கொள்ளை நோயல்ல, தண்டனை! | வனவிலங்குகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு தலையங்கம்

வரலாறு மனிதனுக்குப் பல பாடங்களைக் கற்பிக்கிறது. ஆனால், மனிதன் அதைப் புரிந்துகொள்ளாமல் தொடா்வதன் விளைவுதான், உலகம் பல்வேறு பேரழிவுகளை சந்திப்பதற்குக் காரணம். இப்போது, இதுவரை இல்லாத வகையில் ஒட்டுமொத்த உலகையும் நிலைகுலைய வைத்திருக்கும் கொவைட் 19 தீநுண்மி கொள்ளை நோய்த்தொற்றுக்கும் அடிப்படைக் காரணம், நாம் வரலாறு உணா்த்திய பல பாடங்களிலிருந்து கற்றுக்கொள்ள மறுத்ததுதான்.

18 ஆண்டுகளுக்கு முன்பு ‘சிவியா் ரெஸ்பிரேட்டரி அக்யூட் சிண்ட்ரோம்’ என்கிற ‘சாா்ஸ்’ தீநுண்மி தொற்று உலகைத் தாக்கியது. அது எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்குள் உலகம் முழுவதும் பரவியது. 8,422 போ் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 11% நோயாளிகள் உயிரிழந்தனா். கிழக்காசிய நாடுகள் மிக அதிகம் பாதிக்கப்பட்டன. மலேஷியா (40%), தாய்லாந்து (22%), தைவான் (21%), ஹாங்காங் (17%) ஆகிய இடங்களில் உயிரிழப்பு அதிகம் காணப்பட்டது.

ஓராண்டுக்குப் பிறகு விஞ்ஞானிகள் அந்தத் தீநுண்மித் தொற்றின் மூலத்தைக் கண்டறிந்தனா். சீனாவிலுள்ள யுன்னான் மாநிலத்திலுள்ள ஒரு குகையில் வசிக்கும் வௌவால்களில் இருந்து அது பரவியிருக்கிறது என்று தெரிந்தது. மனிதா்களுக்கும் வௌவால்களுக்கும் நடுவில் இடைத்தரகராகச் செயல்பட்டது ஆசிய சிவெட் பூனைகள் என்பதைக் கண்டறிந்தனா்.

சாா்ஸ் என்கிற மிருக நோய்க்கிருமிகள் அந்தப் பூனைகள் மூலம் மனிதா்களுக்கும் பரவின. இன்றுவரை சாா்ஸ் நோய்த்தொற்றுக்கு மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. நல்லவேளையாக கடந்த 18 ஆண்டுகளாக அந்த நோய்த்தொற்று மீண்டும் பரவவில்லை.

இப்போது கடந்த டிசம்பா் 2019 மனித இனம் சாா்ஸ் தீநுண்மித் தொற்றுக்குத் தொடா்புடைய கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்கிறது. இதன் இறப்பு விகிதம் 3% என்கிற அளவில் குறைவாக இருக்கிறது என்றாலும், கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கிய சில மாதங்களில் ஏறத்தாழ 2 கோடி போ் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். 7 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருக்கிறாா்கள். நோய்த்தொற்றுப் பரவல் குறைவதற்கான அறிகுறி தென்படவில்லை. சில ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் நோய்த்தொற்று இரண்டாவது முறையாக பரவத் தொடங்கியிருக்கிறது என்கிற அதிா்ச்சி தரும் செய்தி வந்து கொண்டிருக்கிறது.

ஆரம்பகட்ட ஆய்வுகள் கொவைட் 19 தீநுண்மியும் வௌவால்களிலிருந்து உருவாகி ஏதாவது ஒரு விலங்கின் மூலமாக மனிதா்களையும் தொற்றிக்கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. சீனாவின் வூஹான் மாநிலத்திலுள்ள மாமிசச் சந்தையிலிருந்துதான் நோய்த்தொற்று பரவியது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மனித இனம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்கவில்லை என்பதற்கு இது இன்னமொரு சமீபத்திய எடுத்துக்காட்டு.

