தலை சுற்றுகிறது! | பொது முடக்கதால் ஏற்பட்டுள்ள நிதிநிலைமை குறித்த தலையங்கம்

கொவைட் 19 நோய்த்தொற்றுத் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவால், வாராக்கடன் அளவு ரூ. 4 லட்சம் கோடியிலிருந்து ரூ.6.2 லட்சம் கோடிவரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஓர் எதிர்பார்ப்பை வெளி


பொது முடக்கத் தளர்வுகள், எதிர்பார்த்த அளவுக்கு பொருளாதார மந்தநிலையை மாற்றிவிடவில்லை. நோய்த்தொற்றுப் பரவல் நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி செல்லத் தொடங்கியதால், சுகாதாரக் கட்டமைப்பு கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இந்தப் பின்னணியில் மாநில அரசுகள் நிலைமையை எதிர்கொள்வதற்குப் போதுமான நிதியாதாரமில்லாமல் தவிக்கும் போக்கு இந்தியா முழுவதும் காணப்படுகிறது. இதனை எப்படி எதிர்கொள்வது என்கிற மிகப் பெரிய சவாலை இந்திய அரசு எதிர்கொள்கிறது. 

கடந்த திங்கள்கிழமை, மத்திய அரசு 2019-20-க்கான ஜிஎஸ்டி தொகையை மாநிலங்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறது. 2020 வரையிலான ரூ.13,806 கோடி இழப்பீட்டுத் தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. குறைந்த ஜிஎஸ்டி வரி வசூலைக் காரணம் காட்டி மத்திய அரசு இழப்பீடு வழங்குவதை தாமதிக்கிறது என்கிற மாநிலங்களின் குற்றச்சாட்டுக்கு விடையளித்திருக்கிறது மத்திய அரசு.

கடந்த நிதியாண்டை மத்திய அரசு சமாளித்திருக்கிறது. அதனாலேயே பிரச்னை முடிந்துவிடவில்லை. 2019-20-இல் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் மொத்த ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.1.65 லட்சம் கோடி என்றால், ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.95,444 கோடி மட்டும்தான். நடப்பு நிதியாண்டில் இது மேலும் மோசமாக மாறப் போகிறது. அதை மத்திய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்கிற கேள்வி எழுகிறது. 

கொவைட் 19 நோய்த்தொற்றுப் பரவலுக்கு முந்தைய நிலைமையைவிட குறைவாக பொருளாதார நடவடிக்கைகள் இருக்கப் போகின்றன. அதனால், மாநில ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டைவிட மிகக் குறைவாகவே இருக்கப் போகிறது. மாநிலங்களைப் பொருத்தவரை, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து வருவாய் செலவினங்களுக்கு மத்திய அரசை எதிர்நோக்கி நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி பங்கும் இழப்பீடும்தான் மாநிலங்களின் பிரதான நிதியாதாரமாக இருக்கும் நிலையில், அனைத்து மாநிலங்களுமே நிதி நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றன. 

ஐந்து ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தருவதாக மாநிலங்களுக்கு மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது. மிகப் பெரிய வருவாய்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்  நிலையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு எப்படி இழப்பீடு வழங்கப் போகிறது என்பதும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் வரி வருவாய் அதிகரிக்காவிட்டால் இழப்பீட்டுக்கான காலவரம்பை நீட்டிக்க முடியுமா என்பதும் மத்திய நிதியமைச்சகம் எதிர்கொள்ளும் சவால்கள். 

மாநிலங்கள் ஏற்கெனவே தங்களது பட்ஜெட் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாத நிலையில், நோய்த்தொற்று பாதிப்பை எப்படி முறையாகக் கையாளப் போகின்றன என்கிற கவலை அதிகரிக்கிறது. நிதியாதாரமின்மையால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிக்குமானால் அதனால் ஏற்படும் விளைவுகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

வரி வருவாய் குறைவு ஒருபுறமென்றால், வங்கிகளின் நிதி நிலைமை இன்னொருபுறம் பூதாகரமாக நிற்கிறது. மார்ச் 2021-க்குள் வங்கிகளின் வாராக்கடன் எதிர்பாராத அளவு அதிகரிக்கக்கூடும் என்று அச்சப்படுகிறது இந்திய ரிசர்வ் வங்கி. இப்போதைய நிலை தொடருமேயானால், மார்ச் 2020-இல் 8.5%-ஆக இருக்கும் வாராக்கடன் விகிதம், மார்ச் 2021-இல் 12.5%-ஆக உயரக்கூடும் என்று ரிசர்வ் வங்கி கணிக்கிறது. நிலைமை மேலும் மோசமாகுமானால், 12.5% என்பது 14.7% வரை அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கொவைட் 19 நோய்த்தொற்றுத் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவால், வாராக்கடன் அளவு ரூ. 4 லட்சம் கோடியிலிருந்து ரூ.6.2 லட்சம் கோடிவரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஓர் எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கிறது. அதன் விளைவாக, வங்கிகளின் மூலதனத்தில் மிகப் பெரிய இழப்பு ஏற்படக்கூடும். 

வங்கிகளின் மூலதனத்தில், குறைந்தது 9% பாதுகாப்பு மூலதனமாக இருக்க வேண்டும் என்பது விதி. மார்ச் 2020-இல் 14.6%-ஆக இருந்த குறைந்தபட்ச மூலதனத் தொகை, மார்ச் 2021-இல் 11.8%-ஆக குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது ஐந்து  வங்கிகள் குறைந்தபட்ச மூலதனம்கூட வைத்திருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இவையெல்லாம் போதாதென்று இன்னொருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசி ஏற்றம் கவலையளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பொது முடக்கம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சில்லறைப் பொருள்களின் விலைவாசி ஏற்றம் 6.1% அதிகரித்தது. உணவுப் பொருள்களின் விலைவாசி 7.3%, பருப்பு வகைகள் 16.7%, மீன்- இறைச்சி  வகைகள் 16.2% என்கிற அளவில் அதிகரித்திருக்கின்றன. சரக்குப் போக்குவரத்து செலவினங்களும், டீசல் - பெட்ரோல் வரி உயர்வால் அதிகரித்திருக்கின்றன. பழங்கள், காய்கறிகளின் விலைவாசி அதிகரிக்கவில்லை என்றாலும், போதுமான உணவுப் பதனக் கிடங்குகள் இல்லாததால் அழுகி வீணாகிப் போனவை மிக அதிகம். வரப்போகும் மாதங்களில் உணவுப் பொருள்களின்  விலையை அரசு எப்படிக் கட்டுக்குள் வைத்திருக்கப் போகிறது என்பதைப் பொருத்துத்தான் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.

மாநிலங்களின் நிதித் தேவையை ஈடுகட்டுவதன் மூலம்தான் கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும். அதைத் தடுப்பதன் மூலம்தான் பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். எப்படி சமாளிக்கப் போகிறோம்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com