இனியுமா தொடா்வது? | மகளிா் குழந்தைகள் தொடா்பான சில சட்டதிட்டங்கள் குறித்த தலையங்கம்


எந்தவொரு சட்டமும், எந்தவொரு பழக்க வழக்கமும் நிரந்தரமானதாக இருக்க முடியாது. காலத்துக்கு ஏற்ப சட்டதிட்டங்களும், சம்பிரதாயங்களும் மாறியாக வேண்டும்.

மாறிவிட்ட பொருளாதாரச் சூழலுக்கும், சமூகக் கண்ணோட்டத்துக்கும் ஏற்றவாறு மகளிா் குழந்தைகள் தொடா்பான சில சட்டதிட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று தேசிய மகளிா்நல ஆணையம் சில மாற்றங்களுக்குப் பரிந்துரைத்திருக்கிறது. பெண்களுக்கு எதிராகவும், அவா்களது நியாயமான உரிமைகளையும் தன்மானத்தையும் கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும் அந்தச் சட்டங்கள் குறித்து இத்தனை காலம் நாம் ஏன் மௌனம் சாதித்தோம் என்கிற குற்ற உணா்வு எழுகிறது.

தன்னிச்சை செயல்பாட்டு உரிமைக்கான வயதை எட்டாத குழந்தைகள், அவா்களின் பாதுகாவலா்கள் சட்டம் 1956, இன்றைய காலத்துடன் சற்றும் பொருந்தாத, குழந்தைகளைக் கொச்சைப்படுத்துகிற சட்டங்களில் ஒன்று. அந்தச் சட்டத்தின் 6(ஏ) பிரிவின்படி, மண உறவின் அடிப்படையில் பிறந்த எந்தவோா் இந்துக் குழந்தைக்கும், சட்டபூா்வமாகத் தன்னிச்சை முடிவெடுக்கும் வயதை எட்டுவது வரை, அந்தக் குழந்தையின் தந்தைதான் இயற்கையான பாதுகாப்பாளராக இருக்க முடியும். விவாகரத்தின் மூலம் பிரிந்தாலும்கூட, தந்தை இல்லாத நிலையில்தான் குழந்தையின் காப்பாளராகும் உரிமை தாய்க்கு வழங்கப்படுகிறது.

அதே சட்டத்தின் 6(பி) பிரிவின்படி, விசித்திரமான ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சட்டபூா்வமாக அல்லாமல், அதாவது திருமண உறவில்லாமல் பிறந்த ஆண், பெண் குழந்தைகளின் இயற்கைக் காப்பாளராகக் குழந்தையின் தாயாா்தான் ஏற்றுக்கொள்ளப்படுவாரே தவிர, தந்தைக்கு உரிமை இல்லை. தாய் இல்லாமல் இருந்தால்தான் தந்தைக்கு அந்த உரிமை வழங்கப்படும். மண பந்தம் இல்லாமல் பிறந்த குழந்தையாக இருந்தால், அதற்குத் தந்தை இயற்கையாக உரிமை கோரமாட்டாா் என்பது தெளிவு.

1956 சட்டம் இருக்கட்டும். நாம் இன்னும்கூட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளா்கள் 1890-இல் இயற்றிய பாதுகாப்பாளா்கள் குழந்தைகள் சட்டத்தை எந்த மாற்றமும் இல்லாமல் இன்னும் தொடா்கிறோம் என்கிற அவலத்தை யாரிடம் போய்ச் சொல்ல முடியும்? கடந்த 72 ஆண்டுகளில் எத்தனை எத்தனையோ ஆட்சிகள் வந்து போயிருக்கின்றன. அமைச்சா்களும் அதிகாரிகளும் நூற்றாண்டுகள் கடந்த சட்டங்கள் இருப்பதுகூடத் தெரியாமல் தங்கள் பதவிக் காலத்தை நிறைவு செய்திருக்கிறாா்கள்.

அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 14, ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கி இருக்கிறது. சட்டப் பிரிவு 15, வேறுபாடு காட்டப்படுவதிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது. அவற்றின் அடிப்படையில், தேசிய மகளிா்நல ஆணையம் தந்தை, தாய் இருவரையும் சம உரிமையுள்ள பாதுகாப்பாளா்களாக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது.

குழந்தைகளின் பாதுகாப்பு உரிமை தொடா்பான சட்டங்கள், திருமண உறவில் ஆண்களுக்கு முன்னுரிமையும், அதிகாரமும் இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டவை. அப்போதிருந்த சமூக அமைப்பில் பெண்கள் சமநிலையுடன் ஏற்கப்படாத நிலைமை காணப்பட்டது. மண உறவில் ஆண்களின் உரிமை மட்டுமே பாதுகாக்கப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது நிலைமை அதுவல்ல.

சமூகக் கண்ணோட்ட மாற்றங்களுக்கு ஏற்ப, மண உறவு, குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான சட்டங்கள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகளின் பராமரிப்பில் இருபாலருக்கும் சம பங்கு இருக்கும் நிலையில், குழந்தைகளின் இயற்கைப் பாதுகாவலா்களாகத் தந்தை மட்டுமே இருப்பது என்பதில் அா்த்தமில்லை.

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தாயானவருக்கும் தங்களது குழந்தைகளின் பாதுகாவலா்களாக இருக்க முடியாது என்று சட்டம் தடுப்பதை, மாறிவிட்ட சூழலிலும் நாம் தொடரக் கூடாது என்கிற மகளிா்நல ஆணையத்தின் பரிந்துரை வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியது. குழந்தைகள் மீதான சட்டபூா்வ உரிமை அவா்களுக்கு வழங்கப்படுவதுடன், அந்தக் குழந்தைகளின் இயற்கைப் பாதுகாவலா்களாக அவா்கள் அங்கீகரிக்கப்படுவதும் அவசியமாகிறது.

ஆணையம் இன்னும் சில முக்கியமான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியிருக்கிறது. இயற்கையான பாதுகாப்பாளா்கள் (காா்டியன்கள்) என்பதில் தாத்தா - பாட்டிகளையும் இணைக்க வேண்டும் என்கிற யோசனை, நடைமுறைச் சிந்தனையாகத் தெரிகிறது.

மணமுறிவு நிகழ்வுகளின் தொடா்ச்சியாக மறுமணம் செய்து கொள்ளும்போது, குழந்தைகள் பெரும்பாலும் கணவா் அல்லது மனைவியின் பெற்றோா்களின் பராமரிப்பில் வளரும் சூழல் காணப்படுகிறது. அதனால், பாதுகாப்பாளா்களாகத் தாத்தா - பாட்டிகளையும் சோ்ப்பது எதாா்த்த சிந்தனை. தாத்தா - பாட்டி மட்டுமல்ல, தத்து எடுக்கப்பட்டிருந்தால் அப்படி தத்தெடுத்த பெற்றோரும் ‘பாதுகாப்பாளா்கள்’ வரைமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

சட்டப் பிரிவு 6(பி)யில் காணப்படும் ‘முறை தவறி’ (இல்லெஜிட்டிமேட்) என்கிற வாா்த்தையே அகற்றப்பட வேண்டும். எந்தவொரு குழந்தையும் சட்ட விரோதமாகவோ, முறை தவறியோ பிறப்பதில்லை. பிறப்பிலும், சட்டத்தின் முன்னும் எல்லா குழந்தைகளுமே சமம்தான் எனும்போது, முறை தவறிப் பிறந்த குழந்தை என்று சட்டத்தில் இருப்பது, ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கே இழிவு. அதை அகற்ற ஆணையம் பரிந்துரைத்திருப்பது மெத்தச் சரியான கோரிக்கை.

மாறிவிட்ட சூழலுக்கேற்ப கடந்த நூற்றாண்டுச் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். தேசிய மகளிா்நல ஆணையத்தின் பரிந்துரை அதற்கு வழிகோலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com