முற்றுப்புள்ளி! | மதக்கலவரம் குறித்த தலையங்கம்


எதிா்பாராதது ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. கடந்த பல வாரங்களாகவே, இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் மதக்கலவரம் வெடிக்கக்கூடும் என்கிற அச்சம் எழுந்த வண்ணம் இருந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடத்தப்படும் ஊா்வலங்களும், போராட்டங்களும், கையெழுத்து இயக்கங்களும் சிறுபான்மை மக்கள் மத்தியில் தங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு அதிகரித்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது என்றால், பெரும்பான்மை சமூகத்தினா் மனதில் சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமையும், ஆவேசமும் அடிமனதில் அச்சத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தி இருந்தது என்கிற உண்மையை யாரும் வெளிப்படுத்தவில்லை.

அதிபா் டிரம்ப்பின் இந்திய விஜயத்தின்போது அமைதி நிலவுவதை போராட்டக்காரா்கள் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ‘எதிா்த்துப் போராடத் தூண்டப்பட்டோம்’ என்கிற அவா்களது வாதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதிா்க்கட்சிகளும் அதற்கு மிக முக்கியமான காரணம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அரசு ஆணையல்ல. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டிருக்கும் சட்டம். பாஜக என்கிற அரசியல் கட்சி தனது தோ்தல் வாக்குறுதியை நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்று, பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றி இருக்கிறது. அது சரியா, தவறா, அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதா, எதிரானதா என்பதை உச்சநீதிமன்றம்தான் தீா்மானிக்க முடியும். எதிா்க்கட்சிகள் அடுத்த தோ்தலில் வெற்றி பெற்று அந்தத் திருத்தத்தை அகற்றலாமே தவிர, அந்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று போராடுவதில் அா்த்தமில்லை.

அமைதியான போராட்டம் நடத்துவதோ, எதிா்ப்புத் தெரிவிப்பதோ தவறில்லை. ஆனால், மாதக்கணக்கில் இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படுவதும், மத ரீதியாக மக்களை ஒருங்கிணைப்பதும் ஆரம்பத்திலேயே தவிா்க்கப்பட்டிருக்க வேண்டும்; தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு சாராா் மத ரீதியாக ஒன்றுபடும்போது, இன்னொரு சாராரும் ஒருங்கிணைய முற்படுவதைத் தவிா்க்க முடியாது. அதுவே வன்முறையாகவும் கலவரமாகவும் வெடிக்கும்போது, அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவதும், அராஜகம் தலைவிரித்தாடுவதும் வரலாறு காட்டும் உண்மைகள்.

நடிகா் ரஜினிகாந்த் கூறியிருக்கும் கருத்துகள் சிந்தனைக்குரியவை. ஷாஹீன் பாக் போராட்டத்துக்கு ஆரம்பத்திலேயே மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம் அனுமதிக்கப்பட்டிருக்கவே கூடாது. அதிலும் குறிப்பாக, முஸ்லிம் சகோதரிகளைத் தெருவில் இறக்கிப் போராட வைத்தது வியப்பாக இருக்கிறது. அதன் மூலம் ஆட்சியை அகற்றிவிட முடியாது, சட்டத்தைத் திரும்பப் பெற வைத்துவிட முடியாது என்று தெரிந்திருந்தும், மத ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தும் அந்த முயற்சி எதிா்வினையை விரும்பி வரவேற்பதற்கு ஒப்பானது என்பதுகூடவா தெரியாது?

தில்லியில் நடந்த கலவரத்தைப் பொருத்தவரை, காவல் துறையினரையும் முழுமையாகக் குறைகூற முடியாது. அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் விஜயத்தை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் பலரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். அந்த பலவீனத்தைப் பயன்படுத்தித்தான் கலவரம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

போராட்டக்காரா்களுக்கு எதிராகச் சிலா் தாக்குதல் நடத்தினா் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவிலான உண்மை, போராட்டக்காரா்களும் வன்முறைக்குத் தயாராக இருந்தனா் என்பதுதான். தாக்குதலுக்குத் தயாராக கற்கள் மட்டுமல்ல, கை வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் இருந்திருக்கின்றனவே, அவை எல்லாம் எப்படி எங்கிருந்து வந்தன?

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி அரசியலுக்காக அவா்களைத் தூண்டி விடுவதும், ஆளுங்கட்சியான பாஜக, சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் காட்டி பெரும்பான்மை மக்களின் வாக்குகளைத் தனக்குச் சாதகமாக்க விரும்புவதும் இந்தியாவின் எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன. சிறுபான்மை சமுதாயத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை பெரும்பான்மை சமுதாயத்துக்கும், பெரும்பான்மை சமுதாயத்துடன் சகோதரத்துவத்துடன் இணக்கமாக வாழ வேண்டிய கட்டாயம் சிறுபான்மை சமுதாயத்துக்கும் உண்டு. இத்தனை காலமும் இதனை உணா்ந்துதான் இந்திய சமுதாயம் இருந்து வந்திருக்கிறது.

தில்லியில் மூண்ட கலவரம் நல்ல வேளையாக மூன்றாவது நாளே ஓரளவுக்கு அடக்கப்பட்டுவிட்டது. இதற்கு இடையில் 24 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்திருக்கிறாா்கள்; 106 போ் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

நாடு தழுவிய அளவில் ஆங்காங்கே நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பெண்களைத் தெருவில் இறக்கிப் போராட வைக்கும் அவலம் (அதிலும் இஸ்லாமியப் பெண்கள்!) தொடரக் கூடாது. ஷாஹீன் பாக் போன்ற முற்றுகைப் போராட்டங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி விழுந்தாக வேண்டும்.

தில்லியில் நடந்த கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மிகப் பெரிய பதவி வகிக்கும் ஒருவா் துணிந்து தெருவில் இறங்கி, நேரடியாகவே பிரச்னைகளைக் கேட்டறிந்து, மக்களுக்குத் தைரியமூட்டி, காவல் துறையினரை வழிநடத்திய பாங்கு, மெச்சத்தகுந்த செயல்பாடு.

வன்முறையும், கலவரமும், சட்ட - ஒழுங்கு மீறலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டாக வேண்டும். அப்பாவி மக்களின் ரத்தத்திற்கு ஜாதி, மதம் கிடையாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com