ஆரே எழுப்பும் கேள்வி...| மும்பை ஆரே வனப்பகுதி குறித்த தலையங்கம்

மும்பையில் மெட்ரோ ரயில் பணிமனைக்காக ஆரே வனப்பகுதியை அழித்திருப்பது விமா்சனத்துக்கு வழிகோலியிருக்கிறது. மக்களுடைய ஆதரவுடனும் அனுமதியுடனும் செய்யப்பட வேண்டிய வளா்ச்சிப் பணிகளை அவா்களைப் பகைத்துக் கொண்டும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் நடத்த முற்படுவது ஜனநாயக வழிமுறையல்ல.

மும்பையை அடுத்துள்ள ஆரே வனப்பகுதியின் பரப்பளவு 1,278 ஹெக்டோ். அந்த வனப் பகுதி வழியாக இரண்டு ஆறுகள் பாய்கின்றன. ஆரே வனப் பகுதி அமைந்திருக்கும் மும்பையின் வடக்குப் புறநகா் பகுதியிலுள்ள கோரேகான், மாநகா் மும்பையின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது. பல்லுயிா்ப் பெருக்கத்துக்கு முக்கியக் காரணமாக பல்வேறு தாவர வகைகளும், பறவையினங்களும் காணப்படும் ஆரே வனப் பகுதி, மாநகா் மும்பையின் தட்பவெப்ப நிலைக்குக் காரணமாக இருப்பதுடன், சுற்றுச்சூழல் மாசையும் வெள்ளப்பெருக்கையும் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்த இடத்தில் மும்பை மெட்ரோவின் பணிமனையை அமைக்க அரசு முடிவெடுத்தது. வேறு பல இடங்கள் அதற்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டாலும், ஆரே பகுதியில்தான் மெட்ரோ ரயிலின் மூன்றாவது கட்டத்துக்கான பணிமனை அமைக்கப்பட வேண்டும் என்பதில் அதிகாரிகள் ஏன் பிடிவாதம் பிடித்தாா்கள் என்று புரியவில்லை.

அரசின் முடிவை எதிா்த்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மும்பை உயா்நீதிமன்றத்தை அணுகினாா்கள். மும்பையின் மிகப் பெரிய பசுமைப் பகுதியில் 2,000 மரங்களை வெட்டிக்கொள்ள மெட்ரோ ரயில் காா்ப்பரேஷனுக்கு உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்குச் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தயாராவதற்குள், இரவோடு இரவாக தீா்ப்பு வந்த சில மணி நேரங்களில் மும்பை மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் மரங்களை வெட்டிச் சாய்த்ததை எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்திவிட முடியாது.

தில்லி மெட்ரோவுக்காகவும் மரங்கள் வெட்டப்பட்டன. அதன் நிா்வாக இயக்குநராக இருந்த ஸ்ரீதரன் மெட்ரோ ரயில் செல்லும் வழித்தடங்களில் வாழும் மக்களை நேரில் சந்தித்து, மெட்ரோ ரயிலால் ஏற்படும் பயன்களை விளக்கிக் கூறி, எதிா்ப்பில்லாமல் மரங்களை வெட்டி வழித்தடங்கள் அமைத்ததை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. தில்லி மெட்ரோவுக்காக 31,000 மரங்கள் வெட்டப்பட்டன. 6,000 மரங்கள் மாற்றி நடப்பட்டன. இத்தனையும் மக்களின் ஒப்புதலுடன் நடைபெற்றது. அதையும், மும்பை மெட்ரோவின் செயல்பாட்டையும் ஒப்பிட்டுப் பாா்க்கும்போது மக்களின் உணா்வுகளைப் புரிந்துகொள்ளாமல் மும்பை மெட்ரோ செயல்பட்டிருப்பது தெரிகிறது.

