உள்ளத்தனையதாம் உயர்வு! | விளையாட்டு வீரர்கள் குறித்த தலையங்கம்


விளையாட்டு வீரர்களைவிட விளையாட்டு வீராங்கனைகள் சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த ஆண்டாக 2019 நினைவுகூரப்படும். நான்கு மாதங்களுக்கு முன்பு சுவிட்ஸர்லாந்தில் பி.வி. சிந்து உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் என்றால், இப்போது 32 வயது கோனேரு ஹம்பி, "ரேபிட்' பிரிவு சதுரங்கப் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார். 

சதுரங்கத்தில் பல உலக சாம்பியன் பட்டங்களை வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, சதுரங்க "ரேபிட்' பிரிவில் சாம்பியன்ஷிப் பெறும் முதல் பெண் வீராங்கனை கோனேரு ஹம்பிதான். ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் உலக சாம்பியன்களை கொண்ட தேசமாக இப்போது இந்தியா உயர்ந்திருக்கிறது.

கோனேரு ஹம்பியின் உலக சாம்பியன் பட்டம் தனிச் சிறப்புப் பெறுகிறது. இரண்டு ஆண்டு பேறுகால ஓய்வுக்குப் பிறகு மீண்டும் சதுரங்க அரங்கில் நுழைந்த கோனேரு ஹம்பிக்கு அந்த விளையாட்டில் முழுக் கவனத்தையும் மீட்டெடுக்க இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது. பேறுகால ஓய்வின்போது போட்டிகளில் பங்கு கொள்ளாவிட்டாலும், விளையாட்டின் மீது இருந்த ஈடுபாட்டிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் சக வீரர்களுடன் தொடர்பில் இருந்தார் என்பது மட்டுமல்ல, அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தன்னை தயார்படுத்தியும் வந்தார் கோனேரு ஹம்பி. 

மீண்டும் சதுரங்கப் பந்தய அரங்கிற்குள் நுழைந்தார் என்றாலும், சட்டென்று காய்களை நகர்த்தும் முடிவுகளை எடுப்பதில் அவருக்குச் சிரமங்கள் இருந்தன. கடந்த ஆண்டு இறுதியில் ஜார்ஜியாவில் நடந்த ஒலிம்பியாட் பந்தயத்தில் அவரது பலவீனம் வெளிப்பட்டது. அவரால் முன்பிருந்த வேகத்துடன் முடிவெடுத்துக் காய்களை நகர்த்த முடியவில்லை. உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் அவர் வெளியேறியபோது, அது மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது. 

அப்போது, ஹங்கேரி சதுரங்க வீரர் ஜூடிட் போல்கர், அவருக்கு ஆறுதல் கூறினார். இன்னும் சில ஆட்டங்களில் அவரால் பழைய வேகத்தை திரும்பப் பெற முடியும் என்றும், அவருடைய வெற்றிகள் இனிமேல்தான் காத்திருக்கின்றன என்றும் போல்கர், ஹம்பிக்குக் கொடுத்த உற்சாகம் அவருக்குப் புதிய தெம்பை அளித்தது. 

சதுரங்க விளையாட்டில் மூன்று பிரிவுகள் உண்டு. "கிளாஸிகல்' பிரிவு என்பது, கிரிக்கெட் விளையாட்டின் டெஸ்ட் ஆட்டங்களைப் போன்றது. சதுரங்க விளையாட்டு வீரர்களுக்குத் தங்களது அடுத்த நகர்வை தீர்மானித்துக்கொள்ள நேரமெடுத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் தவறான நகர்வுகளைக் குறைத்துக்கொள்ள முடியும். கோனேரு ஹம்பியும்கூட "கிளாஸிகல்' பிரிவை விரும்பும் வீராங்கனைதான். "கிளாஸிகல்' பிரிவு வெற்றியைத்தான் கிராண்ட் மாஸ்டர் வெற்றியாகக் கொண்டாடுவார்கள். 

"ரேபிட்' பிரிவு என்பது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தைப் போன்றது. "பிளிட்ஸ்' பிரிவு என்பது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தைப் போன்றது. இப்போது கோனேரு ஹம்பி வென்றிருக்கும் உலக சாம்பியன்ஷிப், சதுரங்க ஆட்டத்தின் "ரேபிட்' பிரிவில் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை மாஸ்கோவில் நடந்த "ரேபிட்' பிரிவுக்கான உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் கோனேரு ஹம்பியின் வெற்றி ஒருவகையில் அவரே எதிர்பாராதது. முதல் மூன்று நபர்களில் ஒருவராகத்தான் வருவோம் என்றுதான் நினைத்தார். 

சூழ்நிலைகள் திடீரென்று மாறி அவருக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தியது. 

சீன சதுரங்க வீராங்கனை லீ டிங்ஜி, அதற்கு முந்தைய சுற்றில் எக்கட்டரீனா ஹட்டாலிக்கிடம் தோல்வி அடைந்திருந்தார். டிங்ஜியுடனான முதல் சுற்றில் தோற்ற ஹம்பி, இரண்டாவது சுற்றில் சமன் செய்து மூன்றாவது சுற்றில் தனது சீன எதிராளியை வென்று, விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலக சதுரங்க "ரேபிட்' சாம்பியன்ஷிப்பை வென்ற இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையைத் தேடிக்கொண்டார். 

ஹம்பியின் தொடக்கக்கால சதுரங்க விளையாட்டுக்கு மாநில அளவிலான சதுரங்க வீரராக இருந்த அவரின் தந்தை கோனேரு அசோக் முக்கியமான காரணம். ஆரம்பத்தில் "ரேபிட்' பிரிவு ஆட்டக்காரராகத்தான் தனது சதுரங்கப் பயணத்தை அவர் தொடங்கினார். ஐந்து வயது முதலே விளையாடத் தொடங்கிய அவரின் கவனம் "ரேபிட்' பிரிவிலிருந்து "கிளாஸிகல்' பிரிவுக்குத் திரும்பியது. 

1997-இல் 10 வயதுக்குக் கீழே உள்ள சாம்பியன்ஷிப் போட்டியில், உலக அளவில் வெற்றி பெற்றபோது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கோனேரு ஹம்பி. 14 வயதில் 20 வயதுக்கு உட்பட்டவர்களின் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் வென்றபோதே அவர் சர்வதேச அரங்கில் தொடர்ந்து வலம் வருவார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தினார். விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்தியாவின் தலைசிறந்த சதுரங்க ஆட்டக்காரர் என்பதை ஆரம்பத்திலிருந்தே அவர் நிரூபித்து வருகிறார். 

மூன்று முறை உலக சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிச் சுற்று வரையும், ஒருமுறை இறுதிச் சுற்று வரையும் சென்ற கோனேரு ஹம்பியின் இப்போதைய வெற்றியை இறுதி வெற்றி என்று கூறிவிட முடியாது. இப்போதும்கூட அவரின் இலக்கு "கிளாஸிகல்' பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பை வெல்வதில்தான் குவிந்திருக்கிறது. 

சட்டென்று குறுகிய நேரத்தில் முடிவெடுக்கும் "ரேபிட்' பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் கோனேரு ஹம்பிக்கு, "கிளாஸிகல்' பிரிவில் உலக சாம்பியனாகும் 

அடுத்தகட்ட நகர்வுக்கு மிகப் பெரிய ஊக்கமும், உற்சாகமும் கிடைத்திருக்கிறது. கோனேரு ஹம்பியின் வெற்றி, இந்தியாவின் வெற்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com