மீண்டும் பணியிட சர்ச்சை! | நீதித்துறை பணியிடமாற்றம் குறித்த தலையங்கம்



நீதித்துறை பணியிடமாற்றம் மீண்டும் விவாதப்பொருளாகி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளீதர், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

நீதிபதிகளின் நியமனமும், பணியிடமாற்றமும் கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட்டும்கூட, இதுபோல சர்ச்சைகள் எழுவதும் விமர்சனங்கள் உருவாவதும் வழக்கமாகிவிட்டது. 

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளீதரை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பிப்ரவரி 12-ஆம் தேதி பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில்தான் நீதிபதி முரளீதர் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, தற்போது பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரவி சங்கர் ஜா விரைவிலேயே உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிலையில், பணிமூப்பு அடிப்படையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு முரளீதருக்கு கிடைக்கும் என்கிற பின்னணியை வைத்துப் பார்க்கும்போது, அவரின் பணியிடமாற்றத்துக்கு அரசியல் நோக்கம் கற்பிக்க வேண்டிய அவசியம் புரியவில்லை.

அண்மையில் நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முரளீதர் அமர்வுக்கு கடந்த புதன்கிழமை வந்தது. நியாயமாகப் பார்த்தால் அன்றைய அமர்வில் அந்த வழக்கை விசாரித்திருக்க வேண்டியவர் தலைமை நீதிபதி டி.என்.படேல். அவர் விடுப்பில் இருந்ததால், அந்த விசாரணை நீதிபதி முரளீதர் அமர்வுக்கு வந்தது. நீதிபதி முரளீதர் அந்த விசாரணையை எடுத்துக்கொள்ளாமல் அடுத்த நாளுக்கு ஒத்திவைத்தார். ஒத்திவைக்கும்போது வன்முறையாளர்கள் மீதும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்துக் கண்டனம் தெரிவித்தார். அடுத்த நாள் தலைமை நீதிபதி டி.என்.படேலின் தலைமையிலான அமர்வில் அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது மத்திய அரசோ, தில்லி காவல் துறையோ நீதிபதி முரளீதரை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அப்படியிருக்கும்போது நீதிபதி முரளீதரின் பணியிடமாற்றம் விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டிய அவசியம் இல்லை.

புதன்கிழமை வழக்கு வந்ததும் அதை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கும்போது நீதிபதி முரளீதர் காவல் துறையின் மெத்தனம் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் சில கருத்துகளை வெளியிட்டது என்னவோ உண்மை. வழக்கை விசாரிக்காமல் அடுத்த நாளுக்கு ஒத்திப்போடும்போது நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து நீதிபதி முரளீதர்  கருத்துத் தெரிவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

நீதிபதிகளின் நியமனங்களும், பணியிடமாற்றங்களும் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. ஒவ்வொரு பணியிடமாற்றத்துக்கும் உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தஹில ராமாணீ மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. "முழு விவரத்தையும் வெளியிடத் தயார்' என்று உச்சநீதிமன்ற கொலீஜியம் தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிபதி தஹில ராமாணீ பதவி விலகியதும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் அடங்கிவிட்டன. அதேபோல, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சி. தர்மாதிகாரி தனிப்பட்ட காரணங்களுக்காக பணியிடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் பதவி விலகியபோதும் விமர்சனங்கள் எழுந்தன. அதுவும் அடங்கியது.

உயர்நீதிமன்றங்களைப் பொருத்தவரை, பெரிய உயர்நீதிமன்றம், சிறிய உயர்நீதிமன்றம் என்றெல்லாம் கிடையாது. அதேபோல, உயர்நீதிமன்ற நீதிபதிகளும், தலைமை நீதிபதிகளும் ஒரே அளவிலான அதிகாரங்களையும் மரியாதையையும் பெற்றவர்கள். கையாளப்படும் வழக்குகள்தான் நீதிமன்றங்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றன. சிறிய நீதிமன்றமாக இருந்தாலும், தலைநகரத்தில் இருப்பதால் தில்லி உயர்நீதிமன்றம் பிரபலமாக இருக்கிறது, அவ்வளவே. இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் தேவையற்ற விமர்சனங்களுக்கு இடமிருக்காது. 

இந்தியா ஒரு விசித்திரமான நாடு. உலகிலேயே இந்தியாவில்தான் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்குத் தாங்களே ஊதிய உயர்வையும், இதர பலன்களையும் வழங்கிக் கொள்வதற்கு நமது அரசியல் சாசனம் வழிவகுத்திருக்கிறது. அதேபோல, நீதிபதிகளே நீதிபதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விசித்திரமான நடைமுறையும் இந்தியாவில்தான் காணப்படுகிறது. இரண்டாவது நீதிபதிகள் வழக்கில் (1987) கொலீஜியம் முறை அறிமுகப்படுத்தப்பட்டு நீதிபதிகளின் நியமனத்திலும் பணியிடமாற்றத்திலும் அரசுக்கு முக்கியமான பங்கு இல்லாத நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் முறை மட்டுமல்ல, மாவட்ட அளவிலான நீதிபதிகள் நியமன முறையிலும் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். அரசியல் பின்னணி உடையவர்கள் ஆட்சியாளர்களின் ஆதரவில் நீதித்துறையில் நுழையவும், உச்சநீதிமன்றம் வரை உயரவும் இப்போதைய முறையில் வாய்ப்பு காணப்படுகிறது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய்ப் பணிபோல, இந்திய நீதித் துறைப் பணிக்கும் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவதும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கப்படுவதும்தான் நீதித் துறையின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com