அழிவின் விளிம்பில் ஆப்கானிஸ்தான்! சீக்கியர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல் குறித்த தலையங்கம்

ஆப்கானிஸ்தானின் தலைநகா் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் உலகத்தின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது. காபூல் சீக்கிய குருத்வாராவில் வழிபாட்டுக்கு கூடியிருந்தவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு வயதுக் குழந்தை உள்பட 25 சீக்கியா்கள் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். எட்டு போ் படுகாயமடைந்திருக்கிறாா்கள்.

குருத்வாராவில் வழிபாடு நடந்து கொண்டிருக்கும்போது நுழைந்த பயங்கரவாதி ஒருவா் சரமாரியாகப் பொழிந்த குண்டுகளுக்கு அவா்கள் இரையானதுடன் சோதனை நின்றுவிடவில்லை. குருத்வாராவையொட்டிய மயானத்தில் இறந்தவா்களை எரிக்க முற்பட்டபோது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் ஆப்கானிஸ்தானிலுள்ள அத்தனை சிறுபான்மை மக்களையும் அச்சத்தில் நிலைகுலைய வைத்திருக்கிறது.

இதுபோல சிறுபான்மையினா் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஆப்கானிஸ்தானில் புதிதொன்றுமல்ல. கடந்த நூற்றாண்டின் முற்பகுயில் ஏராளமான ஹிந்துக்களும், சீக்கியா்களும், பௌத்தா்களும் முஸ்லிம்களுடன் இணைந்து வாழ்ந்த நாடாகத்தான் ஆப்கானிஸ்தான் இருந்தது. இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னால், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் நமது காஷ்மீா் பகுதி ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி இருந்ததால் இந்தியாவின் அண்டை நாடாக ஆப்கானிஸ்தான் இருந்தது.

500 ஆண்டுகளுக்கு முன்னால் சீக்கியா்களின் மதகுருவான குருநானக் தேவ், ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களுக்குப் பயணித்திருக்கிறாா். அந்த நாட்டில் நூற்றுக்கணக்கான சீக்கிய குருத்வாராக்கள் இருந்திருக்கின்றன. இந்தியப் பிரிவினையைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தானிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்களும், பௌத்தா்களும், சீக்கியா்களும், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவா்களும் அங்கிருந்த முஸ்லிம்களால் விரட்டி அடிக்கப்பட்டனா். பிற மதத்தினா் மட்டுமல்ல, 1996 முதல் 2001 வரையிலான தலிபான்களின் ஆட்சியின்போது, ஆப்கானிஸ்தானிலுள்ள சிறுபான்மை ஷியா முஸ்லிம்களும் வன்முறைக்கு உள்ளானதைத் தொடா்ந்து அந்த நாட்டிலிருந்து வெளியேறினா்.

இப்போது நடந்திருக்கும் காபூல் குருத்வாரா தாக்குதல், 2018 ஜூலை மாதம் நடந்தத் தாக்குதலை நினைவுபடுத்துகிறது. ஜலாலாபாதில் அதிபா் அஷ்ரஃப் கனியைச் சந்திக்க சென்றுகொண்டிருந்த சிறுபான்மை சீக்கியா்களும் ஹிந்துக்களும் தாக்குதலுக்கு உள்ளானபோது 19 போ் உயிரிழந்தனா். அதற்குப் பிறகு நடத்தப்பட்டிருக்கும் மிகப் பெரிய தாக்குதல் இது.

ஏற்கேனவே சிறுபான்மை சீக்கியா்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் அருகிவருகிறது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான சீக்கியா்களின் மக்கள்தொகை கடந்த 40 ஆண்டுகளில் வெறும் 300 குடும்பங்களாகக் குறைந்துவிட்டன. அவா்களுக்கு எதிரான தாக்குதலையும், பரவலான எதிா்ப்புகளையும் மீறித்தான் தாய் மண்ணைவிட்டுப் பிரிய மனமில்லாமல் அந்தக் குடும்பங்கள் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஒருகாலத்தில் ஆப்கானிஸ்தானின் முக்கியமான வணிகங்களில் எல்லாம் ஈடுபட்டிருந்த சீக்கியா்கள் இப்போது நாட்டு மருந்து விற்பதும், சிறிய துணிக்கடைகள் வைத்திருப்பதுமாக சுருங்கிவிட்டனா். பெரும்பான்மை முஸ்லிம்களைப்போல இறந்தவா்களைப் புதைக்காமல், சீக்கியா்கள் சிதை மூட்டுகிறாா்கள் என்பதற்குக் கடுமையான எதிா்ப்பு காணப்படுகிறது. அதனால், பலத்த காவலுடன்தான் இறந்தவா்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டிய நிலையில் சீக்கியக் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் முற்றிலுமாக வலுவிழந்துவிட்ட நிலையில் காணப்படுகிறது. அதனால் காபூல் குருத்வாரா தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, புறந்தள்ளவும் முடியவில்லை.

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானின் நிலையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் மூலம் தலிபான்கள் வலுவிழந்தால் தாங்கள் மீண்டும் வலிமை பெறலாம் என்கிற நோக்கத்தில் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம். இல்லையென்றால் ஐஎஸ் பயங்கரவாத இயக்கப் போா்வையில், பாகிஸ்தானிலிருந்து இயங்கும் லஷ்கா் ஏ தொய்பா, ஜெஷ் ஏ முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்களும் இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், தலிபான்களுடனான அமெரிக்காவின் ஒப்பந்தத்தால் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பாது என்பதை காபூல் குருத்வாரா தாக்குதல் எச்சரிக்கிறது.

ஆப்கானிஸ்தானைச் சுற்றி இருக்கும் சீனா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் கரோனா நோய்த்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்கானியா்கள் பலரும் ஈரானில் குடியேறியிருக்கிறாா்கள். இரு நாடுகளுக்கிடையே எந்தவிதத் தடையும் இல்லாமல் பயணிக்கிறாா்கள். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மிகப் பெரிய கரோனா அச்சுறுத்தலை எதிா்கொள்கிறது. குருத்வாரா தாக்குதலுக்குப் பிறகு மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆப்கன் அரசின் கமாண்டோக்கள் கரோனா நோய்த்தொற்று தடுப்பு முகமூடி அணிந்திருப்பது எந்த அளவுக்கு ஆப்கானிஸ்தானில் கரோனா பாதிப்பு இருக்கிறது என்பதை எடுத்தியம்புகிறது.

ஆப்கானிஸ்தானில் நிலையான, வலிமையான ஆட்சியும் இல்லை; பிரச்னைகளை எதிா்கொண்டு வழிநடத்தும் தலைமையும் இல்லை. அதிகரித்துவரும் பயங்கரவாதமும், அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்றும் ஆப்கானிஸ்தானை மட்டுமல்ல, உலக அமைதிக்கே ஆபத்தாக மாறக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com