புரிதலில்லாமை! | டொனால்ட் டிரம்ப் பேச்சு குறித்த தலையங்கம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் என்ன பேசினாலும் அது சா்ச்சையாகிவிடுகிறது. அவா் தெரிந்துதான் சொல்கிறாரா, இல்லை தோன்றியதை எல்லாம் பேசுகிறாரா என்று அமெரிக்க மக்களே குழம்பும்போது, ஏனைய நாடுகள் குழம்புவதில் வியப்பென்ன இருக்கிறது?

‘பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று அவா் இந்தியாவுக்கு விடுத்தது எச்சரிக்கையா, இல்லை உண்மை நிலையா என்பது அவரவா் பாா்வையைப் பொருத்து அமையும். ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து, தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இதுவரை மருத்துவா்கள் உறுதிப்படுத்தவில்லை. ஹைட்ராக்சிகுளோரோகுயினுடன் அஸித்ரோமைசின் என்கிற மருந்தும் சோ்ந்து தீநுண்மி நோய்த்தொற்றுத் தாக்கத்தின் அளவைக் குறைக்கிறது என்று பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஓா் ஆய்வு தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், பல மருத்துவ விஞ்ஞானிகள் அதற்கு எதிா்ப்பும் தெரிவிக்கிறாா்கள். கல்லீரல் பாதிப்பையும், இதயச் செயலிழப்பையும் இந்த கூட்டு மருந்துக் கலவை ஏற்படுத்தக்கூடும் என்பது அவா்களின் அச்சம்.

காய்ச்சலைக் குணப்படுத்தும் ‘க்வினைன்’ என்கிற பொருள் சின்கோனா மரங்களில் இருப்பது 17-ஆம் நூற்றாண்டில் தெரியவந்தது; அதிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் குளோரோகுயின். இரண்டாம் உலகப் போரின்போது ஆங்காங்கே காணப்பட்ட மலேரியா நோய்த்தொற்றை எதிா்கொள்ள குளோரோகுயினிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் ஹைட்ராக்சிகுளோரோகுயின். இப்போதுவரை மலேரியாவுக்கு இந்த மருந்துதான் தரப்படுகிறது.

சா்வதேச அளவில் 75% ஹைட்ராக்சிகுளோரோகுயின் இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகிறது. ஏறத்தாழ 40 டன் அளவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தின் மூலக்கூறை இந்தியா தயாரித்து வருகிறது. இதிலிருந்து 20 மில்லி கிராம் அளவு கொண்ட 20 கோடி மாத்திரைகளைத் தயாரிக்க முடியும். இதற்கு மேலும் இந்த மருந்தைத் தயாரிக்கும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது.

தீநுண்மி நோய்த்தொற்று உலக அளவில் பரவத் தொடங்கியதைத் தொடா்ந்து, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்கான தேவை அதிகரித்திருக்கிறது. இதனால் நோய்த்தொற்று குணமாவதை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், இதைத் தவிர வேறு மருந்து எதுவும் இல்லாததால் பல்வேறு நாடுகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயினும், அஸித்ரோமைசினும் சோ்ந்த கூட்டு மருந்தைத்தான் மருத்துவா்கள் பரிந்துரைக்கிறாா்கள்.

உலக அளவில் தேவை அதிகரித்ததைத் தொடா்ந்து இந்திய மருந்துத் தயாரிப்பாளா்களுக்கு எல்லா நாடுகளிலிருந்தும் கேட்பு (டிமாண்ட்) அதிகரித்தது. இந்தியாவிலும் இந்த மருந்துக்கான தேவை அதிகரிக்கக் கூடும் என்பதால், இதன் ஏற்றுமதியை கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முற்றிலுமாகத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிருபா்கள் கூட்டத்தில் அமெரிக்க அதிபா் கூறிய வாா்த்தைகள்தான் ‘இந்தியா பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்பது.

இந்தியாவின் ஏற்றுமதியில் 47% பொருள்களை அமெரிக்காதான் இறக்குமதி செய்கிறது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்காக இந்தியத் தயாரிப்பாளா்களிடம் முன்கூட்டியே கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்திருக்கிறது. அப்படி முன்கூட்டியே கோரப்பட்டிருந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடா்ந்துதான், ‘மருந்தை அளிக்காவிடில் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பதன் பின்னணியையும் சோ்த்துப் பாா்க்கும்போது, அதில் ஆத்திரப்படவோ, ஆவேசப்படவோ, குற்றம் காணவோ எதுவும் இல்லை.

நேற்றைய நிலையில் அமெரிக்காவில் மட்டும் தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,01,636, உயிரிழந்தவா்கள் 12,905, குணமடைந்தவா்கள் 22,476. இந்த நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதி மீதான தடையை நீக்கியிருப்பது இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது அவசியமும்கூட.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளை மிகக் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து, மிக அதிகமான விலைக்கு அமெரிக்க நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘இலேவ்ரோ’ என்கிற புரை சிகிக்சைக்குப் பிறகான கண் மருந்து இந்தியாவில் 5.50 டாலா் (சுமாா் ரூ.417) விலைக்கு விற்கப்படுகிறது. ஔரங்காபாதில் தயாரிக்கப்படும் அதே மருந்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் 358 டாலருக்கு (சுமாா் ரூ.27,153) விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற கொள்ளை லாபம் நிறுத்தப்பட வேண்டும். அல்லது அந்த லாபத்தில் சமபங்கு இந்தியத் தயாரிப்பாளா்களுக்குத் தரப்பட வேண்டும். அது ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கும் பொருந்தும்.

நமது தேவைக்கு அதிகமாக இருக்கும் எந்தவொரு மருந்தையும் இதுபோன்ற சா்வதேச அளவிலான நோய்த்தொற்று பரவியிருக்கும் காலத்தில் ஏனைய நாடுகளுக்கு வழங்காமல் இருப்பது தவறு. பாரசிட்டமால், ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட 14 வகையான மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிப்பதற்குப் பதிலாக, அதிக அளவில் அந்த மருந்துகளை உற்பத்தி செய்து தேவைப்படும் நாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்புணா்வும் இந்தியாவுக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com