நடத்துவது; அந்த நம்பிக்கைத் தீர்மானத்தை காணொலிக் காட்சிப்படுத்துவது என்பவை ஆளுநருக்கு விடுக்கப்பட்டிருக்கும் உத்தரவுகள். 

இந்தப் பிரச்னையின் இன்னொரு கேள்விக்கு உச்சநீதிமன்றம் இனிமேல்தான் விடை காண வேண்டும். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை வழங்காத மக்கள் தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் அது. யாரை வேண்டுமானாலும் அழைத்து முதல்வராக நியமிக்கும் உரிமையை அரசியல் சாசனம் ஆளுநருக்கு வழங்கியிருக்கிறது. அதற்காக, இரவோடு இரவாக, சார்புநிலை எடுத்துச் செயல்படுவது சரிதானா என்கிற கேள்விக்கான விடையை உச்சநீதிமன்றம்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com