கூடாது, கூடவே கூடாது! | 5ஜி சோதனையில் ஹாவை நிறுவனத்துக்கு அனுமதி குறித்த தலையங்கம்

தற்போதைய 4ஜி தொழில்நுட்பத்திலிருந்து நாம் 5ஜி தொழில் நுட்பத்துக்கு நம்மை மேம்படுத்திக் கொண்டாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நடைபெற இருக்கும் 5ஜி அலைக்கற்றை கட்டமைப்புக்கான சோதனைகளில் பங்குபெற சர்வதேச தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை, அதற்கான கருவிகளை வழங்குவதற்கு உலகிலுள்ள பல முன்னோடித் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றன. அந்த நிறுவனங்களின் பட்டியலில் சீனப் பன்னாட்டு நிறுவனமான ஹாவை'யும் இருந்தது. அப்போதே, ஹாவை' நிறுவனத்துக்கு அனுமதி 
வழங்கக்கூடாது என்ற பரவலான கருத்து முன்வைக்கப்பட்டது.

மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் கே. விஜயராகவன் தலைமையில் இது குறித்து முடிவெடுக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய, சோதனைகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது. விண்ணப்பித்திருக்கும் எல்லா நிறுவனங்களுக்கும் சோதனையில் பங்குபெற 
அனுமதி வழங்கலாம் என்று பரிந்துரைத்த விஜயராகவன் குழு, ஹாவை' சீன நிறுவனத்தை மட்டும் அதில் சேர்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது. அந்தப் பரிந்துரையைப் புறந்தள்ளி இப்போது ஹாவை' நிறுவனத்துக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஹாவை டெக்னாலஜிஸ்' என்பது சீனப் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம். சீனாவிலுள்ள ஷென்செல் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஹாவை', தகவல் தொலைத்தொடர்பு உபகரணங்களையும், மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்) பொருள்களையும்,  அறிதிறன் பேசிகளையும்  தயாரிக்கும் நிறுவனம். 1987-இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை உருவாக்கி செயல்படுத்திக் கொடுப்பதுடன், ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்குகிறது.

சீனாவில் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் செயல்படும்  ஹாவை டெக்னாலஜிஸ்' நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். உலகிலுள்ள 170 நாடுகளில் தனது பொருள்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்தும் இந்த நிறுவனம், உலகின் மிகப்பெரிய தகவல் தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தியாளர் என்பதுடன், சாம்சங்'குக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய அறிதிறன்பேசித் தயாரிப்பு நிறுவனமும்கூட. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 121.72 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.8.67 லட்சம் கோடி).

உலகின் மிகப் பெரிய தகவல் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹாவை'  நிறுவனத்தை 5ஜி அலைக்கற்றை கட்டமைப்பு சோதனைக்கு, இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் குழு பரிந்துரைத்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமான காரணம், தேசப் பாதுகாப்பு. ஹாவை' நிறுவனத்தை இந்தியாவில் செயல்பட அனுமதிப்பது என்பது, கூடாரத்தில் ஒட்டகத்தை நுழைய அனுமதிப்பதற்கு ஒப்பானது' என்று அரசியல் விமர்சகர்கள் கருதுவதில் அர்த்தம் இருக்கிறது.

சீனாவைப் பொருத்தவரை, அந்த நாட்டு அரசுக்கும், அந்த நாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு கிடையாது. எல்லா சீன நிறுவனங்களும் அரசின் மறைமுகக் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. ஹாவை' நிறுவனமும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்துடனும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டது.
5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் வழங்குவதையும், அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அனுமதி வழங்குவதையும் பொருளாதாரம் சார்ந்த அல்லது தொழில்நுட்பம்  சார்ந்த முடிவாக மட்டுமே கருதக் கூடாது. இதில் இந்தியாவின் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது.  எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இந்தியாவின் உற்பத்திக் கட்டமைப்பின் முதுகெலும்பாக 5ஜி தொழில்நுட்பம் இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவின் அனைத்துத் தொழில் நிறுவனங்களும், தகவல் கட்டமைப்பும், ஏன் ராணுவப் பாதுகாப்புக் கட்டமைப்பும்  எண்ம தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமையும் நிலையில், 5ஜி அலைக்கற்றைக் கட்டமைப்பை சீன நிறுவனம் இயக்க அனுமதிப்பது என்பது, தெரிந்தே விபரீதத்தை வரவழைத்துக் கொள்வதாக அமையும்.

டோக்காலாமில் நடந்தது போன்ற மோதல் சூழல் வருங்காலத்தில் உருவாகுமானால், ஹாவை'  நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவின் ஒட்டுமொத்தத் தகவல் தொலைத்தொடர்பையும், தொழில்துறை இயக்கங்களையும்  சீனாவால் முடக்கிவிட முடியும். இந்திய அரசின் அமைப்புகள் குறித்தும், இந்தியர்கள் குறித்துமான ரகசியங்களையும் ஊடுருவி பாகிஸ்தானுக்கு ஹாவை'  நிறுவனத்தின் உதவியுடன் வழங்க முடியும். ஹாவை'  தொலைத்தொடர்பு வலையில் சிக்கியிருக்கும் பல நாடுகள், இப்போது அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றன.

பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதிக்கும் இந்த விஷயத்தில் சர்வதேச ஒப்பந்தங்களைக் காரணம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! இவ்வளவு பிரச்னைகளும், பிரிவினைகளும் இருந்தும்  ஹாவை' நிறுவனத்தை 5ஜி அலைக்கற்றைக் கட்டமைப்புக்கான சோதனையில் பங்குபெற மத்திய அரசு அனுமதித்திருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com