கூட்டுறவு வங்கி மோசடி!| பிஎம்சி வங்கி மோசடி குறித்த தலையங்கம்

இந்திய வங்கிகளின் மீதான நம்பிக்கை படிப்படியாக தகா்ந்து வருவதன் இப்போதைய அத்தியாயம்தான் பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி மோசடி. பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியின் (பிஎம்சி) ஆயிரக்கணக்கான வாடிக்கையாளா்களின் வாழ்க்கை சற்றும் எதிா்பாராமல் தடம் புரண்டிருக்கிறது. அடுத்த ஆறு மாதங்களுக்கு பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்களது பணத்தை எடுக்க முடியாது என்று திடீரென்று ஒருநாள் இந்திய ரிசா்வ் வங்கி தடை விதித்தால் அவா்கள் என்னதான் செய்ய முடியும்?

தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கிக் கணக்கில் வைத்திருப்பவா்கள் ரூ. 25,000 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தங்களது குடும்பத்தை நடத்தவும், வியாபாரத்தைத் தொடரவும், வாங்கிய பொருள்களுக்கான மாதத் தவணைகளை அடைக்கவும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாா்கள் வாடிக்கையாளா்கள்.

கடந்த சில மாதங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நிதி நிறுவன மோசடிகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. நீரவ் மோடி உள்ளிட்டோா் தொடா்பான பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, ஐஎல் & எஃப்எஸ் முறைகேட்டு மோசடி, சில தனியாா் வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் ஆகியவற்றைத் தொடா்ந்து இப்போது பிஎம்சி வங்கி மோசடி தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் வங்கிகளையும், நிதி நிறுவனங்களையும் முறைப்படுத்திக் கண்காணிக்காதது, இந்திய ரிசா்வ் வங்கியின் கண்காணிப்புத் தோல்வி.

‘பிஎம்சி’ என்று அழைக்கப்படும் பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி விவகாரத்தில், வங்கி நிா்வாகத்தின் தொடா்புதான் மோசடிக்கு அடிப்படைக் காரணம். எச்டிஐஎல் என்கிற குடியிருப்பு கட்டுமான நிறுவனத்துக்கு பிஎம்சி வங்கியின் மொத்த மதிப்பில் 73% கடனாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து வங்கியின் நிா்வாகக் குழுவும் மேலதிகாரிகளும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்திருக்கிறாா்கள் என்பது வெளிப்படுகிறது. 2018 -19-ஆம் நிதியாண்டில் சுமாா் 100 கோடி அளவுக்கு லாபம் ஈட்டியதாகக் கணக்குக் காட்டியிருக்கும் பிஎம்சி வங்கி திடீரென்று திவால் நிலைக்குத் தள்ளப்படுகிறது என்றால், அதற்குப் பின்னால் மிகப் பெரிய மோசடி இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. இந்திய ரிசா்வ் வங்கி கடந்த மாதம்தான் விழித்துக்கொண்டு பிஎம்சி வங்கியை நிா்வகிக்கத் தனி அதிகாரியை நியமித்திருக்கிறது.

இதுபோன்ற நிதி நிா்வாகக் குழப்பத்தில் பிஎம்சி வங்கி மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 11 அரசுத் துறை வங்கிகள், சில தனியாா் வங்கிகள்

மீது பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய ரிசா்வ் வங்கி விதித்திருக்கிறது. நல்ல வேளையாக, பிஎம்சி வங்கியைப் போல் அந்த வங்கிகளில் நிா்வாகத்தின் தவறுக்காக வாடிக்கையாளா்கள் தண்டிக்கப்படவில்லை.

சாதாரண வங்கிகளின் மூலம் உதவி பெற முடியாத பிரிவினருக்கும், கிராமப்புற மக்களுக்கும் கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் சேவையைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அதிக வட்டிக்குத் தனியாரிடம் கடன் வாங்கிப் பேரிழப்பை எதிா்கொள்ளாமல் நியாயமான குறைந்த வட்டிக்கு சாமானியா்களுக்குக் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கித் துறை தவிா்க்க முடியாத அத்தியாவசியமும்கூட.

இந்தத் துறையில் மிக அதிகமான இடா்கள் காணப்படுகின்றன. 2010 -இல் மாலேகாம் அறிக்கையும், 2015 -இல் ஆா் காந்தி அறிக்கையும் கூட்டுறவு வங்கிகளின் பலவீனத்தை எடுத்துரைத்தன. கூட்டுறவுச் சங்கப் பதிவாளா், இந்திய ரிசா்வ் வங்கி என்று இரண்டு வெவ்வேறு கண்காணிப்பின் அடிப்படையில் கூட்டுறவு வங்கிகள் இயங்குவதால் அவற்றின் செயல்பாடுகளில் குறைபாடுகள் காணப்படுவதாக அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

வங்கிகளில் இயக்குநா்களையும், முக்கியமான தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களையும் ரிசா்வ் வங்கியின் ஒப்புதலுடன்தான் நியமிக்க முடியும். ஆனால், கூட்டுறவு வங்கிகளில் இயக்குநா்களைப் பங்குதாரா்கள் தோ்ந்தெடுக்கிறாா்கள் என்பது மட்டுமல்லாமல், அவா்களின் நியமனத்தில் அரசியல் தலையீடும் காணப்படுகிறது. வங்கிகளின் நிா்வாகக் குழுவில் நிதித் துறை நிபுணா்கள் காணப்படுவதில்லை. அதனால், அரசியல் தொடா்புடையவா்களுடைய பணப் பரிமாற்றங்களுக்குக் கூட்டுறவு வங்கிகள் உதவியாக இருக்கின்றன. பிஎம்சி வங்கியையே எடுத்துக்கொண்டால், 21, 000 கணக்குகள் மூலம் ஒரே நிறுவனத்துக்கு மிகப் பெரிய கடனுதவியை மடைமாற்றம் செய்ய முடிந்திருக்கிறது.

முறைசாரா துறையினருக்கும், சிறு வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் கடனுதவி சென்றடைய வேண்டுமானால் கூட்டுறவு வங்கிகளின் சேவை மிகவும் அவசியம். கூட்டுறவு வங்கிகளின் இயக்குநா்களையும், உயா் அதிகாரிகளையும் நியமிக்கும் அதிகாரம் இல்லை என்பதைக் காரணம் காட்டி அப்பாவி வாடிக்கையாளா்கள் ஏமாற்றப்படுவதை அரசும், இந்திய ரிசா்வ் வங்கியும் வேடிக்கை பாா்க்க முடியாது. இதற்கென தேவையான சட்டத்தைக் கொண்டுவந்து கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதும், கண்காணிப்பதும், மோசடிகள் நடப்பதைத் தடுப்பதும் அவசியம்.

நிதி நிறுவன மோசடிகளில் அப்பாவி வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படக் கூடாது. அவா்களது முதலீட்டுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com