Enable Javscript for better performance
இந்தியாவில் பிரதமர் மகிந்த! | இலங்கை பிரதமரின் இந்திய அரசுமுறைப் பயணம் குறித்த தலையங்கம்- Dinamani

சுடச்சுட

  

  இந்தியாவில் பிரதமர் மகிந்த! | இலங்கை பிரதமரின் இந்திய அரசுமுறைப் பயணம் குறித்த தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 10th February 2020 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவுக்கு இலங்கை முன்னுரிமை அளிக்கிறது என்பதை உணர்த்தும் விதத்தில் கடந்த நவம்பர் மாதம் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பெர்ஸி மகிந்த ராஜபட்சவின் விஜயம் அமைந்திருக்கிறது. இந்தியாவுக்கு ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக வந்திருக்கும் இலங்கைப் பிரதமர் ராஜபட்ச, தில்லியில் நடத்தியப் பேச்சுவார்த்தைகள் செயல்பாட்டுக்கு வரும்போதுதான் அவரது விஜயம் எந்த அளவுக்கு உளப்பூர்வமானது என்பதைக் கணிக்க முடியும்.
   கடந்த ஆண்டு கோத்தபய ராஜபட்ச, இலங்கையின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட சிலமணி நேரங்களில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொழும்புக்கு விரைந்தார். அவர் எதற்காக மத்திய அரசால் அனுப்பப்பட்டார், அவர் மூலம் இலங்கை அதிபருக்கு என்ன செய்தி தெரிவிக்கப்பட்டது என்பதை இருதரப்பும் வெளியிடவில்லை. அதிபர் கோத்தபயவுக்கு இந்தியா வர அழைப்பு விடுக்கப்பட்டது என்பது மட்டும் வெளியாகியது. அவரும் தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணத்துக்கு இந்தியாவைத்தான் தேர்ந்தெடுத்தார்.
   இப்போது, பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபட்சவும் தனது முதல் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார். அதிபரான பிறகு கோத்தபயவும் சரி, பிரதமரான பிறகு மகிந்தவும் சரி இன்னும் சீனாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ விஜயம் செய்யவில்லை. அந்த இரண்டு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் தலைநகர் கொழும்பு சென்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவை சந்தித்து, தங்கள் நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
   தனது அரசுமுறைப் பயணத்தின்போது அதிபர் கோத்தபய, இந்தியாதான் தங்களது மிக நெருக்கமான அண்டை நாடு என்றும், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் எந்த செயல்பாடுகளிலும் இலங்கை ஈடுபடாது என்றும் உறுதி அளித்தார். அப்போது அதிபர் கோத்தபயவுடன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை வாழ் தமிழர்களின் சமத்துவம், நீதி, சமாதானம், கெளரவம் ஆகியவற்றை முழுமையாக பாதுகாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளும் என்று தான் நம்புவதாகக் கூறினார். அதாவது, 1987 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த 13-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
   கோத்தபய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், உள்நாட்டுப் போருக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளும் முற்றிலுமாக ஸ்தம்பித்துவிட்டன. தென் இலங்கையிலிருந்து அவருக்குத் தரப்பட்ட அரசியல் அழுத்தங்கள் காரணமாக, இலங்கையின் மதச் சிறுபான்மையினரான ஹிந்துகள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு முழுமையான சம உரிமையும், பாதுகாப்பும் வழங்கும் எல்லா முயற்சிகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய மைத்ரி பால சிறீசேனா ஆட்சியின்போதே போதுமான அழுத்தம் கொடுத்து 13-ஆவது அரசமைப்பு சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை இந்தியா வலியுறுத்தாமல் இருந்துவிட்டதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
   இலங்கையின் 72-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது சிங்களத்துடன் தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்படவில்லை. 2016-இல் சிறீசேனா அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் தேசிய கீதம் இசைப்பது, கோத்தபய அரசால் நிறுத்தப்பட்டது தமிழர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபுறம் பெரும்பான்மை சிங்களர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தான் அனைவருக்குமான அதிபர் என்று கோத்தபய ராஜபட்ச தெரிவித்தாலும், அவருடைய நடவடிக்கைகள் அறிவிப்புக்கு ஏற்றாற்போல இல்லை.
   இரண்டு முறைக்கு மேல் அதிபராகத் தொடரக் கூடாது என்கிற அதிபரின் பதவிக் குறைப்புக்கான 19-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமும், சிறிய மாநில கட்சிகள் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான 15-ஆவது சட்டத்திருத்தமும் அகற்றப்பட்டு, தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அதிபர் கோத்தபய தெரிவித்திருக்கிறார். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடகிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வுக்குப் பதிலாக, வளர்ச்சி என்கிற புதிய கருத்தை முன்மொழிந்திருக்கிறார். இவையெல்லாம் பெரும்பான்மை சிங்களர்களின் வற்புறுத்தலின் காரணமாக அவர்களைத் திருப்திப்படுத்த அதிபர் விழைகிறார் என்பதைத் தெரிவிக்கின்றன.
   முதல் முறையாக இலங்கை அரசில் தமிழர்களோ, இஸ்லாமியர்களோ இல்லை. ஐ.நா. சபையின் 2015 மனித உரிமைக் குழு தீர்மானம் 30/1 கோத்தபய அரசால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறலுக்காக சிறைத் தண்டனை வழங்கப்பட்ட எல்லா ராணுவத்தினரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
   இலங்கையின் தென் பகுதியில் சீனாவின் நிழல் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. ராஜபட்ச குடும்பத்துக்கு சீனாவுடன் மிக நெருக்கமான உறவு இருப்பது உலகறிந்த ரகசியம். இந்தப் பின்னணியில்தான், இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது அதிபராக இருந்த இப்போதைய பிரதமர் மகிந்த ராஜபட்சவின் ஐந்து நாள் இந்திய அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
   தன்னைப் பதவியிலிருந்து அகற்றிய இந்தியாவைப் பகைத்துக்கொள்ள முடியாது என்கிற நிதர்சன உண்மையைப் பிரதமர் மகிந்த உணர்ந்து செயல்படப் போகிறாரா இல்லையா என்பதை ராஜபட்ச குடும்பத்தினரின் செயல்பாடுகள்தான் உணர்த்துமே தவிர, அறிக்கைகளும், ஒப்பந்தங்களும் உணர்த்தாது. இந்திய அரசின் அழுத்தத்தைப் பொருத்தும் அது அமையும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai