கால் நூற்றாண்டு எதிர்பார்ப்பு! | ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த தலையங்கம்


அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்கிற ஏறத்தாழ கால் நூற்றாண்டு எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தமிழகத்தில் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டமும், அவர் மீதான அபிமானமும் தன்னிகரற்றவை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் போக்கை அவரது அரசியல் பிரவேசம் நிச்சயமாக மாற்றி அமைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு வேண்டாம். காட்சி மாற்றத்துக்காக ஏங்கித் தவித்த தமிழக வாக்காளர்களுக்கு இதுவரை கிடைத்ததெல்லாம் வெறும் ஆட்சி மாற்றங்கள் மட்டுமே. ரஜினிகாந்தின் வருகை, கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கி விடாதா என்கிற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதா என்கிற கேள்வி அபத்தமானது. இந்தக் கேள்வியை திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு கட்சி எழுப்பினால் அதைவிடப் போலித்தனம் வேறு எதுவும் இருந்துவிட முடியாது. எம்ஜிஆரின் சினிமா செல்வாக்கைப் பயன்படுத்தி வளர்ந்த கட்சி திமுக என்பது மட்டுமல்ல, திமுக தலைமையின் இப்போதைய மூன்றாம் தலைமுறை வாரிசே திரையுலகப் பின்னணியுடன்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

அதிமுக என்றைக்குமே தனது திரையுலகத் தொடர்பை மறுத்ததும் இல்லை; குறைத்து மதிப்பிட்டதும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரின் திரையுலக செல்வாக்கின் பின்னணியில்தான் அந்தக் கட்சியின் பிம்பமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை நடிகர் சிவாஜி கணேசனையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை நடிகைகள் குஷ்பூ-வையும், நக்மா-வையும் தனது அடையாளங்களாக வளையவிட்ட காங்கிரஸ் கட்சியும், எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுகவின் தயவால் ஒருசில தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் இயக்கங்களும்கூட, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சிக்க முடியாது.

கலைத்துறையினர், அதிலும் குறிப்பாக, நடிக - நடிகையர், அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. இது தமிழகத்தில் மட்டுமே காணப்படும் போக்குமல்ல. உலகம் முழுவதும் நாடாண்ட நடிகர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், ஹாலிவுட் நடிகர்கள் கிளின்ட் ஈஸ்ட்வுட், அர்னால்டு ஸ்வாஸ்னேகர், பிலிப்பின்ஸ் அதிபர் ஜோசப் எஸ்ட்ராடா, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ùஸலன்ஸ்கி என்று அரசியலில் வெற்றி பவனி வந்த திரையுலக நட்சத்திரங்கள் ஏராளம் ஏராளம்.

இந்தியாவிலும் சரி, தமிழகத்தில் எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆரில் தொடங்கிய நட்சத்திர அரசியல் பவனி, என்.டி. ராமா ராவ், வி.என். ஜானகி, ஜெயலலிதா ஆகியோரை முதல்வர்களாகவும், திலீப்குமார், சுனில்தத், ராஜேஷ்கன்னா, அமிதாப் பச்சன், சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி, வினோத் கன்னா, ஜெயப்ரதா தொடங்கிப் பலரை நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உச்சத்தில் ஏற்றி வைத்தது. தொழில்முறை அரசியல்வாதிகளைவிட, சினிமா நட்சத்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைப்பதற்கு, அரசியல் பிழைப்பாக மாறிவிட்டதுதான் காரணம்.

அரசியல் கட்சிகள் மீதும், அரசியல் தலைவர்கள் மீதும், நிர்வாக அமைப்பின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில், மூன்று தலைமுறைக்கான பணமும், உச்சகட்ட புகழும் சேர்த்துவிட்ட நடிகர்கள், ஊழலற்ற, நேர்மையான ஆட்சியைத் தந்துவிட மாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. மாற்றத்துக்காக ஏங்கும் மக்களுக்கு, திரை நட்சத்திரங்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தெரிகிறார்கள். 

அதிலும்கூட, அவர்கள் எல்லா நட்சத்திரங்களையும் ஏற்றுக் கொண்டுவிடுவதில்லை. நல்லவர்கள், அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்கள் என்கிற நம்பிக்கையை எழுப்புகிறவர்களுக்குத்தான் ஆதரவளிக்கிறார்கள்.

ஜனவரியில் கட்சி தொடங்கி, சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருப்பதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். அவர் முன்னால் இருக்கும் சவால் சாமானியமானது அல்ல. அடுத்த நான்கைந்து மாதங்களில் அமைப்பு ரீதியாகக் கட்சியைக் கட்டமைத்தாக வேண்டும். சரியான, தெளிவான கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் அறிவித்தாக வேண்டும். 

ஏனைய கட்சிகளிலிருந்து பதவி ஆசையாலும், புகலிடம் தேடியும் தன்னைச் சூழ்ந்து கொள்ளத் துடிக்கும் சந்தர்ப்பவாதிகளை இனம் கண்டு அகற்றி நிறுத்த அவருக்குத் தெரிய வேண்டும், துணிவு வேண்டும். இல்லையென்றால், அவரை மாற்றத்தின் அடையாளமாக மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.

ரஜினிகாந்தின் "ஆன்மிக அரசியல்' என்கிற வார்த்தை "இந்துத்துவா' அரசியல் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அது திராவிட இயக்கத்தினரின் இறைமறுப்புக் கொள்கைக்கு எதிரான அரசியல்தானே தவிர, இந்துமதம் சார்ந்த அரசியல் அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியாக வேண்டும். உதட்டளவில் பகுத்தறிவும், செயலில் பாசிசமும் கொண்டு இயங்கும் திராவிட இயக்கத்தின் வம்சாவளிக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் தனது இலக்கு என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மக்கள் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தில் எதிர்பார்ப்பது ஆட்சி மாற்றத்தை அல்ல; காட்சி மாற்றத்தை. "வம்சாவளி' அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாற்று அரசியலை. "இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் இல்லை' என்பதை இப்போதாவது ரஜினிகாந்த் உணர்ந்ததில் "மகிழ்ச்சி'!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com