பாலையாக மாறும் பூமி!

உலக அளவில் பூமி தனது உயிர்ப்பை இழந்து வருகிறது. பாலைவனமாக மண்

உலக அளவில் பூமி தனது உயிர்ப்பை இழந்து வருகிறது. பாலைவனமாக மண் மாறிக்கொண்டு வருகிறது.  உலகம் பாலைவனமாதலைத் தடுப்பது குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. சபையில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பில் ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்த அமைப்பின் 14-ஆவது மாநாடு தில்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் அண்மையில் கூடியது.
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற அந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் நரேந்திர மோடி, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தரிசு நிலங்களை வளப்படுத்தும் தனது இலக்கை எட்டும் என்று அறிவித்திருக்கிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான இரண்டாண்டுகளில் இந்தியாவின் வனப்பரப்பு 80 லட்சம் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இப்போது 
இந்தியாவில் தரிசாகக் கிடந்து மீட்டெடுக்கப்பட்டு வளப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்களின் பரப்பளவு 2.18 கோடி ஹெக்டேராக இருப்பதாகவும், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் அதை 2.60 கோடி ஹெக்டேராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஆய்வு ஒன்றை இஸ்ரோ நடத்தியிருக்கிறது. பாலைவனமாதல், நிலம் தரிசாக மாறுதல் குறித்த வரைபடம் ஒன்றை செயற்கைக்கோள் உதவியுடன் இஸ்ரோ தயாரித்திருக்கிறது. அதன்படி, இந்தியாவிலுள்ள மொத்த நிலப்பரப்பில் 30% அளவில் தரிசாக இருப்பதாகத் தெரிகிறது. நிலம் தரிசாக மாறுவதைத் தடுப்பதும், அவற்றை மீண்டும் வளப்படுத்துவதும் எளிதல்ல. அதற்கு அடிப்படையில் நீர் மேலாண்மை, பல்லுயிர்ப் பெருக்கம், மண் வளம் அதிகரித்தல் என்று மூன்று விதமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. 
பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து விவசாயம் செய்யப்பட்டு வருவதால் மண் தனது உயிர்ப்புச் சத்தை இழந்துவிட்டிருக்கிறது. அதை ஈடுகட்ட அதிக அளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டதால் இந்தியாவின் விளைநிலங்களில் மலட்டுத்தன்மை ஏற்பட்டிருக்கிறது என்கிற கூற்றை மறுப்பதற்கில்லை.
கடல் மட்டம் அதிகரித்தல், கடல் சீற்றம், பருவநிலை மாற்றத்தால் சீரற்ற மழைப் பொழிவு, புயல் - சூறாவளிகளால் ஏற்படுத்தப்படும் அழிவுகள், வறட்சி காரணமாக உருவாகும் புழுதிப் புயல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மண் வளம் பாதிப்பதற்கான காரணங்கள். தரிசு நிலங்களை வளப்படுத்துதல் என்று திட்டமிடும்போது, போதிய பாசன வசதி அத்தியாவசியமாகிறது. 
ஏற்கெனவே இந்தியாவின் பல்வேறு பகுதிகள், கோடையில் காணப்படும் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன. நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்வது, மழை நீர் வீணாவதைத் தடுப்பது, மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பது என மண் வளத்துடன் நீர் வளத்தையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. 
சூழலியலை பெரிய அணைகள் பாதிக்கின்றன என்பதால் தடுப்பணைகள் மூலம் மட்டுமே நதிநீரை சேமிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிகமான தடுப்பணைகள் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதுடன் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்து மண் வளத்தையும், நீர் வளத்தையும் மேம்படுத்தும். 
வனப்பரப்பை அதிகரிக்கச் செய்வது என்பது, நிலம் பாலைவனமாகாமல் தடுக்கும் முயற்சியில் மிக முக்கியமான கூறு. விண்வெளி தொழில்நுட்பமும், தொலையுணர்வு தொழில்நுட்பமும் வனப்பரப்பை கச்சிதமாகக் கணித்து தெரிந்துகொள்வதற்கு வழிகோலுகின்றன. அதில், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது. 
இஸ்ரோவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் வனப்பரப்பின் அளவு ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதமர் அந்த மாநாட்டில் தெரிவித்திருப்பதுபோல, ஏனைய நாடுகளுக்கும் நமது செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் வனப் பரப்பைக் கணக்கிட இந்தியாவால் வழிகாட்ட முடியும். 
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய வனங்கள் ஆய்வு மையம் (ஃபாரஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா) என்கிற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் வனப் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபுறம் காடுகள் அழிக்கப்படுவதும், வளர்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் வனப் பரப்பு ஆக்கிரமிக்கப்படுவதும் நடந்து கொண்டிருந்தும்கூட இந்திய வனங்கள் ஆய்வு மையத்தின் அறிக்கையில், வனப் பரப்பு அதிகரித்து வருவதாகக் கூறுவது முரணாகத் தெரிகிறது. 
அந்த ஆய்வு மையம் செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் வனப்பரப்பை நிர்ணயிப்பதில்தான் தவறு நேர்கிறது. செயற்கைக்கோள் படங்கள் இயற்கை வனங்களுக்கும், தோட்டப் பகுதிகளுக்கும், சாலையோர மரங்களுக்கும் வேறுபாடுகளைக் காட்டுவதில்லை. அதனால், அந்த ஆய்வின் அடிப்படையில் வனப்பரப்பை நிர்ணயிக்க முடியாது.
நிலம் தரிசாக மாறுவதைத் தடுக்க வேண்டுமானால், இயற்கை வனப் பகுதிகளில் எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளையும் அனுமதிக்கக் கூடாது. நீர் மேலாண்மைக்கும், இயற்கை விவசாயத்திற்கும் ஊக்கமளித்து, தரிசு நிலங்களில் இஸ்ரேல் போன்ற நாட்டின் உதவியுடன் சொட்டு நீர்ப்பாசன விவசாயத்திற்கு ஊக்கமளிப்பது, பிரதமர் நிர்ணயித்திருக்கும் இலக்கை இந்தியா எட்டுவதற்கு வழிகோலும். 
தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதன் மூலம், இந்தியாவின் 60% மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும். அந்த இலக்கை நோக்கிய நமது பயணம் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com