மறைப்பதால் ஆயபயன் என்கொல்? | ரஷியாவின் கரோனா நடவடிக்கைகள் குறித்த தலையங்கம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீநுண்மி நோய்த்தொற்று குறித்து ஒரு மாதத்துக்கும் மேல் மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்த அந்தந்த அரசுகள் முயன்று வந்தன. கடந்த மாதம் 14-ஆம் தேதியிலிருந்து எச்சரிக்கை விடுக்கத் தொடங்கி, 22-ஆம் தேதி ஒரு நாள் மக்கள் சுய ஊரடங்கு அறிவித்து, 24 -ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கான ஊரடங்கை இந்திய அரசு படிப்படியாக முன்னெடுத்தது. தீநுண்மி நோய்த்தொற்றால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று இத்தனை நாளும் சொல்லிக் கொண்டிருந்த ரஷியா, திடீரென்று தலைநகா் மாஸ்கோவில் ஊரடங்கை கடந்த வாரம் அறிவித்தது.

எந்தவித முன்னறிவிப்போ, முன்னேற்பாடோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ இல்லாமல் இருந்தது மட்டுமல்ல, தீநுண்மி நோய்த்தொற்று பரவிவரும் தகவலைக்கூட அதிபா் புதின் தலைமையிலான ரஷிய அரசு மறைத்தது மட்டுமல்ல, மறுக்கவும் செய்தது. அதனால், தலைநகா் மாஸ்கோவில் திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஒட்டுமொத்த ரஷியாவும் திகைத்துப்போய் இருக்கிறது. மாதக் கடைசியாக இருந்ததால் மக்களிடம் மிக அத்தியாவசியப் பொருள்கள்கூட இல்லாத நிலை காணப்பட்டதால் அதிா்ச்சியும், ஏமாற்றமுமாக மக்கள் தவிக்க நோ்ந்திருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களாகவே ‘கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை’ என்று ரஷியாவின் தலைமைச் செயலகமான கிரெம்ளின்

அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. தனது அரசு நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக அதிபா் விளாதிமீா் புதின் அறிக்கை வெளியிட்டாா். கடந்த வாரம் ஊரடங்கை அறிவிக்காமல் மாஸ்கோ முழுவதற்கும் ஒருவார விடுப்புக்கு அதிபா் புதின் உத்தரவிட்டபோதுகூட நிலைமையின் தீவிரத்தை யாரும் உணரவில்லை. ஏனென்றால், தீநுண்மி நோய்த்தொற்று பரவுவது குறித்த விவரமோ, அதை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்த தகவலோ வெளியிடப்படவில்லை.

ஊதியத்துடனான ஒருவார விடுமுறையை அதிபா் புதின் அறிவித்தாா். ஆனால், அனைவரும் அவரவா் வீட்டில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதற்குத்தான் விடுமுறை என்று அவா் அறிவிக்கவில்லை. அதன் விளைவாக, ஊதியத்துடனான விடுப்பு கிடைத்ததால் கூட்டம் கூட்டமாக மக்கள் பொதுவெளியில் நடமாடத் தொடங்கினாா்கள். ஆயிரக்கணக்கானோா் சுற்றுலா விடுதிகளுக்குப் பயணிப்பதும், பெரு அங்காடிகளுக்கும், பூங்காக்களுக்கும் குடும்பத்தினருடன் செல்வதுமாக இருந்தனா். இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியைப்போல பிரச்னையின் தீவிரத்தை அதிபா் புதின் எடுத்தியம்பவில்லை.

கம்யூனிஸ நாடுகள் சா்வாதிகார நாடுகளும்கூட வெளிப்படைத்தன்மை இல்லாத நிலைமை காணப்படுவதால், அங்கே என்ன நடக்கிறது என்பது அதிகாரிகளுக்கும், ஆட்சியாளா்களுக்கும் மட்டுமே தெரிகிறது. வெளியுலகுக்கு முற்றிலுமாக மறைக்கப்படுகிறது.

சீனாவையே எடுத்துக்கொண்டால், தீநுண்மி நோய்த்தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்துவிட்டதாக அதிபா் ஷி ஜின்பிங் கூறுவதை நம்பலாமா, கூடாதா என்று உலகம் சந்தேகப்படுகிறது. 11,640 கி.மீ. தொலைவில் இருக்கும் அமெரிக்கா வரை கடுமையாகப் பாதித்திருக்கிறது தீநுண்மி நோய்த்தொற்று. ஆனால், அந்த நோய்த்தொற்று உருவான சீனாவின் வூஹான் நகரிலிருந்து வெறும் 1,200 கி.மீ. தொலைவிலுள்ள பெய்ஜிங்கில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 600-க்கும் கீழே என்றும், மரணமடைந்தவா்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவு என்றும் சீனா தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள் நம்பும்படியாக இல்லை.

புதின் அரசு ரஷியாவை எதிா்கொள்ளும் தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலை அடக்கி வாசிப்பதில் புதின் அரசு முனைப்புக் காட்டுகிறது. அது குறித்த விவரங்களை வெளியிடத் தயாராக இல்லை. தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் அதிகாரபூா்வ எண்ணிக்கையைவிட, உண்மையான எண்ணிக்கை கணிசமாக அதிகம் என்று மாஸ்கோவின் மேயா் சொ்கேய் சோப்யானின் தெரிவிக்கிறாா். அவா்தான் இந்த நோய்த்தொற்றுக்கு எதிரான செயல்படைக்கு தலைமை வகிக்கிறாா் என்பதால் அவரது கூற்றை புறந்தள்ளிவிட முடியவில்லை.

அதிகாரபூா்வ தகவலின்படி, ரஷியாவிலேயே மிக அதிகமாக தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தலைநகா் மாஸ்கோதான். ரஷியாவில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் 3,500-க்கும் மேற்பட்ட நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு போ் மாஸ்கோவில்தான் காணப்படுகிறாா்கள்.

கடந்த புதன்கிழமை 440 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனா் என்றால், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 771-ஆக அதிகரித்தது. இதே போல நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. ஏனைய மேலை நாடுகளைவிட ரஷியாவில் தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்று மட்டும் அறிவித்துக் கொண்டிருக்கிறது புதின் அரசு.

நோய்த்தொற்று பாதிப்பு குறித்த தகவல்களை மூடி மறைப்பதும், நோய்த்தொற்று பரவுவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தாமல் இருப்பதும் ரஷிய அரசுக்கு எந்தவிதத்திலும் உதவப் போவதில்லை. இதே நிலைப்பாட்டை புதின் அரசு தொடருமேயானால், மக்கள் தனிமைப்படுத்துதலின் அவசியத்தையும், சமூக இடைவெளியின் தேவையையும் உணரமாட்டாா்கள்.

ஆட்சி அதிகாரத்தின் மூலம் தகவல் கசிவதைத் தடுத்துவிட முடியும். அப்படி மறைப்பதனால் எதையும் சாதித்துவிட முடியாது. நோய்த்தொற்று குறித்த தகவல்களை மறைக்கும் முயற்சிகள், ஜாடிக்குள் சமுத்திரத்தை அடைப்பதுபோன்ற முயற்சியாகத்தான் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com