விவசாயியின் வெற்றி!| காவிரி டெல்டா பகுதி குறித்த தலையங்கம்

புரைதீர்த்த நன்மை பயக்கும் என்றாலும், மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான ஆட்சியில், "மக்கள் குரலே மகேசன் குரல்'. இதைப் புரிந்துகொண்ட ஆட்சிதான் நல்லாட்சி. 

காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்கிற முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் அறிவிப்பு, அவரது அரசு மக்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் அரசாக செயல்படுகிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் முதல்வரின் அறிவிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படாமல் மத்திய அரசால் நெடுவாசலிலும், ஏனைய 
காவிரி டெல்டா பகுதிகளிலும் எந்தத் திட்டத்தையும் கொண்டுவர முடியாது என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையிலேயே அறிவித்திருந்தும்கூட, எதிர்க்கட்சிகள் நெடுவாசல் பிரச்னையை அரசியலாக்கி வந்தன. 

முதல்வரின் அறிவிப்பும், அதைத் தொடர்ந்து தமிழக அரசு காவிரி டெல்டா பகுதிக்கு வழங்கும் சட்டரீதியிலான பாதுகாப்பும், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பலாம். மத்திய அரசும், தமிழக அரசின் உரிமையை ஏற்றுக்கொண்டு மதிப்பளிக்க முற்பட்டிருப்பது, முதல்வரின் முயற்சிக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.

முதல்வர் கூறியிருப்பதுபோல, இப்போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகவும் நிலைப்பாட்டை எடுத்திருக்கும் திமுகவின் ஆட்சியில்தான் இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்கிற உண்மையை சாதுர்யமாகவும், சாமர்த்தியமாகவும் தனது பிரசாரத்தால் மறைக்க முற்படுகிறது திமுக. காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி வேதாந்தா குழுமத்திற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கி இருக்கும் உத்தரவுகளை ரத்து செய்த பிறகுதான் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என்கிற திமுக முதன்மைச் செயலாளரின் அறிவிப்பு, திமுக எதிர்கொள்ளும் தர்மசங்கடத்தின் வெளிப்பாடு.

1996-இல் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சராக இருந்த டி.ஆர். பாலு, தமிழகத்தின் டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு துரப்பணப் பணிக்கான முயற்சிக்கு வித்திட்டார். 2010-இல் மத்தியில் கூட்டணியிலும், மாநிலத்தில் ஆட்சியிலும் இருந்த திமுக இதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.

2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில், இன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் அன்றைய துணை முதல்வருமான மு.க. ஸ்டாலினின் தலைமையில்தான் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்துக்கு, ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து ஆய்வுப் பணிகள் நடத்த நான்காண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கும் என்கிற புரிந்துணர்வு ஒப்பந்தம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

இந்தப் பின்னணித் தகவல்கள் அனைத்துமே மிகவும் வசதியாக மறைக்கப்படுகின்றன. நெடுவாசல் போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் அந்த உண்மை தெரிந்தும் மெளனம் காப்பது அவர்களது அரசியல் போலித்தனத்தின் வெளிப்பாடு. திமுக ஆட்சியில், மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அனுமதியுடன் தொடங்கப்பட்ட டெல்டா பகுதி மீத்தேன் துரப்பணப் பணிகள், அதிமுக அரசால் தடுத்து நிறுத்தப்பட்டன என்கிற முதல்வரின் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.

காவிரி டெல்டா என்பது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள  ஒருசில பகுதிகளும். அவற்றில் சுமார் 28 லட்சம் ஏக்கர் குறுவை, சம்பா பயிரிடப்படும் விவசாய நிலங்கள் அடங்கிய பகுதி. இந்தப் பகுதியில் நெல் விளைச்சல் மட்டுமே ஏறத்தாழ 33 லட்சம் டன். அந்தப் பகுதிகள் இப்போது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

2009-இல் மீத்தேன் துரப்பணப் பணிகளுக்காக மன்மோகன் சிங் அரசு அனுமதி வழங்கியது. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 2013-இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளித்துத் துரப்பணப் பணிகளை முடக்க உத்தரவிட்டது. 2017-இல் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மீண்டும் அனுமதி பெற்றதைத் தொடர்ந்து நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இப்போது, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்திருக்கிறது முதல்வரின் அறிவிப்பு.

வேளாண்மை தொடர்பான தொழில்கள் மட்டுமே காவிரி டெல்டா பகுதியில் அமைய வேண்டும் என்பதிலும், தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் வயல்வெளிகளை இழந்து சுற்றுச்சூழல் மாசு நிறைந்த தொழிற்சாலைப் பகுதியாகிவிடக் கூடாது என்பதிலும் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. விவசாயியான முதல்வரின் உணர்வுபூர்வமான அறிவிப்புக்கு ஆதரவளித்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை வளமான வேளாண் மண்டலமாக்க ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை வழங்க வேண்டுமே தவிர, குறுக்குசால் ஓட்டுவதை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com