Enable Javscript for better performance
பாஜக எதிர்கொள்ளும் சவால்!- Dinamani

சுடச்சுட

  

  பாஜக எதிர்கொள்ளும் சவால்! | கோஷ்டி அரசியலை பா.ஜ.க. எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது குறித்த அலசல் தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 05th September 2019 02:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள ஆளுநராக ஆரீப் முகமது கான் நியமிக்கப்பட்டிருப்பது பாஜகவுக்கு உள்ளேயும் வெளியேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸிலிருந்து ஜனதா தளம், ஜனதா தளத்திலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து தற்போது பாஜகவில் சங்கமமானவர் ஆரீப் முகமது கான். அவருக்கு ஆளுநர் பதவி வழங்கியிருப்பதன் மூலம் இரண்டு செய்திகளை பாஜகவின் தலைவரான உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவிக்கிறார். பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் சங்கமிப்பவர்களுக்குப் பதவி வாய்ப்புகள் வழங்கப்படும் என்பது முதலாவது செய்தி. தங்களது கொள்கை ரீதியான முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் சிறுபான்மையினருக்கு பாஜகவின் கதவுகள் திறந்திருக்கின்றன என்பது இரண்டாவது செய்தி. 
  பிற கட்சிகளிலிருந்து பாஜகவுக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பி.-க்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. பாஜகவால் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக 2013-இல் அறிவிக்கப்பட்டபோது, அவர் கட்சித் தலைவர்களுக்கு விடுத்த செய்தியை நினைவு கூர்ந்தால் இதன் பின்னணியை உணரலாம். 
  அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியில் இருக்கும்போது அடிக்கடி இன்னின்னார் பாஜகவில் சேர்ந்தார்கள் என்கிற அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் அப்படி யாரும் சேர்ந்ததாக நான் கேள்விப்படவில்லை என்று பாஜக தலைமையகத்தில் நடந்த முக்கியமான கட்சித் தலைவர்களிடம் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி அப்போது தெரிவித்தார். 
  அதைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகப் பிரமுகர்களும், முன்னாள் அரசு உயர் அதிகாரிகளும், கவிஞர்களும், பத்திரிகையாளர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் வரிசை கட்டி பாஜகவில் இணைந்தனர். 2013-இல் நரேந்திர மோடி எடுத்த அந்த முடிவு, 2014, 2019 மக்களவைத் தேர்தல்களிலும், அதற்குப் பிறகும்கூட பாஜகவின் அரசியல் வியூகமாகத் தொடர்கிறது. 
  இந்த முறை பதவிக்கு வந்த கடந்த மூன்று மாதங்களில், தனது செல்வாக்கை விரிவாக்கம் செய்ய விரும்பும் மாநிலங்களில் எல்லாம் இலக்கு நிர்ணயித்து பிற கட்சிகளிலிருந்து பலரும் பாஜகவுக்கு ஈர்க்கப்படுகின்றனர். மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஹரியாணா, ஆந்திரம், தெலங்கானா, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் சங்கமித்திருக்கிறார்கள்.  
  சட்டப்பேரவை உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் என்று அதிக அளவில் கோவாவிலும், விரைவில் தேர்தல் நடக்க இருக்கும் மகாராஷ்டிரத்திலும் பாஜகவில் இணைகிறார்கள். தெலங்கானா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றக் குழு இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது.
  கடந்த மாதம் சிக்கிமில் நடந்த கட்சித்தாவல்தான் சற்றும் எதிர்பாராதது. சிக்கிம் ஜனநாயகக் கட்சியின் 13 உறுப்பினர்களில் 10 பேர் பாஜகவில் இணைந்தனர். இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலுமே பாஜக பலமாக காலூன்றியிருக்கிறது. மேகாலயத்திலும், மிஜோரத்திலும் கட்சி வலிமையாக இல்லாமல் போனாலும், பாஜக தலைமையிலான வடகிழக்கு மாநில ஜனநாயகக் கூட்டணிதான் அங்கே ஆட்சியில் இருக்கிறது. 
  கர்நாடகத்திலும், அருணாசலப் பிரதேசத்திலும் இதேபோல வேறு கட்சிகளிலிருந்து உறுப்பினர்களை பாஜகவுக்கு இழுத்து ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. கோவாவில் கட்சித்தாவல் மூலம் 27 உறுப்பினர்களுடன் பாஜக பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 
  கர்நாடகத்திலும் கோவாவிலும் நடந்திருக்கும் கட்சித்தாவலுக்கு பாஜகவை மட்டுமே குற்றம்சாட்டுவதில் அர்த்தமில்லை. கடுமையான போட்டிக்கு இடையே தேர்தலில் வெற்றி பெற்ற ஓராண்டுக்குள், தங்களது எம்.எல்.ஏ. பதவியை தூக்கி எறிந்துவிட்டு பாஜகவில் இணைகிறார்கள் என்றால், காங்கிரஸ் கட்சி எந்தளவுக்கு தனது மரியாதையையும், பலத்தையும் இழந்திருக்கிறது என்பதை அது எடுத்துரைக்கிறது.
  பிற கட்சியிலிருந்து உறுப்பினர்களை இழுப்பதும், செல்வாக்குள்ள ஆளுமைகளை கட்சியில் சேர்த்துக் கொள்வதும் ஒருவகையான அரசியல் ராஜதந்திரம். இதன் மூலம் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், கட்சி வளர்கிறது என்கிற நம்பிக்கையையும் பாஜக அளிக்கிறது. கட்சி தன்னுடைய உச்சகட்டத்தை எட்டவில்லை என்றும், அரசியல் எதிரிகளுக்கும்கூட பாஜகவில் இணைவதுதான் இலக்காக இருக்கிறது என்பதும் பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இதன் மூலம் பாஜக தெரிவிக்கிறது. 
  பாஜகவின் இந்த வியூகத்தில் சில சிக்கல்கள் எழக்கூடும். நீண்ட நாள்களாக ஆர்.எஸ்.எஸ். பின்னணியுடன் கொள்கை அடிப்படையில் இருப்பவர்கள் பாஜக தொண்டர்கள். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அதிக அளவில் இணைவதையும், பாஜக அரசில் முக்கியமான பதவிகளைப் பெறுவதையும் எந்த அளவுக்கு எத்தனை நாள் அவர்கள் சகித்துக் கொண்டிருப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 
  மோடி - அமித் ஷா தலைமையில் பாஜக வலிமையான கட்டுக்கோப்பான கட்சியாக உருவாகியிருக்கிறது. அதிக அளவில் காங்கிரஸ்காரர்களும், மாநில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணையும்போது அவர்கள் தங்களுக்குப் பழக்கமான கோஷ்டி அரசியலையும் கொண்டுவரக் கூடும். இதை பாஜக தலைமை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? 
  கொள்கை அடிப்படையிலான ரசாயன வளர்ச்சியாக இல்லாமல், கட்சித்தாவல்கள் மூலம் ஏற்படும் வளர்ச்சியை எதிர்கொள்வதுதான் ஆட்சி நிர்வாகத்தைவிட பாஜக தலைமை எதிர்கொள்ள இருக்கும் மிகப் பெரிய சவால்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai