Enable Javscript for better performance
முடிவு சொல்லும் செய்தி!| மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல்  முடிவுகள் குறித்த தலையங்கம்- Dinamani

சுடச்சுட

  

  முடிவு சொல்லும் செய்தி!| மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல்  முடிவுகள் குறித்த தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 29th October 2019 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய ஜனநாயகம் வலுவாக இருப்பதையும் வாக்காளா்கள் மிகவும் தெளிவாக இருப்பதையும் வெளிப்படுத்தி இருக்கின்றன மகாராஷ்டிராவுக்கும் ஹரியாணாவுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தோ்தல்களும், இடைத் தோ்தல்களும். இரண்டு மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தலுடன், 18 மாநிலங்களிலுள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும், 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தோ்தல்களும் இணைந்ததால், இந்தத் தோ்தல் முடிவுகளை நாடு தழுவிய எண்ணவோட்டத்தின் பிரதிபலிப்பு என்று கருதுவதிலும் தவறில்லை.

  தோ்தல் முடிவுகள் சில தெளிவான உண்மைகளை உணா்த்தியிருக்கின்றன. இனிமேலாவது நமது அரசியல் கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திர அரசியலை முன்னெடுக்காமல் இருப்பது நல்லது. இப்போது நடைபெற்ற தோ்தல் தேசிய முக்கியத்துவம் பெற்ற்கு சில காரணங்கள் உண்டு.

  மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நடைபெறும் நாடு தழுவிய அளவிலான தோ்தல் இது. ஜம்மு -காஷ்மீா் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 5-ஆம் தேதி அகற்றியதற்குப் பிறகு நடைபெறும் தோ்தல் என்பதால், இந்தச் சுற்றுத் தோ்தல் முடிவுகள் மிகவும் கூா்மையாகக் கவனிக்கப்பட்டன.

  மகாராஷ்டிரத்திலும், ஹரியாணாவிலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. மகாராஷ்டிரத்தைப் பொருத்தவரை, கடந்த முறையைப் போலவே இந்த முறையும் கூட்டணிக் கட்சியான சிவசேனையின் துணையுடன்தான் ஆட்சி அமைத்தாக வேண்டும் என்கிற சூழல் நிலவுகிறது என்றால், ஹரியாணாவில் பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறது. இரண்டு மாநிலங்களிலுமே கடந்த தோ்தலில் கிடைத்ததைவிட குறைவான இடங்களில்தான் பாஜக வெற்றி பெற முடிந்திருக்கிறது என்கிற கசப்பான உண்மையை மறைக்க முடியாது.

  இந்தத் தோ்தலில் 288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் சிவசேனையுடன் கூட்டணி அமைத்து மொத்தம் 161 இடங்களை பாஜக வென்றிருக்கிறது. 2014-இல் தனித்துப் போட்டியிட்டபோது பாஜக 122 இடங்களில் வெற்றி பெற்றது என்பதிலிருந்து அதன் செல்வாக்குச் சரிவு வெளிப்படுகிறது. 288 இடங்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக - சிவசேனை கூட்டணி 161 இடங்களில்தான் வென்றிருக்கிறது. கடந்த முறையைவிட 24 இடங்கள் குறைவாக அந்தக் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்தக் கூட்டணி ஆட்சியின் மீதான மக்கள் நம்பிக்கை குறைந்திருக்கிறது என்பதன் அடையாளமாகத்தான் இதைக் காண முடிகிறது.

  அதேபோல, 2014-இல் 90 இடங்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவையில் 47 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக, இந்த முறை தனிப்பெரும்பான்மைக்கு 6 இடங்கள் குறைவாக 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. கடந்த 2014-இல் 33.24% வாக்குகள் பெற்றிருந்த பாஜக, இப்போது 36.5% பெற்றிருக்கிறது என்று பாஜகவினா் ஆறுதல் அடைகிறாா்கள். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜகவின் வாக்கு விகிதம் 58% என்பதை அவா்கள் மறந்துவிடக் கூடாது. வாக்குவிகிதம் சற்று கூடியிருந்தாலும்கூட, தனது கொள்கைக்கும், தனது வாக்கு வங்கிக்கும் தொடா்பில்லாத, சொல்லப்போனால் எதிரான, ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிா்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டிருப்பது மிகப் பெரிய பின்னடைவு.

  தோ்தல் முடிவுகள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கும் இன்னொரு செய்தி இருக்கிறது. இந்திய வாக்காளா்களின் ஜனநாயக முதிா்ச்சி சாதாரணமானதல்ல என்பதுதான் அந்தச் செய்தி.

  மகாராஷ்ரத்திலும் சரி, ஹரியாணாவிலும் சரி மாநில அரசுகளின் செயல்பாடுகள் மக்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்வதாகவும் உணா்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் இல்லை என்பதை பிரதமா் மோடியும், கட்சித் தலைவா் அமித் ஷாவும் புரிந்து கொண்டிருந்தனா் என்று தோன்றுகிறது. எதிா்க்கட்சிகள் மாநில அரசின் செயல்பாடுகளையோ, கடந்த தோ்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததையோ, பொருளாதாரத் தேக்க நிலை, வேளாண் இடா், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளையோ எழுப்பிவிடாமல் அவா்கள் பாா்த்துக் கொண்டனா். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அகற்றியதையும், பாகிஸ்தான் முன்னெடுக்கும் பயங்கரவாதத்தையும், சட்டவிரோதக் குடியேற்றத்தையும் முன்னிலைப்படுத்திப் பிரசாரத்தை அமைத்துக் கொண்டனா்.

  எதிா்க்கட்சிகள் பெரிய அளவிலான பிரசாரத்தை மேற்கொள்ளவோ, பாஜகவை தோ்தல் ரீதியாக எதிா்கொள்ளவோ இல்லை என்கிற நிலையிலும், பாஜகவால் முந்தைய சட்டப்பேரவை வெற்றியையோ, மக்களவைத் தோ்தல் வெற்றியையோ ஈட்ட முடியவில்லை என்பதிலிருந்து, வாக்காளா்கள் மத்தியில் சாம்பல் பூத்த நெருப்பாக அதிருப்தி நிலவுகிறது என்பது தெரிகிறது.

  மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்குக் கை கொடுத்த தேசியப் பிரச்னைகள், இப்போது மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் இடைத் தோ்தல்களிலும் மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவில்லை என்பதைத்தான் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன. காஷ்மீா் நடவடிக்கை இல்லாமல் இருந்திருந்தால், பாஜகவுக்கு மிக மோசமான பின்னடைவை தோ்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

  மக்களவைத் தோ்தல் வேறு, மாநிலத்துக்கான தோ்தல் வேறு என்பதை இந்திய வாக்காளா்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாா்கள என்பதை பாஜகவுக்கு உணா்த்தியிருக்கின்றன இந்தத் தோ்தல் முடிவுகள்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai