கங்குலியின் அடுத்த ஆட்டம்!| இந்திய கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலி குறித்த தலையங்கம்

இந்தியக் கிரிக்கெட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களில் ஒருவர், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பது என்பது அடையாளமாகவே இருந்தாலும்கூட வரவேற்புக்குரியது.
கங்குலியின் அடுத்த ஆட்டம்!| இந்திய கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலி குறித்த தலையங்கம்

இந்தியக் கிரிக்கெட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களில் ஒருவர், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பது என்பது அடையாளமாகவே இருந்தாலும்கூட வரவேற்புக்குரியது. தலைமைப் பொறுப்பில் செளரவ் கங்குலி இருக்கப் போகிறார் என்பது மட்டுமே அல்லாமல், கிரிக்கெட் வீரர்களின் பிரதிநிதிகளாக இருவரும் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமைக் குழுவில் இருக்கப் போகிறார்கள். ஆண்கள் கிரிக்கெட்டுக்கும், பெண்கள் கிரிக்கெட்டுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட இருக்கிறது. 

லோதா குழுவின் பரிந்துரைகளில் சிலவற்றை நடைமுறை வசதிகளுக்காக உச்சநீதிமன்றம் மாற்றியிருக்கிறது. கிரிக்கெட் வீரர்களின் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவரும் நிர்வாகக் குழுவில் இடம் பெறுகிறார். இதெல்லாம் போதாதென்று, தலைமைக் குழுவில் ஒழுங்காற்று அதிகாரி ஒருவரும் இடம்பெறுவார் என்று தெரிகிறது. இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளையும், உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான செளரவ் கங்குலி தலைமைப் பொறுப்பை ஏற்க இருக்கிறார். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாட்டு மோசடிகளால் (மேட்ச் பிக்சிங்) இந்திய கிரிக்கெட் நிலைகுலைந்தபோது, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற செளரவ் கங்குலி, அணியின் கெளரவத்தைக் காப்பாற்றியதுடன் கிரிக்கெட்டின்  மரியாதையையும் மீட்டெடுத்தார். அதேபோல, கிரிக்கெட் அணியில் காணப்பட்ட சில மாநிலங்களின் ஆதிக்கத்தை அகற்றி, சமச்சீரான பங்களிப்பை இந்தியாவின் எல்லா மாநிலங்களும் பெறுவதற்கு வழிகோலியவரும் அவர்தான்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர் ஜான் ரைட்டை கொண்டுவந்து சர்வதேச விளையாட்டுத் தரத்துக்கு நமது வீரர்களைத் தயார்படுத்தும் முறை செளரவ் கங்குலியின் மிகப் பெரிய பங்களிப்பு. இந்திய கிரிக்கெட் அணியை நெறிப்படுத்தியதுபோல, இப்போது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும் முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், செளரவ் கங்குலி பொறுப்பேற்றிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியாவின் குரல் வலுவிழந்து காணப்படுகிறது. அதன் வருவாயில் 70 சதவீதத்தை வழங்கும் இந்தியா, அந்தக் கவுன்சிலின் முக்கியமான முடிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் உரிமைகூட இல்லாத நிலை  காணப்படுகிறது. இந்தச் சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியாவின் பிரதிநிதியாக இருப்பதற்கு செளரவ் கங்குலியைவிடச் சிறப்பான ஒருவர் இருக்க முடியாது.

கிரிக்கெட் வாரியத்தையும், ஆட்சியாளர்களையும் எப்படிச் சமாளிப்பது என்கிற சாதுர்யம் செளரவ் கங்குலிக்கு நிறையவே இருந்திருக்கிறது. கேப்டனாக இருந்தபோது அன்றைய கிரிக்கெட் ஆளுமைகளான சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட் ஆகியோரையும் ஜக்மோகன் டால்மியா போன்ற செல்வாக்கு மிக்க கிரிக்கெட் குழு நிர்வாகிகளையும் சமாளித்தவர் செளரவ் கங்குலி. 113 டெஸ்ட் ஆட்டங்களில் அவர் இடம்பெற்றிருந்தார் என்பதிலிருந்தே அவரது விளையாட்டைப் போலவே அணுகுமுறையும் சாதுர்யமானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

புதிதாக அமைய இருக்கும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்பிருந்ததைவிட அதிகமான அரசியல் சார்புடையதாக இருக்கப் போகிறது. செளரவ் கங்குலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அமைய இருப்பது வரவேற்புக்குரியது என்றாலும், குழு தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் மெச்சும்படியாக இல்லை. 

முதலாவதாக, வாக்கெடுப்பின் மூலம் தலைமைக் குழு தேர்ந்தெடுக்கப்படாமல் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கட்டுப்பாட்டு வாரியத்தைக் கட்டுப்படுத்தும் அதிகார இடைத்தரகர்கள் ஆகியோர் மத்தியில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவு என்பதால், பல சமரசங்களுக்கு உட்பட்டதாகக் குழு அமையக்கூடும்.

கிரிக்கெட் குழுவின் இரண்டு முக்கியமான உறுப்பினர்கள் கிரிக்கெட்டுடன் எந்த விதத்திலும்  தொடர்பில்லாமல், மத்திய அமைச்சர்களுடனான ரத்த உறவுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராகவும், மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாகுரின் சகோதரர் அருண்  சிங் துமல் பொருளாளராகவும் பொறுப்பேற்க உள்ளனர். இந்த நிலையில் முன்பிருந்தது போலவே இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில்தான் தொடர வேண்டும் என்கிற நியதி தொடரப் போகிறது. 

சர்வதேச கோல்ஃப், டென்னிஸ் போல இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அரசியல் தலையீடோ, தொழிலதிபர்களின் தொடர்போ இல்லாமல் இருக்கும் என்கிற நம்பிக்கை தகர்கிறது. லோதா கமிட்டியின் பரிந்துரையும், உச்சநீதிமன்றத்தின் தலையீடும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தத்தான் உதவின என்கிற வேதனையை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

செளரவ் கங்குலி தலைவராக இருக்கப் போவது இன்னும் 10 மாதங்கள் மட்டும்தான். அதிவிரைவாக சிக்சஸரும் பவுண்டரியும் அடித்து, சதம் எடுக்கும் வேகத்தில் அவர் இயங்கினால் மட்டும்தான், தனது தலைமைப் பொறுப்பில் வெற்றி அடைய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com