சிறுபிள்ளைத்தனம்!

கொள்கை அடிப்படையிலான அரசியல் கைவிடப்பட்டு, தனிநபர் சார்ந்த

கொள்கை அடிப்படையிலான அரசியல் கைவிடப்பட்டு, தனிநபர் சார்ந்த அரசியல் முன்னெடுக்கப்படும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் வரவேற்புக்குரியதாக இருக்காது. கருணாநிதி - ஜெயலலிதா காலகட்டங்களில் இந்தப் போக்கு தமிழகத்தில் காணப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், ஹிமாசலப் பிரதேசம் என்று தனிநபர் சார்ந்த அரசியல்  தலைதூக்கிய மாநிலங்களில்கூட இதே தவறான அணுகுமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், இப்போது ஆந்திரத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை திடுக்கிட வைக்கிறது. 
கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 175 இடங்களில் 151 இடங்களை வென்று 46 வயது ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. மக்களின் பேராதரவுடன் இளைஞரான ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தபோது, அரசியல் முதிர்ச்சியுடன் ஆந்திரத்தை வழிநடத்துவார் என்று எழுந்த எதிர்பார்ப்பு இப்போது பொய்த்திருக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆந்திரத்தில் கடந்த மூன்று மாதங்களில் எடுத்திருக்கும் தடாலடி முடிவுகள் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் எந்த ஓர் அரசும் முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளையும், செயல்பாடுகளையும் மறுபரிசீலனை செய்வதில் தவறுகாண முடியாது. முந்தைய ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாததால்தான் ஆட்சி அகற்றப்பட்டது என்கிற அடிப்படையில் தவறான முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்படுவது அவசியமும்கூட. அதற்காக, முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறை. ஜெகன்மோகன் ரெட்டி அரசு சமீபத்தில் எடுத்திருக்கும் முடிவுகள் நிர்வாக ரீதியாகவும், பொருளாதார அடிப்படையிலும் ஆந்திரத்துக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 
போலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. திட்டம் ஸ்தம்பித்து விட்டது. நல்லவேளையாக உயர்நீதிமன்றத் தலையீடு அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு மின்சாரம் வாங்குவதற்காக செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ஜெகன்மோகன் ரெட்டி அரசு நிராகரித்திருக்கிறது. கையொப்பமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவது  என்பது வியப்பளிக்கிறது. மின் உற்பத்தியாளர்களுக்கு வங்கிகள் ரூ.40,000 கோடி அளவில் கடன் அளித்திருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் நிராகரிக்கப்பட்டால், அவை வாராக்கடனாக மாறி, வங்கித் துறையின் சுமையை மேலும் அதிகரிக்கும். 
மச்சிலிப்பட்டனம் துறைமுகத் திட்டத்திற்கு முந்தைய தெலுங்கு தேசம் அரசு  400 ஏக்கர் இடமும் ஒதுக்கி, ரூ.18,000 கோடி அளவிலான ஒப்பந்தமும் செய்திருந்தது. இந்தத் திட்டம் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பிளவுபடாத ஆந்திரத்தின் முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. ஆனால், திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் முந்தைய தெலுங்கு தேசம் அரசால் வழங்கப்பட்டன. இப்போது ஒதுக்கப்பட்ட நிலத்தையும், துறைமுகத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தையும் ரத்து செய்து அறிவித்திருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
ஆந்திரத்திற்கான புதிய தலைநகரமாக அமராவதி அறிவிக்கப்பட்டு அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள்  மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தலைநகரம் மாற்றப்படக்கூடும் என்கிற கருத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் போட்சா சத்தியநாராயணா வெளியிட்டதிலிருந்து அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தின் செல்வாக்குக் கேந்திரமான கடப்பாவில் ஆந்திரத்தின் புதிய தலைநகர் அமையக்கூடும் என்கிற வதந்தி உலவுகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து செய்வதறியாது தெருவில் நிற்கிறார்கள். 
இப்போது அமராவதியிலுள்ள தலைமைச் செயலகத்தை குண்டூருக்கு மாற்றுவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. புதிய தலைமைச் செயலக கட்டட கட்டுமானத்துக்காக ரூ.200 கோடிக்கும் அதிகமாக அமராவதியில் செலவிடப்பட்டிருக்கிறது. 2,500-க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் ஹைதராபாதிலிருந்து அமராவதிக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். தலைமைச் செயலகம் மாற்றப்பட்டால் அவர்கள் மீண்டும் பெட்டி,  படுக்கை, குடும்பத்துடன் இடம்பெயர்ந்தாக வேண்டும்.
திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்பது மட்டுமல்ல, வெறித்தனமான பெயர் மாற்ற நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறது ஜெகன்மோகன் ரெட்டி அரசு. கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் எல்லா திட்டங்களுக்கும் என்.டி. ராமாராவின் பெயர் சூட்டப்பட்டது என்றால், இப்போது அந்தத் திட்டங்கள் எல்லாம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயருக்கு மாற்றப்படுகின்றன. என்.டி.ஆர். வைத்திய சேவா இப்போது ஒய்.எஸ்.ஆர். ஆரோக்கிய ஸ்ரீ என்று மாறியிருக்கிறது. இதேபோலத்தான் ஏனைய திட்டங்களின் பெயர்களும்.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவது என்பது பொருளாதார ரீதியாக மாநிலத்தை மிகவும் பாதிக்கும். நிலையான கொள்கைகள் அரசுக்கு இல்லை என்றால், தொழில் துறையினரும், வர்த்தகத் துறையினரும் துணிந்து முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஒப்பந்தங்கள் ரத்தாகும் என்றால், மாநிலத்தில் நீண்டகால முதலீடு செய்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். 
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அணுகுமுறை அவரது கட்சிக்கு மட்டுமல்ல, ஆந்திரத்தின் வளர்ச்சிக்கும் வருங்காலத்துக்கும் நல்லதல்ல.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com