கண்துடைப்பு நாடகம்! | பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது குறித்த தலையங்கம்

ஜமாத் உத்தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது மீது தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளில் தலா ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது லாகூர் நீதிமன்றம்.

கடந்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி ஹஃபீஸ் சயீது கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோர்ட் லக்பத் சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டார். பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. அந்த வழக்கில்தான் இப்போது ஹஃபீஸ் சயீது, அவரின் கூட்டாளி ஜாபர் இக்பால் ஆகியோருக்கு இந்த சிறைத் தண்டனையும் தலா ரூ.30,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஹஃபீஸ் சயீதும் அவரின் கூட்டாளிகளும்  நிதி திரட்டி அதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதான தண்டனை வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. இரண்டு வழக்குகளில் தலா ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம், தண்டனைக் காலத்தை ஒரே நேரத்தில் கழிக்கத் தீர்ப்பளித்திருப்பதால் அவர்கள் ஐந்தரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தால் போதும்.

வழங்கப்பட்டிருக்கும் தண்டனைக் காலத்தையும் குறைப்பதற்கான வசதியை தீர்ப்பின் ஒரு பகுதி வழங்குகிறது. அதன்மூலம் ஹஃபீஸ் சயீதின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு அவர் எப்போது வேண்டுமானாலும் விடுதலை செய்யப்படலாம். வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு வாய்ப்பு இருப்பதால் விதிக்கப்பட்டிருக்கும் தண்டனைக் காலம் தற்காலிகமானது என்பதை உறுதியாகக் கூறலாம்.

ஹஃபீஸ் சயீதுக்கும் அவரின் கூட்டாளிக்கும் இப்போது தண்டனை வழங்கித் தீர்ப்பு வழங்கியிருப்பதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. கடந்த 2018-இல், பாரீஸில் இருந்து இயங்கும் சர்வதேச பயங்கரவாதத் தடுப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையும் 2018 பிப்ரவரியில், பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை விதித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கு எதிரான "ஃபினான்ஷியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ்' என்கிற அந்த அமைப்பு, பாகிஸ்தானை சந்தேகப் பட்டியலில் வைக்க முடிவு செய்தது.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு ஹஃபீஸ் சயீது உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயல்படுவதாகத் தன்னை காட்டிக்கொண்டது.
பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாகத்தான் இருந்திருக்கின்றன. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் 1267-வது தீர்மானம் மிகுந்த அழுத்தத்துக்குப் பிறகு, சீனாவின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஹஃபீஸ் சயீது, மசூத் அசார் உள்ளிட்டோர் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர். ஆனாலும்கூட இந்தியாவுக்கு எதிரான அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளையோ காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் முயற்சியையோ அவர்கள் கைவிடவில்லை. 

2019 அக்டோபரில் பாரீஸில் கூடிய "ஃபினான்ஷியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ்' மீண்டும் பாகிஸ்தானை எச்சரித்தது மட்டுமல்லாமல், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்கும் அமைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அழுத்தம் கொடுத்தது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் திருப்தி ஏற்படாவிட்டால்  கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டிவரும் என்றும் எச்சரித்தது. அப்படி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளும் முடக்கப்படும் என்பது மட்டுமல்லாமல், முதலீடுகளும் தடை செய்யப்படும். அப்படியொரு சூழலில்தான் ஹஃபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் இப்போது முற்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டே  "ஃபினான்ஷியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ்' பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுப்பதற்கு நான்கு மாத அவகாசம் வழங்கியதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. பாகிஸ்தானின் நெருக்கமான நட்பு நாடான சீனா, இப்போது  "ஃபினான்ஷியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ்' அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் அந்தச் சலுகை வழங்கப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16)  பாரீஸில் கூடவிருக்கும்  "ஃபினான்ஷியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ்' கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கையைத் தடுக்க முடியாமல் பாகிஸ்தானைக் கருப்புப் பட்டியலில் சேர்த்தாக வேண்டிய கட்டாயம் சீனாவுக்கு ஏற்படக்கூடும். அதனால்தான் அவசரமாக லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு, ஹஃபீஸ் சயீதுக்கும் அவரின் கூட்டாளிக்கும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.


2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதில் மூளையாக இயங்கிய  ஹஃபீஸ் சயீது மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காமல் தள்ளிப்போடுகிறது பாகிஸ்தான். என்னதான் சாட்சியங்களைக் கொடுத்தாலும் அவற்றை நிராகரிக்கின்றன பாகிஸ்தான் நீதிமன்றங்கள். 

இந்த நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை வற்புறுத்த ஒரே வழி அந்த நாட்டுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளையும் முதலீடுகளையும் முடக்குவதுதான் என்பதை லாகூர் நீதிமன்றத்தின் அவசரத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. 
இப்போதைய நடவடிக்கையும்கூட கண்துடைப்பு நாடகமாகத்தான் இருக்கப் போகிறது என்பதைக் கூற ஆருடம் தேவையில்லை. சர்வதேச அழுத்தம் குறைந்துவிடாமல் இருப்பதுதான் இதற்குத் தீர்வு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com