Enable Javscript for better performance
நீதிதேவதைக்குத் தலைகுனிவு! 49 பேர் மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கு குறித்த தலையங்கம்- Dinamani

சுடச்சுட

  

  நீதிதேவதைக்குத் தலைகுனிவு! | 49 பேர் மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கு குறித்த தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 15th October 2019 11:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கருத்து வேறுபாடுகள் விவாதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தீர்வை எட்டுவதுதான் ஜனநாயக நடைமுறை. அதன் அடிப்படையில் ஆட்சி நடக்கும்போது ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியையும், குற்றச்சாட்டுகளையும் பொதுவெளியில் வைப்பதற்கான சுதந்திரத்தை அரசியல் சாசனம் வழங்குகிறது. அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளாக இருந்தால் அதற்கு எதிராக அவதூறு வழக்கு தொடரும் உரிமையும் வழங்கப்பட்டிருக்கிறது.
   பிகார் மாநிலம் முசாபர்பூரில் காவல்துறையினர் ஒரு விசித்திரமான வழக்கை மாவட்ட முதன்மை நீதிபதியின் உத்தரவுடன் பதிவு செய்ய எடுத்துக் கொண்டது தேசிய அளவில் விமர்சனத்தை எழுப்பியது. ராமச்சந்திர குஹா, மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், சியாம் பெனகல், செளமித்ர சாட்டர்ஜி, அபர்ணா சென், அனுராக் காஷ்யப், சுபா முத்கல், ரேவதி உள்ளிட்ட எழுத்துலக, திரையுலக, கலையுலகப் பிரமுகர்கள் 49 பேர் பிரதமருக்கு திறந்த கடிதம் ஒன்றை கடந்த ஜூலை 23-ஆம் தேதி அனுப்பினர். சிறுபான்மையினருக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் எதிராக அதிகரித்துவரும் வெறுப்பின் அடிப்படையிலான தாக்குதல்கள் குறித்தும், கும்பல் கொலைகள் குறித்தும் கவலை தெரிவித்து, பிரதமர் தலையிட்டு இவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியிருந்தனர்.
   அந்தக் கடிதத்தின் அடிப்படையில், 49 பிரமுகர்கள் மீதும் தேசத்தின் மரியாதைக்கு களங்கம் விளைவித்ததாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும், பிரதமரின் செயல்பாடுகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் சுதீர் ஓஜா என்கிற வழக்குரைஞர் பொதுநல வழக்கு தொடுத்தார். இதுபோல வழக்குகளைத் தொடுப்பது சுதீர் ஓஜாவுக்கு புதிதொன்றுமல்ல. நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்த சுதீர் ஓஜா, தனது குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதற்கான ஆவணங்கள் எதையும் இணைக்கவில்லை. குறைந்தபட்சம் 49 பிரமுகர்களும் எழுதிய திறந்த கடிதத்தின் நகலையாவது இணைத்திருக்கலாம்.
   49 பிரமுகர்களின் திறந்த கடிதம் எந்த விதத்திலும் வெறுப்பைத் தூண்டுவதாகவோ, கண்டனத்துக்குரியதாகவோ இல்லை என்பதை முதல் பார்வையிலேயே புரிந்துகொண்டு மாவட்ட முதன்மை நீதிபதி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தல், பொது அமைதிக்குக் களங்கம் விளைவித்தல், மயானத்தில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு எந்தவிதத் தொடர்போ, ஆதாரமோ இல்லாத பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர சுதீர் ஓஜா முற்பட்டிருந்தும்கூட, மாவட்ட முதன்மை நீதிபதி அதை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது புரியவில்லை.
   இதுபோல தனிநபர் குற்றச்சாட்டுகளை பிரபலங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்து, குற்றவியல் சட்டப் பிரிவு 156(3)-கீழ் உத்தரவு வாங்கி காவல்துறை விசாரணைக்கு உட்படுத்துவது ஓஜாவுக்கு வழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. மாவட்ட முதன்மை நீதிமன்ற இணையதளத்தில் சுதீர் ஓஜாவின் பெயரை முதன்மை நீதிபதி தேடியிருந்தால் அரவிந்த் கேஜரிவால், இம்ரான் கான், திக்விஜய் சிங், பிரியங்கா வதேரா, சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு எதிராகக் கடந்த 10 மாதங்களில் அடிப்படை ஆதாரமில்லாத வழக்குகளை அவர் தொடுத்திருப்பது தெரியவந்திருக்கும்.
   1962-இல் பிகார் அரசுக்கு எதிரான கேதார்நாத் சிங்கின் வழக்கில், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, சட்டப்பிரிவு 124 (ஏ) குறித்து மிகத் தெளிவாகவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 2016-இல் அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தேசத் துரோக குற்றச்சாட்டுகள் ஆட்சியாளர்களால் அணுகப்பட வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. சட்டம் - ஒழுங்கைத் தகர்ப்பதற்கோ, வன்முறையைத் தூண்டுவதற்கோ, பொது வெளியில் சமநிலையைத் தகர்ப்பதற்கோ உத்தேசம் இருந்தால் மட்டுமே தேசத் துரோகக் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுதான் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு.
   49 பிரமுகர்களும் பிரதமருக்கு எழுதியிருந்த திறந்த கடிதம், ஆட்சி குறித்த விமர்சனம் என்பதில் சந்தேகமில்லை. அரசியல் ரீதியாக இன்றைய ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அந்தப் பிரமுகர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால், கும்பல் வன்முறை குறித்தும், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மீதான தாக்குதல்கள் குறித்தும் யாரும் கவலை தெரிவிக்கக் கூடாது என்று தடுத்துவிட முடியாது. பொறுப்பான குடிமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறார்கள் என்றும், பொதுவெளியில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கோருகிறார்கள் என்றும்தான் பிரமுகர்களின் கடிதம் பார்க்கப்பட வேண்டும்.
   முசாபர்பூர் மாவட்ட காவல்துறை, 49 பிரமுகர்களின் மீதான தேசத் துரோக வழக்கை திரும்பப் பெற்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தவறான குற்றச்சாட்டைப் பதிவு செய்ததற்காக வழக்குரைஞர் சுதீர் ஓஜா மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 182-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டு பொய்யானது என்பதை நீதிபதியும் சரி, காவல்துறை அதிகாரியும் சரி ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டு நிராகரித்திருக்கலாம்.
   உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறியதற்காகவும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்காகவும் மாவட்ட முதன்மை நீதிபதியின் மீது பாட்னா உயர்நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இதுபோல உண்மைக்கும் புனைவுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் நீதிபதிகளாக இருக்கும் அவலத்துக்கு எப்படி, எப்போது நாம் முடிவு காணப் போகிறோம்?
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai