மூதறிஞரின் மூதுரை!| தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்த தலையங்கம்

பொறுப்பான பதவி வகிப்பவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது மிகவும்

பொறுப்பான பதவி வகிப்பவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 
உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்று அரசியலை அரிச்சுவடிப் பாடத்திலிருந்து கற்றுத் தேர்ந்தவர்கள், தேவையில்லாத விவாதங்களில் சிக்கிக் கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. 
அமித் ஷாவின் ஹிந்தி குறித்த கருத்து விவாதப் பொருளானதைத் தொடர்ந்து அவர் அளித்திருக்கும் விளக்கத்தால், தற்காலிக முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறதே தவிர, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டதாகக் கூறிவிட முடியாது. இதுபோல, ஹிந்தி பிரச்னை பல முறை எழுப்பப்பட்டு, அதற்கெதிராகப் போராட்டங்கள் நடந்து, அடங்கியதுண்டு.
உள்துறை அமைச்சர்களாக இருப்பவர்கள் ஹிந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், ஹிந்தியை வளர்ப்பது குறித்தும், அதன் அருமை பெருமை, இன்றியமையாமை குறித்தும் சம்பிரதாயமாகப் பேசுவது வழக்கம். கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி ஹிந்தி தினம் கொண்டாட்டத்தில் பங்கு பெற்றபோது, இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால்தான் முடியும் என்றும், சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக ஹிந்தி மொழி மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததுதான் சர்ச்சைக்குக் காரணம். தான் எப்போதுமே ஹிந்தியைத் திணிக்க நினைத்ததில்லை என்றும், குழந்தை தனது தாய்மொழியில் கற்கும்போதுதான் அதன் மூளை வளர்ச்சியும் செயல்பாடும் முறையாக இருக்கும் என்றும் அவர் இப்போது தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். பிராந்திய மொழிகள் அழிந்துவிடாமல் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியிருப்பதால், சர்ச்சைக்கு இப்போதைக்குத் திரை விழுந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியைப் போலல்லாமல், பாரதிய ஜனதா  கட்சி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம்  என்கிற கொள்கையைக் கொண்டிருப்பதால்தான் ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து அச்சத்தையும், கண்டனத்தையும் எழுப்பி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் டி.கே. ரங்கராஜன் கூறுவதுபோல, இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகக்கூட உள்துறை அமைச்சர் ஹிந்தி பிரச்னையை எழுப்பி இருக்கக்கூடும். 
இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி ஹிந்தி என்பது தவறு. மிக அதிகமானோர் பேசும் மொழி அது, அவ்வளவே. இந்தியாவில் 44% மக்கள்தான் ஹிந்தி பேசுகிறார்கள். அவர்களிலும் 40% பேர், ஹிந்தியைப் போல உள்ள போஜ்புரி, ராஜஸ்தானி, ஹரியாண்வி, மைதிலி உள்ளிட்ட மொழிகளைப் பேசுகிறார்கள். அதாவது, இந்திய மக்கள்தொகையில் 25% மக்கள்தான் ஹிந்தி பேசுபவர்கள். 
வங்காளம் (8%), மராத்தி (6.9%), தெலுங்கு (6.7%), தமிழ் (5.7%) உள்ளிட்ட பல மொழிகள் ஹிந்தியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மொழிகள். அவர்கள் தங்களது தாய்மொழியைக் கைவிட்டு ஹிந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவது, தேன்கூட்டில் கை வைக்கும் முயற்சியாகத்தான் இருக்கும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியும், காங்கிரஸ் கட்சியும் முனைப்புக் காட்டியதற்குக் காரணம் இருந்தது. இந்தியா சமஸ்தானங்களாகவும், பிரிட்டிஷ் காலனியின் ஆட்சியிலிருந்த பகுதிகளாகவும் பிரிந்து கிடந்தது. ஆங்கிலேயர்களிடமிருந்து நம்மைப் பிரித்து அடையாளம் காட்ட, அவர்களது மொழியின் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. நமக்கென்று அடையாளம் தேவைப்பட்டது.
1937-இல் அடிமை இந்தியாவில், அன்றைய சென்னை ராஜதானியின் பிரதமராக மூதறிஞர் ராஜாஜி இருந்தபோது, ஹிந்தியைக் கட்டாயமாக்கினார். பெரிய போராட்டம் எழுந்தது. 1964-இல் விடுதலை இந்தியாவில், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு, ஹிந்தியைக் கட்டாயமாக்கியது. மீண்டும் போராட்டம் எழுந்தது. அப்போது, ஹிந்தி கூடாது, ஆங்கிலம் இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும் என்று ராஜாஜி வற்புறுத்தினார். அதற்கு அவர் தந்த விளக்கம் இது :-
இரவு நேரத்தில் தாய் தனது குழந்தையைத் தூங்கச் சொல்கிறாள். காலையில் எழுந்திருக்கச் சொல்கிறாள். இரவில் தூங்கச் சொன்ன நீ இப்போது எழுப்புகிறாயே என்று அந்தக் குழந்தை கேட்பதைப்போல இருக்கிறது, நான் இப்போது ஏன் ஹிந்தியை எதிர்க்கிறேன், ஆங்கிலத்தை ஆதரிக்கிறேன் என்கிற கேள்வி. அடிமை இந்தியாவில், பிரிந்து கிடந்த இந்தியர்களை இணைக்கவும், அந்நிய மொழியான ஆங்கிலத்தின் பிடியில் சிக்கி நமது இந்திய மொழிகளும், கலாசாரமும் அழிந்துவிடாமல் காப்பதற்காகவும் ஹிந்தி படிக்கச் சொன்னேன். இப்போது, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநில மொழிகளைப் பேண வேண்டிய கட்டாயம் சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஹிந்தி இனிமேலும் தேவையில்லை!
ஹிந்தி உள்பட இந்திய மொழிகள் அனைத்துமே சிதைந்து கொண்டிருக்கின்றன, அழிந்து கொண்டிருக்கின்றன. தாய்மொழியில் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரியாத தலைமுறை உருவாகி வருகிறது. இதைப் பற்றிக் கவலைப்படாமல், மொழிப் பிரச்னையை எழுப்புவது, தவறான அணுகுமுறை.
தாய்மொழிக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டிய வேளையில், ஹிந்திக்கு வெண்சாமரம் வீச முற்படுவது ஹிந்தி மீதான வெறுப்பைத் தூண்ட உதவுமே தவிர, அதன் வளர்ச்சிக்கோ, தேசத்தின் வளர்ச்சிக்கோ உதவப் போவதில்லை. ஹிந்தி பேசாத மாநிலங்களில், பாஜகவின் வளர்ச்சிக்கும் பயன்படாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com