மோடி மேஜிக்! | பிரதமரின் மிகச் சிறந்த ராஜதந்திர வெற்றி குறித்த தலையங்கம்


கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியின் மிகச் சிறந்த ராஜதந்திர வெற்றி என்பதில்  ஐயத்துக்கு இடமில்லை. அரை லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஹூஸ்டன் என்ஆர்ஜி மைதானத்தில் கூடியிருந்தனர். இதுவரை அமெரிக்க மண்ணில் போப் ஆண்டவரைத் தவிர, வேறு எந்த வெளிநாட்டு ஆளுமைக்கும் இந்த அளவிலான கூட்டம் கூடியதில்லை. 

தேர்தல் பிரசார காலத்தில் இந்தியாவில் கட்சித் தலைவர்களுக்கு முன்னால் அவர்களது வேட்பாளர்கள் கைகூப்பி நிற்பதுபோல, அமெரிக்க அதிபரை பிரதமர் நரேந்திர மோடி நிற்க வைத்ததைப் பார்த்து உலகமே வியந்தது, அதிர்ந்தது. இதுவரையிலும் எந்த ஓர் அமெரிக்க அதிபரும் இதுபோல இன்னொரு நாட்டு தலைவரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில்லை. அமெரிக்க அதிபர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்கள் நாட்டின் கொடி மட்டும்தான் பின்னணியில் இருப்பது வழக்கம். ஹூஸ்டன் நிகழ்ச்சியில் அமெரிக்கக் கொடிக்கு நிகராக, இந்திய மூவர்ணக் கொடியும் பின்னணியில் இருந்ததை மரபு மீறல் என்பதா அல்லது இந்தியாவுக்கு அமெரிக்கா தரும் தனி மரியாதை என்று கொள்வதா?

நரேந்திர மோடி 2014-இல் இந்தியப் பிரதமரானது முதல், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியிலும் தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்வதில் குறியாக இருந்து வருகிறார். பிரதமரானது முதல் இதுவரை 85-க்கும் அதிகமான வெளிநாட்டு அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டு 175 நாடுகளிலுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டிருப்பது சர்வதேச அரசியலில் அவர் கையாளும் வித்தியாசமான ராஜதந்திரம்.

அமெரிக்காவைப் பொருத்தவரை இந்திய வம்சாவளியினர் சக்தி வாய்ந்த இனக் குழுவினராக மாறியிருக்கிறார்கள். முக்கியமான பதவிகளில் இருப்பதுடன், பெரும் பணக்காரர்களாகவும், அமெரிக்கப் பொருளாதாரத்தை வழிநடத்துபவர்களாகவும்கூட  இருக்கின்றனர். இன்றைய நிலையில், அமெரிக்க மக்கள்தொகையில் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அமெரிக்கவாழ் இந்தியர்களின் செல்வாக்கின் வெளிப்பாடு.

2014-க்கு முன்பு வரை அமெரிக்காவுக்கான நுழைவு அனுமதி வழங்கப்படாத, 1600 பென்சில்வேனியா அவென்யுவில் அமைந்திருக்கும் வெள்ளை மாளிகையில் அதிபரைச் சந்திக்க மறுக்கப்பட்ட நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இப்போதைய அதிபர் டிரம்ப்புக்கு உதவும் நிலைக்கு உயர்ந்திருப்பது தனிப்பட்ட முறையில் அவர் அடைந்திருக்கும் மிகப் பெரிய வெற்றி. ஹூஸ்டன் என்ஆர்ஜி மைதான நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்ட அளவுக்கு அதிபர் டிரம்ப் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வாரா என்பதற்கு 2020தான் விடையளிக்க வேண்டும். 

40 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கவாழ் இந்தியர்கள், ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள். அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி இந்திய ஆதரவுக் கட்சியாக இதற்கு முன்னால் இருந்ததில்லை. அதிபர்களாக இருந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரிச்சர்ட் நிக்ஸனும், ரொனால்ட் ரீகனும், ஜார்ஜ் புஷ் சீனியரும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவே எடுத்தவர்கள்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் அதிபர் புஷ் ஜூனியர், இந்திய சார்பு நிலைப்பாட்டை எடுக்க நேர்ந்தது. அதற்கு அமெரிக்கவாழ் இந்தியர்கள் கொடுத்த அழுத்தமும், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அணுகுமுறையும் காரணம். ஆனாலும்கூட, அமெரிக்கவாழ் இந்தியர்களில் பெரும்பாலோர் குடியரசுக் கட்சியைவிட, ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். நரேந்திர மோடியின் அதிதீவிர ஆதரவாளர்களாக இருந்தும்கூட, ஐந்தில் நான்கு நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஹூஸ்டன் கூட்டத்தில் பங்கு பெறவில்லை. 

ஹூஸ்டன் நிகழ்ச்சியின்போது இன்னொரு நாட்டு பிரதமரை அதிபர் டிரம்ப் கட்டியணைத்து, அவருக்கு அருகில் கை கட்டிக் கொண்டு நின்றது அமெரிக்கவாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான். எந்த அளவுக்கு அது வெற்றி பெறும் என்று இப்போதே சொல்லிவிட முடியாது.

ஹூஸ்டனில் அமெரிக்கவாழ் இந்தியர்களின் கூட்டத்தைக் கூட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும், ஒட்டுமொத்த அமெரிக்காவையும் வியப்பில் ஆழ்த்தி, ஜம்மு - காஷ்மீரில் இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்காமல் தடுத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆப்கானிஸ்தான் பிரச்னையிலிருந்து விடுவித்துக்கொள்ள, பாகிஸ்தானின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்திலிருக்கும் அமெரிக்காவின் கரங்களைக் கட்டிப்போடும் ராஜதந்திரம்தான் பிரதமர் நரேந்திர மோடி  ஹூஸ்டனில் செய்திருக்கும் மேஜிக்.

இந்த ராஜதந்திர நடவடிக்கையில் ஓர் இடர் (ரிஸ்க்) இருக்கிறது. "இந்த முறையும் டிரம்ப்' (அப் கீ பார் டிரம்ப் சர்க்கார்) என்று அதிபர் டிரம்ப்பின் 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவைத்து சார்பு நிலையை எடுத்திருக்கிறது  இந்தியா. இதன் மூலம் ஜனநாயகக்  கட்சியைப் பகைத்துக் கொண்டிருப்பதுடன், அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தால், இந்திய - அமெரிக்க உறவு மிகப் பெரிய சோதனையை எதிர்கொள்ள நேரிடும். 

இடர்களுக்கு இடையில் தொடர்வதுதான் "மோடி மேஜிக்!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com