புதை குழியில் பிஎஸ்என்எல்...| மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் வீழ்ச்சிக்கான காரணம் குறித்த தலையங்கம்

மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் அரசு நிறுவனமான


மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ மீட்டெடுக்க நிதியுதவி அளிக்கும் திட்டமொன்றை கொண்டுவர இருப்பதாக, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்திருக்கிறார். நிதியுதவி அளிப்பதாலோ வேறுவிதத்திலான சலுகைகளாலோ நாளும்பொழுதும் புதை குழிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் பிஎஸ்என்எல்-ஐ காப்பாற்றிவிட முடியும் என்று தோன்றவில்லை. 
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வீழ்ச்சிக்கு அந்த நிறுவனத்தின் நிர்வாகமும் ஊழியர்களும்தான் காரணம் என்று குற்றம்சாட்டினால் தொழிற்சங்கங்கள் அதை எதிர்த்து பல வாதங்களை முன்வைக்கக் கூடும். உண்மையை உரக்கச் சொல்லவும், எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவும் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் தயாராக இல்லை. 
உலகமயமாதல், பொருளாதாரச் சீர்திருத்தம், தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகள் மட்டுமே பிஎஸ்என்எல்-இன் வீழ்ச்சிக்குக் காரணமல்ல. தனியார் துறையினருடன் போட்டியிட்டுத் 
தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு சிறிதும் இல்லாமல், அரசு ஊழியர் மனப்பான்மையுடன் அந்த நிறுவனம் செயல்பட்டதுதான் அதன் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம். அதற்காக இந்திய மக்கள் கொடுத்த விலை மிக மிக அதிகம். நமது வரிப் பணத்தில் பிஎஸ்என்எல்-இன் மெத்தனமான செயல்பாட்டை இத்தனை காலம் மக்கள் சகித்துக் கொண்டிருந்தனர் என்பதுதான் நிஜம். 
தனியார்மயக் கொள்கை அறிவிக்கப்பட்டு, பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செயல்படத் துவங்கியபோது அவை எதுவும் பிஎஸ்என்எல் அளவிலான தேசம் தழுவிய தொடர்பு வலைப் பின்னலை (நெட்வொர்க் கனெக்ட்டிவிட்டி) கொண்டிருக்கவில்லை. பிஎஸ்என்எல்-இன் உதவியுடன்தான் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தன. அப்போதே தொழிற்சங்கங்கள் விழித்துக்கொண்டு, அதிக ஊதியமும் பணி நிரந்தரமும் கொண்ட பிஎஸ்என்எல் ஊழியர்களை எச்சரித்து, ஊக்குவித்து தனியார் நிறுவனங்களைவிட சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வலியுறுத்தியிருந்தால், இன்று பிஎஸ்என்எல் இந்த அளவிலான வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. 
பிஎஸ்என்எல் ஊழியர்களில் பலர் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ரகசிய உடந்தையாக இருந்தனர் என்பது ஊரறிந்த ரகசியம். பிஎஸ்என்எல்-இல் பணியாற்றிய பலர் விருப்ப ஓய்வு பெற்று தனியார் நிறுவனங்களின் ஆலோசகர்களாகவும் அதிகாரிகளாகவும் இணைந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். அந்தத் துரோகத்தின் விலையைத்தான் இப்போது பிஎஸ்என்எல் எதிர்கொள்கிறது. 
4ஜி அலைக்கற்றை தங்களுக்குக் கிடைக்காததும், கடுமையான கட்டணப் போட்டி நிலவுவதும்தான் நிதி நெருக்கடிக்கு காரணம் என்று பிஎஸ்என்எல் கூறுவதில் அர்த்தமும் இல்லை, நியாயமும் இல்லை. ஏற்கெனவே 4ஜி அலைக்கற்றை கிடைத்த நிறுவனங்களே போட்டியில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில், பிஎஸ்என்எல் தாக்குப்பிடித்திருக்கும் என்று தோன்றவில்லை. 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு இல்லாதது அதன் செயல்பாடுகளை ஓரளவுக்குப் பாதித்திருக்கிறது என்றாலும், 2ஜி, 3ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம்  மற்ற நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாத பிஎஸ்என்எல், 4ஜி ஒதுக்கீடு கிடைப்பதால் மட்டும் தன்னை நிலைநாட்டிக்கொள்ள முடியும் என்பது வெறும் பேராசை மட்டுமே. 
பிஎஸ்என்எல் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை அளவுக்கு அதிகமான ஊழியர்களும் மிக அதிக அளவிலான ஊதியச் செலவினமும். ஏறத்தாழ 1,80,000 ஊழியர்களைக் கொண்ட பிஎஸ்என்எல்-இன் 2018-19 வருவாயில் 75 சதவீதம் ஊதியத்துக்காக மட்டுமே சென்றுவிடுகிறது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஊதியச் செலவு இதில் மிக மிகக் குறைந்த அளவில்தான் காணப்படுகிறது.  பிஎஸ்என்எல்-இன் மொத்த இழப்பு 2018-19 நிதியாண்டின் நிலவரப்படி, ரூ.14,202 கோடியாக அதிகரித்திருக்கிறது.  இந்த நிலையில், பிஎஸ்என்எல்-ஐ எத்தனை காலம்தான் இப்படியே நடத்திச் செல்வது என்கிற கேள்வியை பொதுமக்கள் எழுப்பத் தொடங்கியிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. 
பிஎஸ்என்எல்-இன் ஊழியர்களில் 60,000 முதல் 70,000 பேர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் குறைக்கலாம் என்று அந்த நிறுவனம் திட்டமிடுகிறது. அப்படியே அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றாலும்கூட ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் இருப்பார்கள். பிஎஸ்என்எல்-இன் அசையாச் சொத்துகள் நாடெங்கும் இருக்கின்றன. அவற்றில் தேவையில்லாத இடங்களை விற்பனை செய்வதன் மூலம் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கான இழப்பை ஈடுகட்டலாம் என்று அந்த நிறுவனம் கருதுகிறது. அதனால் மட்டுமே பிரச்னை தீர்ந்துவிடப் போவதில்லை என்பதுதான் நிஜ நிலவரம். 
இந்தியாவில் தனியார்மயம் அறிமுகப்படுத்தப்பட்டதன் அடிப்படை நோக்கம், நமது பொதுத் துறை நிறுவனங்களில் ஏற்பட்டிருந்த மெத்தனமும் அரசு ஊழியர் மனப்பான்மையும் அகன்று, அவை தனியார் துறையினருடன் போட்டி போடுவதன் மூலம் தங்களது செயல்பாட்டை மேம்படுத்தும் என்பதுதான். எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் கெட்டி தட்டிப்போய் அசைந்து கொடுக்கவில்லை. அதன் விளைவை அவை எதிர்கொள்கின்றன. அந்தப் பலவீனத்தை தனியார் துறையினர் பயன்படுத்திக்கொண்டு தங்களை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டார்கள். பிஎஸ்என்எல்-தான் அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com