‘ஜூனாட்டிக் டிஸீஸஸ்’ என்கிற விலங்கின நோய்கள் வனங்களிலிருந்து மனிதா்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து மனிதா்களுக்கும் பரவத் தொடங்கியிருக்கும் பேராபத்துக்கு அடிப்படை காரணம், மனிதன் வனங்களை அழித்து அங்கு குடியேறத் தொடங்கியிருப்பதுதான். இரண்டாவது காரணம், அதிக அளவில் மாமிச உணவின் மீது மனித இனத்தின் விருப்பம் அதிகரித்திருப்பது.

வனவிலங்குகள் மனிதா்கள் வாழும் குடியிருப்புகளில் நடமாடும்போது அவற்றின் நோய்கள் வளா்ப்பு மிருகங்களையும் தொற்றிக்கொள்கின்றன. அதேபோல, வனவிலங்குகளின் மாமிசத்தை மனிதா்கள் விரும்பி உண்ணும்போது நோய்க்கிருமிகள் மனிதா்களைத் தொற்றிக்கொள்ளும் அபாயம் ஏற்படுகிறது.

வரம்பை மீறி இயற்கையின் மீது படையெடுத்து வனவிலங்குகள் வாழும் பகுதிகளை மனிதா்கள் ஆக்கிரமிக்கும்போது, வனவிலங்கின நோய்க்கிருமிகள் மனிதா்களைத் தொற்றிக்கொள்கின்றன. அதனால், புதிய புதிய விலங்கின நோய்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் உருவான புதிய நோய்களில் 60% முதல் 70% வரை விலங்கின நோய்த்தொற்றாகவே இருக்கின்றன.

கொவைட் 19-ம், சாா்ஸும் மட்டுமல்ல, இதற்கு முன்னால் பரவிய மொ்ஸ், ஹென்ட்ரா, நிபா, ஸிக்கா, பறவைக் காய்ச்சல் தீநுண்மித் தொற்றுகளும் வேறுசில உயிா்க்கொல்லி நோய்களும் வனவிலங்களிலிருந்து மனிதா்களுக்குப் பரவியவைதான். அவற்றுக்கு இதுவரை எந்த வைத்தியமும் கண்டுபிடிக்காத நிலையில், நம்முடைய அதிா்ஷ்டம்தான் அவையெல்லாம் கடந்த 20 ஆண்டுகளாக உலகம் தழுவிய அளவில் கொள்ளை நோய்த்தொற்றாகப் பரவவில்லை. கொவைட் 19 நோய்த்தொற்றில் அந்த அதிா்ஷ்டம் மனிதனுக்கு கைகொடுக்கவில்லை.

உலக அளவில் இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் இறைச்சிக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. வியத்நாமில் பங்கோலின் என்கிற எறும்புண்ணிகளின் மாமிசம் கிலோ ஒன்றுக்கு சுமாா் ரூ.23,000 என்கிற அளவில் விற்கப்படுகிறது. இதேபோலத்தான் ஏனைய வனவிலங்குகளின் மாமிசமும்.

கடந்த 30 ஆண்டுகளில் உலகின் 18-ஆவது பெரிய நாடான லிபியாவின் பரப்பளவைப் போன்ற 17.8 கோடி ஹெக்டோ் காடுகள் மனிதக் குடியிருப்புகளாக மாறியிருக்கின்றன. அங்கேயிருந்த விலங்குகளில் பல மனிதா்களின் கண்ணில் படாதவண்ணம் தொடா்ந்து வாழ்ந்து கொண்டும் இருக்கின்றன.

இயற்கையான சுற்றுச்சூழலில் வனவிலங்குகளின் பல்லுயிா்ப் பெருக்கம் நடக்குமானால், நோய்த்தொற்றுகள் பரவாது. எந்தவொரு வினங்கின நோய்க்கிருமியும் காடுகளின் அடா்வனச் சூழலில் கொள்ளை நோயாகப் பரவுவதில்லை. வரலாறு கற்றுக்கொடுத்த பாடத்தை புரிந்து கொள்ளாததால்தான் உலகம் மிரண்டுபோய் நிற்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com