சுடச்சுட

  

  இரண்டாவது முறையாக நரேந்திர மோடி அரசு பதவியேற்று நூறு நாள்களைக் கடந்திருக்கிறது. மக்களின் பேராதரவுடன் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் அரசு, நூறு நாள்களைக் கடந்திருக்கிறது என்பதை சாதனையாகக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. நூறு நாள்களில் மிகப் பெரிய சாதனைகளை எந்த ஓர் அரசாலும் நிகழ்த்திவிட முடியாது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். 
  2014-இல் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அந்த ஆட்சியின் முதல் நூறு நாள்களைப்போல, இந்த முறையின் நூறு நாள் செயல்பாடுகளை ஒப்பிடக்கூடாது. கடந்த ஆட்சியின் நீட்சியாகத்தான் இந்த நூறு நாள்களைக் கருத வேண்டுமென்பதால், செயல்பாடற்ற நூறு நாள்களாக இவை இருந்துவிட முடியாது. 
  பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படைக் கொள்கைகள் தொடர்புடைய பிரச்னைகளில் நரேந்திர மோடி அரசின் கடந்த நூறு நாள் செயல்பாட்டில் வேகமும், அழுத்தமும் அதிகமாகவே காணப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்காளர்கள் தனிப் பெரும்பான்மை வழங்கி அங்கீகரித்திருப்பதாலோ என்னவோ, இரண்டாவது முறை ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, கொள்கை ரீதியான முடிவுகளை நிறைவேற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிரம் செலுத்துகிறார்கள்.
  வலிமையான அரசை வழங்குவோம் என்கிற தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு கடந்த நூறு நாள்களில் அரசு  முன்னுரிமை வழங்கியிருப்பது தெரிகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 370-ஐ அகற்றியிருப்பது நூறு நாள்களில் எடுக்கப்பட்ட அதிமுக்கியமான முடிவுகளில் ஒன்று. சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் அரசின் முடிவுக்கு கவலைப்படும்படியான அளவில் எதிர்ப்புகள் இருக்கவில்லை என்றாலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சகஜநிலை திரும்பிவிடவில்லை என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அரசின் முடிவுக்கு முன்னாலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சகஜநிலை இருக்கவில்லை என்றாலும், அரசின் முடிவால் அந்த நிலைமை மாறிவிடவில்லை. 
  பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றிக்கும், செல்வாக்குக்கும் மிக முக்கியமான காரணமாக கூறப்படுவது அரசின் மக்கள் நலத் திட்டங்கள். அனைவருக்கும் மின்சாரம் என்கிற செளபாக்கியா திட்டமும், எல்லோருக்கும் சமையல் எரிவாயு என்கிற உஜ்வாலா திட்டமும், கிராமப்புற வீடுகள் திட்டமும், தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் கழிப்பறைகள் கட்டும் திட்டமும் மிகப் பெரிய அளவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடித்தட்டு மக்களின் ஆதரவைத் தேடித் தந்திருப்பதாக எல்லா ஆய்வுகளுமே குறிப்பிடுகின்றன. 
  அரசின் ஆயுஷ்மான் பாரத் என்கிற அனைவருக்குமான மருத்துவக் காப்பீடும், விவசாயிகளுக்கு நேரடியாக வருமானம் வழங்கும் திட்டமும் தேர்தலில் வாக்குகளை அள்ள உதவியிருக்கின்றன. கடந்த முறை அனைவருக்கும் மின்சாரம், அனைவருக்கும் சமையல் எரிவாயு போன்ற திட்டங்களை முன்வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த முறை நீர் சேமிப்புக்கு தேசிய அளவில் முன்னுரிமை அளிப்பதற்கும், அனைவருக்கும் குழாய்கள் மூலம் குடிதண்ணீர் வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்போவதாக உறுதியளித்திருக்கிறார். மக்கள் நலத் திட்டங்களின் மூலம் அரசு தனது பலவீனங்களை எல்லாம் சமன் செய்து செல்வாக்கு சரிந்துவிடாமல் காப்பாற்றிக் கொள்கிறது. 
  இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும் நரேந்திர மோடி அரசு எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், பொருளாதாரம் சார்ந்தது. அரசு எதிர்பார்த்த அளவிலான ஜிடிபி வளர்ச்சி இல்லாமல் இருப்பதும், 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதும், நுகர்வோர் தேவை குறைந்து காணப்படுவதும் அரசு எதிர்கொள்ளும் சவால்கள். 
  பிரதமர் விரும்புவதுபோல, இந்தியா ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக 2024-லில் மாற வேண்டுமானால், இந்தியாவின் வருடாந்திர வளர்ச்சி 8% இருக்க வேண்டும். கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5% மட்டுமே. அது பட்ஜெட் எதிர்பார்ப்பைவிடக் குறைந்திருக்கும் நிலையில், 8% வளர்ச்சி என்பது அசாத்தியமானதாகத் தெரிகிறது. 
  மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய், ஜூலை மாதத்தைவிட குறைந்து ரூ.98 ஆயிரம் கோடியைத்தான் எட்டியிருக்கிறது. இதற்கிடையில் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக நிதியமைச்சர் பல சலுகைகளை அறிவித்திருக்கிறார். அவற்றால் ஏற்படப்போகும் இழப்புகளை எப்படி அரசு எதிர்கொள்ளப் போகிறது என்கிற கேள்வியும் எழுகிறது. 
  பாஜகவின் தேர்தல் அறிக்கை, 2024-க்குள் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும் என்றும், விவசாயிகளின் வருவாய் 2022-க்குள் இரட்டிப்பாக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது. இவையெல்லாம் எப்படி சாத்தியமாகப் போகின்றன? 
  செலவினங்களைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்கும் முறைதான் இன்றைய சூழலில் நரேந்திர மோடி அரசு கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை. இதேபோன்ற ஒரு சூழல்தான் 1971-இல் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் இந்திரா காந்தி ஆட்சி அமைத்த நூறாவது நாளில் காணப்பட்டது. அவரால் பொருளாதாரத்தை சரியாகக் கையாள முடியவில்லை. அவரது அரசு செல்வாக்கை இழந்தது. 
  பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பொருளாதாரத்தை எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொருத்து அதன் அடுத்தகட்ட வெற்றி - தோல்வி அமையும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai