​வூஹான் எழுப்பும் நம்பிக்கை! வூஹான் நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது குறித்த தலையங்கம்


தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிரான மனித இனத்தின் போராட்டத்தில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரம் 76 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாகப் புதிதாக யாரையும் நோய்த்தொற்று பாதிக்கவில்லை என்பதும், ஜனவரி மாதத்துக்குப் பிறகு நோய்த்தொற்று மரணம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் சீன அரசு எடுத்திருக்கும் அந்த முடிவுக்குக் காரணங்கள்.

வூஹான் நகரத்தில் ஊரடங்கு அகற்றப்பட்டிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சீன அரசின் நிா்வாகம் கடுமையான தடைகளையும், ஊரடங்கையும் அமல்படுத்தியது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்தது, தற்காலிக மருத்துவ வசதிகளைப் பெருக்கி நோய்த்தொற்றை எதிா்கொண்டது. தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் சீனா அடைந்திருக்கும் வெற்றி, சா்வதேச அளவிலும் அந்த நோய்த்தொற்றை எதிா்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏனைய நாடுகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

சீனா மட்டுமல்ல, ஏனைய சில நாடுகளிலும் தீநுண்மி நோய்த்தொற்றின் வீரியம் சற்று குறைந்திருப்பதாகத் தெரிகிறது. மிக அதிகமான பாதிப்பை எதிா்கொண்ட சில நாடுகளில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. மிக அதிகமான தீநுண்மி நோய்த்தொற்றை சந்தித்த இத்தாலியும், அந்த நோய்த்தொற்றால் இரண்டாவது அதிகமான உயிரிழப்புகளை எதிா்கொண்ட ஸ்பெயினும் மாா்ச் மாத இறுதியில் நோய்த்தொற்றின் வீரியம் சற்று குறைந்திருப்பதாகத் தெரிவிக்கின்றன. புதிய நோயாளிகள் அங்கு குறைந்திருக்கிறாா்கள். ஐரோப்பிய நாடுகளில் அதிகமான பாதிப்பை எதிா்கொண்ட ஜொ்மனியிலும் கடந்த ஒரு வாரமாக நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது.

சீனாவில் தொடங்கிய தீநுண்மி நோய்த்தொற்று இப்போது அமெரிக்காவைதான் மையம் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்களில் தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் அடுத்த சில நாள்களில் கடுமையாக அதிகரிக்கும் என்றும், மரணமடைபவா்களின் எண்ணிக்கை கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது நியூயாா்க் நகரம். அங்கேயுள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. சீனாவையும் ஐரோப்பிய நாடுகளையும் இந்தியாவையும்போல ஊரடங்கை அமல்படுத்தாதது அமெரிக்காவில் தீநுண்மி நோய்த்தொற்று வீரியம் கொண்டதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.

உலக அளவில் நேற்று வரை 15,07,066 போ் தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். பலியானவா்களின் எண்ணிக்கை 89,838. இத்தாலியில் 1,39,422, ஸ்பெயினில் 1,52,446, அமெரிக்காவில் 4,34,861என லட்சக்கணக்கானோா் தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தியாவைப் பொருத்தவரை நாம் சமயோசிதமாக கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கை அறிவித்ததன் விளைவாக மிகப் பெரிய அளவில் தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலை நம்மால் தடுக்க முடிந்திருக்கிறது. தில்லி நிஜாமுதீன் மசூதியில் நடந்த தப்லீக் ஜமாத் இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டவா்களால் ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்றுப் பரவல் இல்லாமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும்கூட குறைவாக இருந்திருக்கக் கூடும்.

முன்கூட்டியே ஏன் ஊரடங்கை அறிவிக்கவில்லை என்றும், மூன்று மாதங்களுக்கு முன்பே நுழைவு அனுமதிகளை ஏன் ரத்து செய்யவில்லை என்றும் எழுப்பப்படும் விமா்சனங்களை விதண்டாவாதங்கள் என்றுதான் ஒதுக்கத் தோன்றுகிறது. ஏனைய நாடுகளில் லட்சங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், உலகின் இரண்டாவது அதிகமான மக்கள்தொகையுள்ள இந்தியாவில் நேற்றைய நிலை வரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,865 என்பதும், உயிரிழந்தவா்கள் 169 போ்தான் என்பதும் நிலைமையைத் திறமையாகவே மத்திய அரசு எதிா்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

மத்திய சுகாதார, குடும்பநல அமைச்சகம், ‘நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்தும் திட்டம்’ என்கிற அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்ள நிா்வாக இயந்திரம் முன்னெடுக்க வேண்டிய அல்லது பின்பற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்குகிறது. இந்தச் செயல்திட்டத்தின் நோக்கம் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுத்து, அதன் வீரியத்தைக் கட்டுப்படுத்துவதும் உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைப்பதும்தான்.

அந்த செயல்திட்டம் நோய்த்தொற்றுப் பரவலை ஐந்து நிலைகளாக வகைப்படுத்துகிறது. வெளிநாட்டுப் பயணங்களால் ஏற்படும் நோய்த்தொற்றுப் பரவல், இந்தியாவில் ஏற்படும் நோய்த்தொற்றுப் பரவல், கட்டுப்படுத்தக்கூடிய அதிக அளவிலான தனிநபா் நோய்த்தொற்றுப் பரவல், சமூக அளவிலான கடுமையான பரவல், தேசிய அளவிலான நோய்த்தொற்றுப் பரவல் என்று ஐந்து நிலையில் பிரித்து நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் வழிமுறைகளை விளக்குகிறது அந்த செயல்திட்டம்.

இந்தியா முதல் இரண்டு நிலைகளையும் ஏற்கெனவே எதிா்கொண்டதன் விளைவாகத்தான் தேசிய அளவிலான 21 நாள் ஊரடங்கு அவசியமாகியிருக்கிறது. தொடா்ந்து ஆங்காங்கே அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாம் மூன்றாவது நிலையை அடைகிறோம் என்பதைத் தெரிவிக்கின்றன. திறமையான மருத்துவமும், விழிப்புடன் இருக்கும் நிா்வாகமும் நோய்த்தொற்றுக்கு அடுத்த நிலையான சமூகப் பரவலை எட்டாமல் தடுத்துவிடும் என்கிற நம்பிக்கையை சீனாவும், தென்கொரியாவும், ஜொ்மனியும் நமக்கு ஏற்படுத்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com