அஞ்சுவது அஞ்சாமை பேதைமை | கடற்கொள்ளையர்கள் குறித்த தலையங்கம்

முன்பு சோமாலியா என்றால், இப்போது கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகள் கினி வளைகுடாவில் நங்கூரமிட்டிருக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு இந்தியக் கப்பல்கள் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டன. டிசம்பர் 3-ஆம் தேதி 16 மாலுமிகளும், டிசம்பர் 15-ஆம் தேதி 20 மாலுமிகளும் கடற்கொள்ளையர்களுடன் நடுக்கடலில் நடந்த மோதலில் பிடிபட்டு கடத்திச் செல்லப்பட்டனர். டிசம்பர் 3-ஆம் தேதி கடற்கொள்ளையர்களிடம் பிடிபட்ட மாலுமிகள், 20 நாள்களுக்குப் பிறகு பேரம் பேசப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். டிசம்பர் 15-ஆம் தேதி பிடிபட்டவர்கள் இன்னும்கூட கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில்தான் தொடர்கிறார்கள். நவம்பர் மாதம் கடத்தப்பட்ட இரண்டு கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பல்களும் கடுமையான பேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கின்றன.
 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களுக்கும், கடத்தல்களுக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் காரணமாகக் கூறப்படுகிறது. தங்களுக்குப் பணத் தேவை ஏற்படும் போதெல்லாம் வேலையில்லாத இளைஞர்கள் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையோர நாடுகளில் கடத்தல், கொள்ளையில் ஈடுபடுவது நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருக்கும் நடைமுறை. இப்போது கடலுக்கும் அந்த நடைமுறை பரவியிருப்பதுதான் சர்வதேச அளவில் பீதியை எழுப்புகிறது.
 மேற்கு ஆப்பிரிக்காவின் கினி வளைகுடா பகுதிகளில் அதிகரித்துவரும் கடற்கொள்ளைகளுக்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன. ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் செனகலில் இருந்து அங்கோலா வரையிலான பகுதி உலகின் கடத்தல் குற்றங்களின் மையமாக மாறியிருக்கிறது. ஏறத்தாழ 82% கடத்தல்கள் இங்குதான் நடைபெறுகின்றன. கச்சா எண்ணெய் வளம் நிறைந்த நைஜீரியாவில் இருந்து மேற்கு ஆப்பிரிக்க மாஃபியா கும்பல்கள் இயங்குகின்றன. நைஜீரியாவின் டெல்டா பகுதியில் அமைந்த கடற்கரையோரக் காடுகள் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன. கடற்கொள்ளைகளுக்கான முதல் காரணம் இது.
 இந்தியாவுக்கும் மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் இடையேயான கடல் வர்த்தகம் அண்மைக்காலமாக கணிசமாக அதிகரித்திருக்கிறது. நைஜீரியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உருவாகியிருப்பதற்கு கச்சா எண்ணெய் மிக முக்கியமான காரணம். இதனால் இந்தியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையே கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்க துறைமுகங்களில் நங்கூரமிடும் பெரும்பாலான கப்பல்கள், இந்தியாவைச் சேர்ந்தவை அல்லது இந்தியாவுக்கு சரக்கு ஏற்றிச் செல்பவை. அதனால் இந்தியக் கப்பல்கள் அதிகமான தாக்குதலுக்கும் பாதிப்புக்கும் உள்ளாகின்றன. இது இரண்டாவது காரணம்.
 கடந்த 3 ஆண்டுகளாக இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. கப்பல்களில் பணி புரியும் இந்தியர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 45%-க்கும் அதிகமாக அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாலுமிகள் சர்வதேச அளவில் சரக்கு, போக்குவரத்துக் கப்பல்களில் பணிபுரிகிறார்கள். உலகிலுள்ள மொத்த மாலுமிகளில் 14.5% இந்தியர்கள். மொத்த அதிகாரிகளில் 12.8% இந்தியர்கள். கப்பல்களில் அதிகரித்த அளவில் இந்தியர்கள் பணியாற்றுவதால், கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் மாலுமிகளில் இந்தியர்கள் அதிகமாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இது மூன்றாவது காரணம்.
 கினி வளைகுடாவில் அதிகரித்திருக்கும் கடற்கொள்ளையர்களின் கடத்தல்களுக்கு பல உள்ளூர் காரணங்களும் உண்டு. ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரை நாடுகளில் வலுவான கடலோரக் காவல்படை இல்லாமல் இருப்பதும், உள்நாட்டு பயங்கரவாதக் குழுக்கள் காணப்படுவதும் கடற்கொள்ளைகளுக்கு வழிகோலுகின்றன. இதுபோன்ற கொள்ளையர்களுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் காணப்படுகிறது. ஆழ்கடல் பகுதியில் கப்பல்களைக் கைப்பற்றி கச்சா எண்ணெயைக் கடத்திக்கொண்டு செல்வதும் அவ்வப்போது நிகழ்கிறது. கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படும் பாறைகள், இடுக்குகள், குகைகள் போன்றவை அவர்களுக்கு வசதியாக அமைந்திருக்கின்றன.
 எல்லாக் கப்பல்களுக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. அதனால் மாலுமிகளைக் கடத்திக் கொண்டுபோவதன் மூலம் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற முடியும் என்பது கடற்கொள்ளையர்களுக்கு நன்றாகவே தெரியும். தப்பிப் போகவோ, முரண்டு பிடிக்கவோ செய்யாமல் இருக்கும் வரை கடத்தப்படும் மாலுமிகளை கடற்கொள்ளையர்கள் பத்திரமாகவே பாதுகாக்கிறார்கள். கடல் கொள்ளையர்களுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே சமரசம் பேசுவதற்கு இடைத்தரகர்களும் உருவாகியிருக்கிறார்கள். இப்படியொரு ஆபத்தான சூழல் மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையோரம் உருவாகி, இந்தியக் கப்பல்களையும் மாலுமிகளையும் அச்சுறுத்துகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் உலகளாவிய அளவில் விரிவடைந்துவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவிலேயே எடுத்தாக வேண்டும்.
 மக்களவையில் "கடற்கொள்ளைத் தடுப்பு மசோதா 2019' கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க அதில் வழிகோலப்பட்டிருந்தது. அந்த மசோதாவை நாடாளுமன்றம் விரைவில் நிறைவேற்றக்கூடும். ஆனால், சர்வதேச அளவிலான கடற்கொள்ளைகளை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மட்டுமே முனைப்புக் காட்டினால் போதாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com