Enable Javscript for better performance
வெங்காய வேதனை!| வெங்காய விலை உயர்வு குறித்த தலையங்க- Dinamani

சுடச்சுட

  

  வெங்காய வேதனை!| வெங்காய விலை உயர்வு குறித்த தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 01st October 2019 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெங்காய விலை உயர்வு நாடு தழுவிய அளவில் மீண்டும் மிகப் பெரிய  பிரச்னையாக உருவாகியிருக்கிறது. அதிகரித்த வெங்காய விலையால் நகர்ப்புறவாசிகள் ஆத்திரமடைந்திருக்கிறார்கள் என்றால், வெங்காய விலையேற்றத்தால் விவசாயிகள் பெரிய அளவிலான ஆதாயம் பெறவில்லை என்பதுதான் இந்த வெங்காயப் பிரச்னையின் மிகப் பெரிய சோகம். 
  மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முழுமூச்சாக இறங்கியிருப்பதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் ஆச்சரியம் இல்லை. வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்திருக்கிறது. அரசு கிடங்குகளிலுள்ள வெங்காயத்தைச் சந்தைப்படுத்தி விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. 
  ஜனதா ஆட்சி வீழ்ச்சியடைந்து 1980-இல் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்ததற்கு, அப்போது நிலவிய வெங்காய விலை உயர்வு ஒரு முக்கியமான காரணம். 1998-இல் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான தில்லி பாஜக அரசு தோல்வியைத் தழுவியதற்கும், ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததற்கும் வெங்காய விலை உயர்வுதான் காரணமாக அமைந்தது. 2015-இல் அசுரப் பெரும்பான்மையுடன் தில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதற்கும்கூட ஒருவகையில் வெங்காய விலை உயர்வு காரணம். அதனால்தான் இப்போது வெங்காய விலையைக் கட்டுக்குள் கொண்டுவர அவசர அவசரமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
  அவ்வப்போது இதுபோல வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரிப்பதும் அதன் மூலம் இடைத்தரகர்களும் வணிகர்களும் பெரும் லாபம் ஈட்டுவதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இதனால், முன்பே கூறியதுபோல, வெங்காய விவசாயிகள் ஆதாயம் அடைவதில்லை. இதுபோன்ற திடீர் விலை உயர்வு அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பில்லாமல் நடைபெற வழியேயில்லை. 
  மழையாலோ, வறட்சியாலோ, வெள்ளத்தாலோ, பூச்சித் தாக்குதலாலோ எந்த மாநிலத்தில் எந்த விளைபொருள்  பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை இன்றைய தொழில்நுட்பச் சூழலில் முன்கூட்டியே அறிய முடியும். விளைச்சல் அதிகமாக இருக்கும் விளைபொருள் எவை, விளைச்சல் குறைவாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்படும் விளைபொருள் எவை என்பதையெல்லாம் அந்தந்த மாநில வேளாண் துறையினர் மிகத் துல்லியமாக முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. 
  பற்றாக்குறையுள்ள விளைபொருள்களை தனியார் வணிகர்கள் இறக்குமதி செய்யத் தயங்கினால், அரசு தலையிட்டு இந்திய உணவு வாணிபக் கழகம் மூலம் இறக்குமதி செய்து பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. 
  இப்போது அவசர அவசரமாக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்க முற்பட்டிருக்கும் அரசு, விலை உயர்வுக்கு முன்பே இதைச் செய்திருக்க முடியும். அப்படிச் செய்யாமல் இருந்ததற்கு ஆட்சியாளர்கள் காரணமா அல்லது அதிகார வர்க்கம் காரணமா என்பது தெரியவில்லை.
  இந்தப் பிரச்னையில் இன்று நேற்றல்ல, கடந்த அரை நூற்றாண்டு காலமாகவே ஓர் ஐயப்பாடு இருக்கிறது. நுகர்வோருக்கும், வேளாண் உற்பத்தியாளர்களுக்கும்  பாதிப்பில்லாமல் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க தனியாரோ, அரசுத் துறையோ தேவைக்குத் தகுந்தாற்போல இறக்குமதி செய்யவோ, ஏற்றுமதி செய்யவோ அனுமதிக்க அரசியல் துணிவு வேண்டும். இடைத்தரகர்களும் வணிகர்களும் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்குபவர்கள். தேர்தலில் அவர்களது உதவிக்குப் பிரதியுபகாரமாக, தங்களது நன்கொடைகளை ஈடுசெய்துகொள்ள, அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்கின்றனவோ என்னவோ?
  இந்த விலை உயர்வால் விவசாயிகள் பயனடைகிறார்கள் என்றால், நாம் ஓரளவு ஆறுதல் அடையலாம். ஆனால்,  விலை உயர்வால்  பாதிக்கப்படும் நுகர்வோரின் இழப்பில் கொள்ளை லாபம் அடிப்பவர்கள் எல்லாம் இடைத்தரகர்கள்தான் என்பது வேதனை அளிக்கிறது. விவசாயிகளுக்குத் தங்களது விளைபொருள்களைச் சேமித்து வைக்க வழிவகை இல்லாததால் விளைச்சல் அதிகமாகும்போது கிடைத்த விலைக்கு விற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால், குறைந்தபட்ச ஆதார விலையை அடிப்படையாகக் கொண்டு அதிகபட்ச விலையாக அரசு அமைப்புகளிடம் அவர்கள் விற்பனை செய்கிறார்கள். 
  காய்கனிகளையும், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் விளைவிக்கும் விவசாயிகள் அரிசி, கோதுமை, கரும்பு, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றைப் பயிரிடும் விவசாயிகளைவிட, மிக அதிக அளவிலான இடரை (ரிஸ்க்) எதிர்கொள்கிறார்கள். இவர்களது விளைபொருள்களைச் சேமித்து வைக்க முடியாது. இவற்றுக்கான விலையும் மிகமிகக் குறைவு. ஏனைய உணவுப் பொருள்களுக்கு அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலையும் பாதுகாப்பும் இவர்களுக்குக் கிடையாது. விலை அதிகரிக்கும்போது அதனால் பயனடையவும் முடியாமல், விலை குறையும்போது முழுவதையும் இழந்து நிற்கும் அவலத்தை எதிர்கொள்கிறார்கள் இந்த விவசாயிகள்.
  உணவுப் பொருள்களின் விலையை பிரதமர் நரேந்திர மோடி அரசு கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது எந்த அளவுக்குப் பாராட்டுக்குரியதோ, அதே அளவுக்கு விவசாயிகளுக்குப் பயனளிக்கும் விதத்தில் அரசின் கொள்கைகள் அமையவில்லை என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. வெங்காய விலை உயர்வால் கண்ணீர் விடுவது நகர்ப்புற நுகர்வோர் மட்டுமல்ல, அதனால் எந்தவிதப் பயனையும் அடையாத வெங்காய உற்பத்தியாளர்களான விவசாயிகளும்கூட!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai