சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்! | இணைய வர்த்தகம் குறித்த தலையங்கம்

இந்தியப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டிருக்கிறது இணைய வர்த்தகம். மின்னணுப் பொருள்களில் தொடங்கி, ஆயத்த ஆடைகள், மருந்துகள், புத்தகங்கள், அழகு சாதனப் பொருள்கள், காலணிகள், பொம்மைகள், அன்றாட பலசரக்குப் பொருள்கள் வரை இப்போது இணையத்தின்  மூலம் பெறப்படுகின்றன. கிராமங்களில்கூட ரயில் பயண முன்பதிவும், திரையரங்க நுழைவுச் சீட்டும் இணைய வழியில் பெறும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

பயணத் திட்டங்கள், விடுதி முன்பதிவுகள், திருமணப் பொருத்தங்கள் உள்ளிட்ட எல்லாமே இணையத்தின் மூலம் நடைபெறும் நிலையில், இணைய வர்த்தகம் என்பது சராசரி இந்தியனின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. செல்லிடப்பேசி மூலமான இணைய சேவை வந்ததுமுதல், செயலிகள் மூலம் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துமே நடைபெறும் நிலைமை ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை. 

2017-இல் 390 கோடி டாலராக (சுமார் ரூ.27,800 கோடி) இருந்த இணைய வர்த்தகத்தின் அளவு, 2026-க்குள் 2,000 கோடி டாலராக (சுமார் ரூ.1.42 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையதள வசதியும், செல்லிடப்பேசியும்தான் இந்த வளர்ச்சிக்குக் காரணங்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதைவிட உண்மை தொழில்நுட்பப் பயன்பாட்டில் இன்றைய இந்தியத் தலைமுறையினர் மேலைநாடுகளுக்கு நிகராக மாறியிருக்கிறார்கள் என்பது.

பிரசவத்தை எந்த மருத்துவமனையில் வைத்துக் கொள்வது, எந்தப் படிப்பை எந்தக் கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் தொடர்வது, அடுக்குமாடிக் குடியிருப்பை எங்கே, எந்த நிறுவனத்திடம் வாங்குவது, எங்கே கடனுதவி பெறுவது என்று எல்லாவிதத் தேவைகளுக்கும் இணையத்தை நாடுகின்ற போக்கு அதிகரித்திருப்பதால், சில நன்மைகள் இல்லாமல் இல்லை. எந்தவொரு செயல்பாடும் வெளிப்படைத் தன்மையுடன் இணையத்தில் முழுமையாக வெளியிடப்படுகிறது. முழு விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, யாரிடம் எதை வாங்கலாம் என்பதை நுகர்வோரால் தீர்மானிக்க முடிகிறது.
ஒரு பொருள் தரமானதா, மூலத்தன்மை (ஒரிஜினல்) உடையதா என்பதைத் தெரிந்து கொள்ள தொழில்நுட்பம் பல வழிமுறைகளை இணையத்தில் வழங்கியிருப்பது என்னவோ உண்மை.

அதே நேரத்தில், அந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், செயற்கை நுண்ணறிவை (ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்) பயன்படுத்தி படியெடுப்புகளை (க்ளோன்ஸ்) உருவாக்குவதும், அதை அப்பாவி நுகர்வோரை இணையத்தில் நம்ப வைத்து, சந்தைப்படுத்துவதும்கூட இணைய வர்த்தகத்தின் மூலம் நடக்கிறது. உண்மையான இலச்சினைப் பொருள்களுக்கும், பதிலிப் பொருள்களுக்கும் (போலி) வேறுபாடு காண முடியாத அளவுக்குத் தொழில்நுட்பம் மோசடிக்காரர்களுக்கு உதவுகிறது.
இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கும், இலச்சினைப் பொருள்கள் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் பிரச்னைகள் எழும்போது, அதைப் பயன்படுத்தி படியெடுப்புப் பொருள்களையும், போலி  தயாரிப்புகளையும் (கெளண்டர்பீட்ஸ்) இணையத்தின் மூலம் சந்தைப்படுத்தி லாபம் ஈட்டும் கூட்டம் அதிகரித்து வருகிறது. முறையற்ற வணிகர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால், நியாயமான இணைய வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்பது மட்டுமல்லாமல், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பலரின் வேலையிழப்பு, நுகர்வோர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், திட்டமிட்ட கிரிமினல் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கும் இது வழிகோலுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

இணைய வர்த்தகக் கொள்கையின் மாதிரி வரைவை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதில் இலச்சினை உரிமையாளர்களுக்கும், இணைய வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்குமான தெளிவான வழிமுறைகள் தரப்பட்டிருக்கின்றன. முதல் முறையாக, போலி தயாரிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள், அரசால் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

இணையத்தின் மூலம் விற்பனைக்குச் சந்தைப்படுத்தப்படுகிற அனைத்துப் பொருள்கள் குறித்தும், அதன் உற்பத்தியாளர்கள், விற்பனை நிறுவனங்கள் குறித்தும் முழு விவரங்களும் தரப்பட்டிருக்க வேண்டும். இணைய வர்த்தகத்தின் மூலம் சந்தைப்படுத்தப்படும் பொருள்களின் தரம் குறித்தும், நம்பகத்தன்மை குறித்தும் விற்பனை செய்யும் இணைய வர்த்தக நிறுவனம் உறுதிமொழி தந்தாக வேண்டும்.

அதேபோல, எந்தவொரு பொருளின் இலச்சினைதாரரும் (ட்ரேட் மார்க் உரிமையாளர்) இணைய வர்த்தகத் தளத்தில் பதிவு செய்தாக வேண்டும். இலச்சினைதாரரின் முன் அனுமதி இல்லாமல் அவர்களது பொருள்கள் விளம்பரப்படுத்தப்படவோ, விற்பனை செய்யப்படவோ கூடாது. பொருள்கள் குறித்த புகார் வந்தால், இலச்சினைதாரருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதுடன், அந்தப் பொருள் உடனடியாக விற்பனைப் பட்டியலிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

மிக அதிகமாக காப்புரிமை மீறல்கள் இணையத்தின் மூலம்தான் நடைபெறுகின்றன. பத்திரிகைகள், இதழ்கள், புத்தகங்கள் அதிக அளவில் இணையம் மூலம் திருட்டு வணிகத்துக்கு (பைரசி) ஆளாகின்றன. கணினி நிரலிகள் (கம்ப்யூட்டர் ப்ரோகிராம்ஸ்) காப்புரிமையாளர்களின் அனுமதி இல்லாமல், திருட்டு வணிகத்திற்கு உள்ளாகின்றன. திரைப்படங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். திருட்டு விசிடி மறைந்து, இணையம் மூலம் சர்வ சாதாரணமாகப் படியெடுப்புகள் பரவுகின்றன.

பெரும்பாலான திருட்டு வணிக நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து இயங்குவதால், இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் அவற்றைக் கொண்டுவருவது அசாத்தியம். முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், இணைய வர்த்தகத்தை முறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு முனைந்திருப்பதை வரவேற்றாக வேண்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com