வெற்றியுமல்ல, தோல்வியுமல்ல! | உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இரண்டு முக்கியமான செய்திகளை வெளிப்படுத்துகின்றன. முதலாவது செய்தி, இதற்கு  முந்தைய இரண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களைப் போல அல்லாமல், ஆளும் கட்சி மிகவும் நேர்மையாக நடந்துகொண்டு முறையாகத் தேர்தல் நடக்க வழிகோலியிருக்கிறது. இரண்டாவது செய்தி, தமிழக வாக்காளர்கள் தேசிய அளவிலான தேர்தலுக்கும் மாநில அளவிலான தேர்தலுக்கும் வெவ்வேறான அளவுகோல்களைக் கையாள்கிறார்கள் என்பது.
அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 27 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 கோடி வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். சுமார் 77% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. 

பெரிய அசம்பாவிதங்கள் இல்லாமல், குறிப்பிடும்படியான முறைகேடுகளும் இல்லாமல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நேர்மையாக நடத்தி முடித்திருக்கும் மாநில தேர்தல் ஆணையத்தைப் பாராட்டியாக வேண்டும். 
தமிழகத்திலுள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களிலுள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் அதிமுகவின் கூட்டணியும், எதிர்க்கட்சியான திமுகவின் கூட்டணியும் அதிக அளவிலான வித்தியாசம் இல்லாமல் வெற்றி பெற்றிருக்கின்றன. அதிமுக கூட்டணியைவிட, திமுக கூட்டணி சற்றுக் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 

மாவட்ட ஊராட்சிக் குழுவுக்கான தேர்தலில் திமுக கூட்டணி 271 இடங்களையும், அதிமுக கூட்டணி 240 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. ஊராட்சி ஒன்றியங்களில், தேர்தல் நடந்த 5,090 இடங்களில் திமுக கூட்டணி 2,356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2,199 இடங்களையும் வென்றிருக்கின்றன. 

512 இடங்களை மற்ற கட்சிகளும், சுயேச்சைகளும் கைப்பற்றியிருக்கிறார்கள். 
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 1996 முதல்தான் நடைபெறத் தொடங்கியது. 2006-இல், மாவட்ட ஊராட்சியிலும் சரி, ஊராட்சி ஒன்றியங்களிலும் சரி ஆளும் கட்சியான  திமுகவின் ஆதிக்கம்  தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தது. 2011-இல் ஆளும் கட்சியாக அதிமுக இருந்தபோது நடந்த தேர்தலில், 655 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல்களில் 602 இடங்களில் வெற்றிபெற்று தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டது. அந்த அளவிலான ஆளும் கட்சி வெற்றிக்கு ஆட்சியாளர்களின் தலையீடு முக்கியமான காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

2006, 2011 உள்ளாட்சித் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இன்றைய ஆளும் கட்சி மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் வாக்காளர்களின் தேர்வுக்கு வழிகோலியிருக்கிறது என்பதை உணர முடிகிறது. ஆளும் கட்சி மனது வைத்திருந்தால்,  2006, 2011 வழியில் இந்தத் தேர்தலையும் ஆளும் கட்சிக்கு சாதகமான தேர்தலாக மாற்றியிருக்க முடியும். இந்த ஒரு காரணத்துக்காகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், இன்றைய ஆட்சியையும் பாராட்டலாம்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றன. சிதம்பரம், 
வேலூரைத் தவிர, அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வித்தியாசம் லட்சம் வாக்குகளுக்கு மேல் காணப்பட்டன. அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்தன. 

ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாத நிலையில், அதிமுக இறங்குமுகத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் அதை விமர்சித்தனர். அதிமுகவின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டதாகவும், அந்தக் கட்சியின் மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டதாகவும் பரவலாகக் கருதப்பட்ட நிலையில், இப்போதைய உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், தனது அடிப்படை வாக்கு வங்கியையும் செல்வாக்கையும் அதிமுக இழந்துவிடவில்லை என்பதை உணர்த்துகின்றன.

நாடு தழுவிய அளவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறும் நிலையில்,  தனது மக்களவைத் தேர்தல் செல்வாக்கை திமுக தக்கவைத்துக் கொள்ளும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது. பத்து கட்சிக் கூட்டணி; ஒட்டுமொத்த காட்சி ஊடக ஆதரவு; சிறுபான்மையினரின் முழுமையான ஆதரவு இவ்வளவு இருந்தும்கூட, தனது மக்களவைத் தேர்தல் வெற்றியை உள்ளாட்சித் தேர்தல்களிலும்  திமுகவால் பிரதிபலிக்க முடியாமல் போனது வியப்பாக இருக்கிறது. 

கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவின் மீது நியாயமாக ஏற்பட்டிருக்க வேண்டிய  அதிருப்தியையும் மீறி அந்தக் கட்சி திமுகவுக்கு சரிநிகரான அளவில் வெற்றி பெற்றிருப்பது அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் காட்டுகிறதா அல்லது திமுகவின் செல்வாக்குச் சரிவைக் காட்டுகிறதா என்பதை சட்டப் பேரவைத் தேர்தல்தான் வெளிப்படுத்தும்.

உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயக முறையில் வலுவாகச் செயல்பட்டால்தான் அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள்,  கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவை அடித்தட்டு மக்களைச் சென்றடையும். நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களும், மீதமிருக்கும் ஒன்பது மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல்களும் அடுத்தகட்டமாக இதேபோல விரைவிலேயே நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

அதிமுகவும் திமுகவும் தங்களது கோட்டைகளில் வலுவாகவே இருக்கின்றன என்பதும், மக்களவைத் தேர்தல் தோல்வியிலிருந்து வீரியத்துடன் ஆளும் அதிமுக  உயிர்த்தெழுந்திருக்கிறது என்பதும் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் செய்திகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com