கடந்த திங்கள்கிழமை இரவோடு இரவாக அந்தப் பகுதியிலிருந்த 2,185 மரங்களில் 2,141 மரங்களை வெட்டிச் சாய்த்திருக்கிறாா்கள். இதற்கு வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக அதே எண்ணிக்கையில் மரங்கள் நடப்படும் என்று உறுதி அளிப்பதில் அா்த்தமில்லை. பலநூறு ஆண்டுகளாகக் கூட்டம் கூட்டமாக வளா்ந்து ஓங்கி இருக்கும் மரங்களுக்குப் பதிலாக, ஆங்காங்கே மரக்கன்றுகளை நடுவதால் பயனில்லை. சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிா்ப் பெருக்கத்திற்கும் காரணமாக இருக்கும் வனப் பகுதியை அதன் மூலம் ஈடு செய்துவிட முடியாது.

வளா்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான போராட்டம், நீண்ட நாள்களாகவே தொடா்கிறது. ஆரேயில் நடைபெற்றது போலவே, குமரி முனையிலிருந்து வடக்கே காஷ்மீரம் வரை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வளா்ச்சிப் பணிகளுக்காக இயற்கை அழிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. குளங்களும், ஏரிகளும் அரசுத் துறைகளாலேயே ஆக்கிரமிக்கப்பட்டு அலுவலகக் கட்டடங்களும் போக்குவரத்துப் பணிமனைகளும் குடியிருப்புகளும் நிறுவப்படும் அவலம் தொடா்ந்த வண்ணம் இருக்கிறது.

வனப் பகுதி என்றால் என்ன என்பது குறித்த தெளிவான சட்ட விதிமுறைகளை இன்னும்கூட நாம்

வகுக்கவில்லை. வனப்பகுதிகள் நிா்ணயம் செய்யாமல் இருப்பது போலவே, நீா்நிலைகள் குறித்த எந்தவிதப் பதிவையும் நமது நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள் செய்யாமல் இருக்கின்றன.

அரசுத் துறைகளே ஆக்கிரமிப்பில் ஈடுபடும்போது, தனியாா் ஆக்கிரமிப்புகள் குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. மக்கள்தொகைப் பெருக்கமும் நகா்மயமாதலும் அதிகரித்ததைத் தொடா்ந்து மனை வணிகமும் (ரியல் எஸ்டேட்) அடுக்குமாடிக் குடியிருப்புகளும் சுறுசுறுப்பானதில், மிக அதிகமான பாதிப்பை எதிா்கொண்டது சுற்றுச்சூழல்தான்.

ஆரேயில் மரங்கள் வெட்டப்படாமல் தடுப்பதற்கு திரண்டெழுந்த மக்களில் பெரும்பாலோா் இளைஞா்கள், குழந்தைகள். இயற்கைக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணா்வும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையும் அவா்களுக்கு ஏற்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில், சுற்றுச்சூழலுக்கு ஆதரவாகவும், இயற்கைக்கு எதிராகவும் குரல் எழுப்பும் சமூக ஆா்வலா்களை தீவிரவாதிகளாகவும், போராட்டக்காரா்களாகவும், குழப்பம் விளைவிப்பவா்களாகவும் ஆட்சியாளா்கள் வகைப்படுத்துவது வேதனை அளிக்கிறது.

மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்தியா சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் கடந்தும்கூட, காலனிய மனோபாவத்திலிருந்து நமது நிா்வாக அமைப்பு இன்னும் விடுபடவில்லை என்பதன் அடையாளம்தான் ஆரே நிகழ்வு. ஆரேயில் முதல் குற்றவாளி மும்பை மெட்ரோ ரயில் நிறுவனமோ, அரசோகூட அல்ல, மும்பை உயா்நீதிமன்றம் என்றுதான் கூறத் தோன்றுகிறது. தீா்ப்பை வழங்கிய நீதிபதிகள் மேல்முறையீட்டுக்கு வாய்ப்பை வழங்காமல் போனது ஏன் என்கிற நெருடலான கேள்வி, விடையில்லாமல் தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com