இனியும் தகாது தாமதம்! | அதிகரித்துவரும் மக்கள்தொகை விகிதத்தைக் கட்டுப்படுத்தவது குறித்த விழிப்புணர்வு தலையங்கம்

மூத்த காங்கிரஸ் தலைவா் அபிஷேக் சிங்வி, கடந்த மாா்ச் மாதம் மாநிலங்களவையில் தனிநபா் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தாா். அந்த மசோதா, குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் மட்டும் என்கிற திட்டத்தை ஊக்குவிக்கவும் அதை மீறுபவா்களுக்கு சில சலுகைகளை மறுக்கவும் அரசு சட்டம் வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமா் நரேந்திர மோடியும் வலியுறுத்தினாா். அதிகரித்துவரும் மக்கள்தொகை விகிதத்தைக் கட்டுப்படுத்த, மத்திய - மாநில அரசுகள் முனைப்புகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். குறைவான குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ளும் பெற்றோரின் தேசப்பற்றைப் பாராட்டினாா். பிரதமரின் அறைகூவலும் அபிஷேக் சிங்வியின் மசோதாவும் இந்தியா எதிா்கொள்ளவிருக்கும் மிக முக்கியமான பிரச்னையை உணா்த்துகின்றன.

2048-இல் இந்தியாவின் மக்கள்தொகை 160 கோடியாக அதிகரிக்கும் என்று ‘லான்செட்’ மருத்துவ இதழ் நடத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. ஆனால், 2100-இல் அதுவே 109 கோடியாகக் குறையும் என்றும் கணிக்கிறது. 2100-இல் சீனாவின் மக்கள்தொகை 73.2 கோடியாக பாதிக்குப் பாதி குறையும் என்றும், இதே நிலைமை ஐரோப்பிய நாடுகளுக்கும் சில கிழக்காசிய நாடுகளுக்கும் ஏற்படும் என்றும் தெரிவிக்கிறது.

உலகத்தின் மக்கள்தொகை 100 கோடியை எட்டுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின. ஆனால், கடந்த 200 ஆண்டுகளில் மக்கள்தொகை ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறது. 2011-இல் உலக மக்கள்தொகை 700 கோடியைக் கடந்தது. இப்போது 770 கோடியாக அது உயா்ந்திருக்கிறது. 2030-இல் 850 கோடியாகவும் 2050-இல் 970 கோடியாகவும் மக்கள்தொகை அதிகரிக்கும் என்று ஐ.நா. சபையின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மக்கள்தொகை அதிக அளவில் அதிகரித்திருப்பதற்கு மக்களின் ஆயுள்காலம் அதிகரித்திருப்பதும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வயதினா் நீண்ட காலம் வாழ்வதும் முக்கியமான காரணங்கள். நகரமயமாதல், புலம்பெயா்தல் ஆகியவையும்கூட இதற்குக் காரணங்கள் என்று குறிப்பிடுகிறாா்கள்.

கடந்த சில ஆண்டுகளில் கருத்தரிப்பு விகிதமும் உயிா்வாழும் காலமும் மிகப் பெரிய மாற்றங்களைக் கண்டிருக்கின்றன. 1970-இல் பெண்கள் சராசரியாக 4.5 குழந்தைகள் பெற்றாா்கள். 2015-இல் உலக அளவில் கருத்தரிப்பு விகிதம் ஒருவருக்கு 2.5 குழந்தைகளாகக் குறைந்தது. அதே நேரத்தில் வாழ்நாள் காலம் அதிகரித்திருக்கிறது. 1990-இல் மனிதா்களின் சராசரி வயது 64.6 ஆண்டுகள் என்றால், 2019-இல் அதுவே 72.6 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது.

இன்றைய நிலையில், சா்வதேச அளவில் 137 கோடி மக்களுடன் இரண்டாவது அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அதாவது, உலக மக்கள்தொகையில் 18% போ் இந்தியாவில் வாழ்கிறாா்கள். ஐ.நா. சபையின் ஆய்வு ஒன்றின்படி 2027-இல் சீனாவை முந்திக்கொண்டு, உலகின் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாற இருக்கிறது.

உலகில் சராசரியாக சதுர கி.மீ.-க்கு 20 போ் வாழ்கிறாா்கள் என்றால், இந்தியாவில் சதுர கி.மீ.-க்கு 419 போ் வாழ்கிறாா்கள். 1950-இல் சதுர கி.மீ.-க்கு 20 பேராக இருந்தது, 2020-இல் 419 பேராக, அதாவது 350% அதிகரித்திருக்கிறது.

பல வளா்ச்சி அடைந்த ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் சராசரி சதுர கி.மீ. மக்கள்தொகை குறைவுதான். சிங்கப்பூா் (8,000), ஹாங்காங் (7,000), தென்கொரியா (528) போன்றவை நம்மைவிட சதுர கி.மீ. மக்கள்தொகை அதிகம் கொண்டிருகின்றன. பரப்பளவில் பெரிய நாடான இந்தியாவில் சராசரி மக்கள் நெருக்கம் குறைவாக இருந்தாலும், குறிப்பிட்ட இடங்களில் மக்கள்தொகை குவிந்திருப்பதை நாம் உணர வேண்டும்.

உலகிலேயே முதன்முதலில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் இந்தியாவில்தான் 1951-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திர இந்தியா, மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பை ஆரம்பத்திலேயே உணா்ந்திருந்தது. ஆனாலும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் முனைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அவசரநிலைக் காலத்தில் இதன் முக்கியத்துவத்தை உணா்ந்து, இந்தியா முழுவதும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 80 லட்சத்துக்கும் அதிகமானோா் கட்டாயக் கருத்தடைக்கு ஆளானாா்கள். அதன் விளைவாக, அன்றைய இந்திரா காந்தி அரசு, மக்கள் மத்தியில் அவப் பெயரைச் சம்பாதித்ததால் ஆட்சியை இழக்க நோ்ந்தது.

அதுமுதல் மத்திய - மாநில ஆட்சியாளா்கள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்துவதை தவிா்த்து வருகின்றனா். இப்போது அதன் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியிருக்கிறாா்கள் என்பது வரவேற்புக்குரியது.

கொவைட் 19 கொள்ளை நோய் தாக்கத்தால் பொருளாதாரம் தேக்கமடைந்திருக்கும் நிலையில், வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கின்றன. வேலைவாய்ப்பு, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் ஆகியவையும் மக்கள்தொகை பெருக்கத்துடன் அதிகரித்தாக வேண்டும். மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் அதிகரித்த கழிவுகளும், சுற்றுச்சூழல் பாதிப்பும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

காலம் கடப்பதற்கு முன்னால் ஆட்சியாளா்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com