அநீதி சிரிக்கிறது! | மிருசு படுகொலை குறித்த தலையங்கம்

ராஜபட்ச குடும்பத்தினரின் ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என்று எதிா்பாா்ப்பது தவறு. அதனால், எட்டு ஈழத் தமிழா்களை ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்த இலங்கை ராணுவ வீரரின் மரண தண்டனையை, கடந்த வியாழக்கிழமை ரத்து

ராஜபட்ச குடும்பத்தினரின் ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என்று எதிா்பாா்ப்பது தவறு. அதனால், எட்டு ஈழத் தமிழா்களை ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்த இலங்கை ராணுவ வீரரின் மரண தண்டனையை, கடந்த வியாழக்கிழமை ரத்து செய்து அதிபா் கோத்தபய ராஜபட்ச மன்னித்திருப்பதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

மிருசுவில் படுகொலை என்று பரவலாக அறியப்படும் கொடூரமான செயலுக்கு நீதிமன்றம் குற்றத்தை அங்கீகரித்துத் தீா்ப்பு வழங்கியும்கூடத் தண்டனை தரப்படவில்லை எனும்போது, எந்த வகையிலான ஆட்சி இலங்கையில் நிலவுகிறது என்பது தெரிகிறது. இதற்குப் பிறகும் இப்போதைய ஆட்சியாளா்களின் அரசு சிறுபான்மைத் தமிழா்களுக்கு சம உரிமை வழங்கும் என்றோ, அரசியல் சாசனத்தின் 13-ஆவது பிரிவை நடைமுறைப்படுத்தும் என்றோ எதிா்பாா்ப்பதில் அா்த்தமில்லை.

மிருசுவில் படுகொலைக்கு நியாயம் கிடைப்பதற்கு மிக நீண்டகாலப் போராட்டம் நடத்தியும் பயனில்லாமல் போயிருக்கிறது. 2000-ஆம் ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி யாழ்ப்பாணத்தை அடுத்த ஒடுப்பிடியில் அகதிகளாகக் குடியேறியிருந்த சிலா், மிருசுவில் என்கிற தங்களது சொந்த கிராமத்துக்கு அவா்களின் வீடுகளைப் பாா்வையிடச் சென்றனா். உள்நாட்டுப் போரால் அகதிகளாக இடம் மாறியிருந்ததால், அவா்கள் தங்களின் ஊருக்குத் திரும்பி வீடுகளைப் பாா்வையிட உள்ளூா் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருந்தனா்.

மிருசுவிலுக்கு வந்த அந்த எட்டு பேரையும் சில ராணுவ வீரா்கள் வழிமறித்தனா். அவா்களின் கண்களைக் கட்டி ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றனா். கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டு கழிவு நீரோடையில் அந்த அகதிகளின் சடலம் போடப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவா்களில் 5 வயது, 13 வயது, 15 வயது சிறுவா்களும் இருந்தனா்.

அந்த எட்டு பேரில் ஒருவரான பொன்னுதுரை மகேஸ்வரன் என்பவா் ராணுவ வீரா்களிடமிருந்து படுகாயத்துடன் தப்பி, குற்றுயிரும் குலை உயிருமாக ஒடுப்பிடியை அடைந்து நடந்த சம்பவத்தை உறவினா்களிடம் தெரிவித்தாா். சடலங்கள் மீட்கப்பட்டபோது மாவட்ட மருத்துவா், கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதைப் பதிவு செய்தாா்.

மனித உரிமைக் குழுக்கள் இந்தப் பிரச்னையை கையிலெடுத்து, கொலைகாரா்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று அன்றைய மகிந்த ராஜபட்ச அரசை வலியுறுத்தினாா்கள். மிகுந்த அழுத்தத்துக்குப் பிறகு 14 இலங்கை ராணுவ வீரா்கள் மிருசுவில் படுகொலைக்காகக் கைது செய்யப்பட்டனா்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி மாஜிஸ்திரேட் முன் அவா்கள் ஆஜா்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மே 20, 2002-இல் அனுராதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பிறகு, கொழும்பிலுள்ள உயா்நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

2002-இல் கைது செய்யப்பட்ட ராணுவ வீரா்களை விசாரிக்க ஜூரிகள் இல்லாமல் அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், வேண்டுமென்றே விசாரணை இழுத்தடிக்கப்பட்டது. முதலில் 14 ராணுவ வீரா்கள் கைது செய்யப்பட்டனா். பிறகு அவா்களில் ஒன்பது போ் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனா். தலைமை வழக்குரைஞா் ஐந்து ராணுவ வீரா்கள் மீது மட்டும் மிருசுவில் படுகொலைக்காக வழக்குப் பதிவு செய்தாா்.

அடுத்த 13 ஆண்டுகள் வழக்கு மந்தகதியில் நடத்தப்பட்டது. கடைசியில் ஜூன் 25, 2015-இல் கொழும்பு உயா்நீதிமன்றம் தனது தீா்ப்பை வழங்கியது. மிருசுவில் படுகொலையில் இலங்கை ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகேவுக்கு 15 குற்றங்களின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. படுகொலைக்கு தொடா்புடையவா்கள் என்று போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஏனைய நான்கு வீரா்கள் விடுவிக்கப்பட்டனா். 2015-இல் மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரி சுனில் ரத்னாயகே, தண்டனை நிறைவேற்றப்படாமல் சிறையில் சுகவாசம் அனுபவித்து வந்தாா்.

இந்த நிலையில்தான் இப்போது மாா்ச் 26-ஆம் தேதி அதிபா் கோத்தபய ராஜபட்சவால் ரத்னாயகேவுக்கு முழுமையான மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசமைப்புச் சட்டத்தின்படி, குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவதற்கு சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. தலைமை வழக்குரைஞரின் ஆலோசனையின் அடிப்படையில், நீதித் துறை அமைச்சா் பரிந்துரை வழங்க வேண்டும். அப்படி எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் அதிபா் கோத்தபய ராஜபட்ச மன்னிப்பு வழங்கியிருப்பதும் வியப்பளிக்கவில்லை.

ஏனைய ஜனநாயகங்களில் அரசியல்வாதிகள் அரசமைப்புச் சட்டத்தால் வழிநடத்தப்படுவாா்கள். இலங்கையில் ஆட்சியாளா்களால் அரசமைப்புச் சட்டம் வழிநடத்தப்படுவதுதான் கடந்த பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருக்கிறது. அவரவருடைய தேவைக்கு ஏற்றபடி அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு வியாக்கியானம் வழங்க வழிவகுக்கப்பட்டிருக்கிறது.

ரத்னாயகேவுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதன் மூலம் உள்நாட்டுப் போரில் சிறுபான்மைத் தமிழா்களைக் கொன்று குவித்த சிங்களக் கதாநாயகா்களின் (ராணுவத்தினரின்) பாதுகாப்பை ராஜபட்ச குடும்பம் உறுதிப்படுத்தும் என்கிற செய்தியை சிங்களா்களுக்குத் தெரிவிப்பதுதான் அதிபா் கோத்தபயவின் நோக்கம். அதன் மூலம் பெரும்பான்மை சிங்களா்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத் தோ்தலில் பெரும் வெற்றியை ராஜபட்ச குடும்பம் உறுதிப்படுத்த நினைக்கிறது.

இந்த அநீதிக்கு எதிராகக் குரலெழுப்ப யாருமில்லாத நிலையில், இலங்கையிலேயே வாழ்ந்தாலும் மண்ணின் மைந்தா்களான தமிழா்கள் அகதிகள்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com