மனிதனும் மிருகமும்! | புலிகளின் எண்ணிக்கை குறித்த தலையங்கம்

நடிகர் ரஜினிகாந்த், பிரிட்டிஷ் வனவியல் ஆர்வலர் பியர் கிரில்ஸின் "மேன் வெர்சஸ் வைல்டு' என்கிற தொடரில் பங்கேற்றிருப்பது வரவேற்புக்குரியது. கடந்த ஆண்டு இந்தத் தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றிருப்பதன் மூலம்,  வனவிலங்குகள் குறித்துப் பரவலான விழிப்புணர்வு உருவாக உதவியிருக்கிறார்.
இந்திய வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 2019-ஆம் ஆண்டில் 110 புலிகளை இழந்திருக்கிறோம். வேட்டையாடப்படுதல் புலிகளின் மரணத்துக்கு முக்கியமான காரணம் என்றால், சாலை விபத்துகளும், ரயில் விபத்துகளும் சிறுத்தைகளின் மரணத்துக்கு முக்கியமான காரணம் என்று கூறப்படுகிறது. 2018-இல் இறந்த 104 புலிகளில், 34 புலிகள் வேட்டையாடப்பட்டன. 2019-இல் மரணித்த 110 புலிகளில், வேட்டையாடப்பட்ட புலிகளின் எண்ணிக்கை 38.

உலகிலுள்ள 70% புலிகள் இந்தியாவில்தான் காணப்படுகின்றன. 2006-07-இல் இந்தியாவிலுள்ள புலிகளின் எண்ணிக்கை மிகக் கடுமையாகக் குறைந்தது. ஒரு காலத்தில் பல்லாயிரக்கணக்கில் இந்தியக் காடுகளில் புலிகள் வலம் வந்து கொண்டிருந்ததுபோய், வெறும் 1,400-ஆகக் குறைந்தது. அதன் பிறகு அரசு எடுத்த நடவடிக்கைகளால் புலிகளின் இனம் நல்லவேளையாக அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டது. 

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு அறிக்கை - 2018, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி, 2014-இல் 2,226-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2,967-ஆக 33% அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது. 
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்பு என்பது ஒரு மிகப் பெரிய சவால். 40,000-க்கும் அதிகமான வனத்துறையினர் 3,81,400 கி.மீ. பரப்புள்ள புலிகள் வாழும் காடுகளில் இதற்காகப் பெரும்பணியாற்றுகிறார்கள். 

இந்தியாவிலுள்ள புலிகள் காணப்படும் 20 மாநிலங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 
அடர்ந்த காடுகளில் காணப்படும் புலிகள் நடமாடும் பகுதிகளில் 26,738 கேமராக்கள் நிறுவப்படுகின்றன. புலிகள் தனிமை விரும்பிகள். மற்றவர்களது கண்களில் தட்டுப்படாமல் வாழ விரும்பும் மிருகம். அதனால், புலிகள் குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டுவது என்பதே மிகவும் கடினமான பணி. 
2014-இல் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு துல்லியமானதல்ல என்பது நிரூபிக்கப்பட்டது. புலிகளின் எண்ணிக்கை 16% மிகைப்படுத்தப்பட்டிருப்பதாக வனவியல் ஆர்வலர்கள் 
தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் டெஹ்ராடூனிலுள்ள இந்திய வன விலங்குகள் நிறுவனத்துடன் இணைந்து கணக்கெடுப்பில் புதிய சில மாற்றங்களைப் புகுத்தியது.

அதனடிப்படையில்தான் 2018 கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
1970-இல் "புராஜெக்ட் டைகர்' என்கிற புலிகள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டபோது அடர்ந்த காடுகளில் வாழும் புலிகளைஅதன் காலடித்தடத்தின் அடிப்படையில் அடையாளம் காணும் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த முறையில் ஒரு பிரச்னை இருக்கிறது. புலிகளின் கால் தடத்தை மட்டுமே வைத்துக் கணக்கெடுக்கும்போது, ஒரே புலியின் கால் அடையாளங்கள் மீண்டும் மீண்டும் எடுக்கப்படும் குறைபாடு உள்ளது என்பது கண்டறியப்பட்டது. அதனால், 2008-இல் கேமரா பதிவுகளின் மூலம் புலிகள் கணக்கெடுப்பை நடத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையிலும் சில குறைபாடுகள் இல்லாமல் இல்லை.

தொடர்ந்து வனவிலங்குகள் வாழும் அடர்ந்த காடுகளின் பரப்பளவு இந்தியாவில் குறைந்துகொண்டே வருகிறது. புலிகளின் எண்ணிக்கை ஓரளவுக்கு குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது என்றாலும்கூட, சரணாலயங்களுக்கு வெளியே உள்ள புலிகள் வாழும் பகுதிகள் குறைந்து பல இருப்பிடங்களைப் புலிகள் கைவிடுவது தெரியவந்திருக்கிறது. அரசின் புள்ளிவிவரப்படியேகூட, 20%-க்கும் அதிகமான உறைவிடங்களிலிருந்து புலிகள் அகன்று விட்டிருக்கின்றன. அதற்கு மிக முக்கியமான காரணம், அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள்.

இந்தியாவிலுள்ள 50 புலிகள் சரணாலயங்களுக்கு வெளியே உள்ள புலிகளின் வாழ்விடங்கள் குறைந்து வருவதை உடனடியாகத் தடுத்தாக வேண்டும். புலிகள் நடமாட்டம் உள்ள உறைவிடங்களையும் அதன் அருகிலுள்ள இடங்களையும் வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டாக வேண்டும். 
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, லட்சத்துக்கும் அதிகமான புலிகள் காணப்பட்ட ஆசியக் காடுகளில் இப்போது 5,000-க்கும் குறைவான புலிகள்தான் இருக்கின்றன. புலிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்ததற்கு வேட்டையாடுதல் முக்கியமான காரணம். 

புலியின் உடல் உறுப்புகள் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதால் புலிகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புலிகளின் உறுப்புகளை சந்தைப்படுத்தும் சர்வதேச வணிகத்தின் மதிப்பு, ஆண்டொன்றுக்கு 19 பில்லியன் டாலர் (1 லட்சத்து 35 ஆயிரம் கோடி) என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் சர்வதேச மாஃபியாக்கள் ஈடுபட்டிருப்பதால் அவர்களது செல்வாக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. 
புலிகள் அதிகம் வாழும் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய மூன்று நாடுகளும், புலிகளின் உறுப்புகளைத் தனது பாரம்பரிய மருந்துக்காக மிக அதிகமாக வாங்கும் சீனாவும் இணைந்து செயல்பட்டாலொழிய புலிகள் வேட்டையாடப்படுவதை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. என்றாலும் நாம் அதற்கான முயற்சிகளைக் கைவிட்டுவிட முடியாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com