Enable Javscript for better performance
தேர்தல் ஜுரத்தில் தில்லி! | தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த தலையங்கம்- Dinamani

சுடச்சுட

  

  தேர்தல் ஜுரத்தில் தில்லி! | தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 13th January 2020 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவைப் பொருத்தவரை மிகச் சிறிய மாநிலமாக இருந்தாலும்கூட தில்லிக்கு சில தனித்தன்மைகளும், முக்கியத்துவங்களும் உண்டு. இரண்டு கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகையைக் கொண்ட தில்லி, உலகிலுள்ள 150 நாடுகளைவிட மக்கள்தொகை எண்ணிக்கையில் பெரிது.
   சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகிறது தலைநகர் தில்லி. தேசியத் தலைநகரின் 8-ஆவது சட்டப்பேரவையைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்குப்பதிவு தேதியை (பிப்ரவரி 8) தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டில் நடக்க இருக்கும் முதலாவது சட்டப்பேரவைத் தேர்தல் என்பதாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடந்த போராட்டங்களின் பின்னணியில் நடக்க இருப்பதாலும் தில்லியில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
   ஏனைய இந்திய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஊரகப்புற வாக்காளர்கள் நிர்ணாயகமாக இருக்கிறார்கள் என்றால், தில்லியைப் பொருத்தவரை இந்த மாநிலத்தின் வாக்காளர்கள் நகர்ப்புறவாசிகள். இங்கே வேளாண் பிரச்னைக்கும், ஜாதி ரீதியிலான அரசியலுக்கும் முக்கியத்துவம் கிடையாது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு காற்று மாசு, போக்குவரத்து நெரிசல், மகளிர் பாதுகாப்பு, குடிநீர் விநியோகம், குப்பைகள் தேக்கம் உள்ளிட்ட நகர்ப்புறப் பிரச்னைகள்தான் முன்னிலை வகிக்கின்றன.
   நாடாளுமன்றத்துக்கு ஏழு மக்களவை உறுப்பினர்களைத்தான் தில்லி அனுப்புகிறது என்றாலும்கூட, தில்லியில் ஆட்சியைப் பிடிப்பது என்பது ஒரு கெளரவப் பிரச்னை. தேசியத் தலைநகர் தில்லிதான் அரசியல் அதிகார மையம் என்பதுடன் உச்சநீதிமன்றமும் இங்கே அமைந்திருப்பதால் இதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
   முக்கியமான கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ் உள்ளிட்ட சர்வதேச தரத்திலான மருத்துவமனைகள், நுண்கலை, கலாசார மையங்கள் என்று எல்லா முக்கியமான அமைப்புகளும் செயல்படுவதால் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது அரசியல் கட்சிகளுக்கு இலக்காக இருப்பதில் வியப்பில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஊடக வெளிச்சம் தேசியத் தலைநகரில் குவிந்திருப்பதால், மத்திய ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அடுத்தபடியான முக்கியத்துவம் தலைநகர் தில்லியில் ஆட்சி அமைப்பதிலும் காணப்படுகிறது.
   2015-இல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய செயல்பாட்டின் அடிப்படையில் வாக்காளர்களை மூன்றாவது முறையாக எதிர்கொள்கிறது. ஆம் ஆத்மி கட்சி உருவானது முதல் தில்லியில் மும்முனைப் போட்டி என்பது நடைமுறையாகிவிட்டது. நடைபெற இருக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று முக்கியமான கட்சிகள் களத்தில் இருக்கின்றன.
   தேர்தல் முடிவுகளை இரண்டு காரணிகள் தீர்மானிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். எந்த அளவுக்கு வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலுக்கும், சட்டப்பேரவைத் தேர்தலுக்குமான வேறுபாட்டை கையாளப் போகிறார்கள் என்பது முதல் காரணி.
   மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது இரண்டாவது காரணி.
   2014 மக்களவைத் தேர்தலில் தில்லியிலுள்ள ஏழு இடங்களையும் 46.4% வாக்குகளுடன் பாஜக வென்றது. அதாவது சுமார் 70-இல் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முன்னிலை வகித்தது. அடுத்த 10-ஆவது மாதம் 2015 பிப்ரவரியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 54.3% வாக்குகளைப் பெற்று 70 இடங்களில் 67 இடங்களை வென்று ஆட்சி அமைத்தது.
   கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 56.6% வாக்குகளும், காங்கிரஸ் 22.5% வாக்குகளும் பெற்றபோது, ஆம் ஆத்மி பெற்ற வாக்குகள் 18% மட்டும்தான். தேசிய அளவில் பாஜகவை தில்லி வாக்காளர்கள் 2014-லிலும், 2019-லிலும் ஏற்றுக்கொண்டார்கள். கடந்த முறையைப்போல இந்த முறையும் சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லி வாக்காளர்கள் வித்தியாசமாக வாக்களிப்பார்களா என்பதைப் பொருத்துத்தான், ஆம் ஆத்மி - பாஜக இரண்டு கட்சிகளின் வெற்றி - தோல்வி நிர்ணயிக்கப்படும்.
   ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்தவரை, மிக அதிகமான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் கல்வி, சுகாதாரம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கு 23% நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், ஆம் ஆத்மி ஆட்சியில் 40% ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அரசு ஆரம்பப் பள்ளிகள், "மொஹல்லா கிளினிக்' திட்டம் என்பதன் அடிப்படையில் மருத்துவ வசதிகள், குறைந்த அளவிலான மின் கட்டணம் - குடிநீர் கட்டணம், அதிகரித்த போக்குவரத்து வசதிகள் என்று சாமானியர்களுக்கான பல திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு.
   தில்லியைப் பொருத்தவரை மக்கள்தொகையில் 35% உள்ள பஞ்சாபிகள் 28 முதல் 30 இடங்களிலும், 30% உள்ள பூர்வாஞ்சலிகள் 25 இடங்களிலும் தேர்தல் முடிவை நிர்ணயிப்பவர்கள். 12% முஸ்லிம்கள் 10 இடங்களில் வெற்றி - தோல்வியை நிர்ணயிப்பார்கள். மும்முனைப் போட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குகளை எந்த அளவுக்குக் காங்கிரஸ் கட்சி பிரிக்கிறது என்பதைப் பொருத்து பாஜகவின் வெற்றி - தோல்வி அமையும்.
   கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப்போல வாக்காளர்கள் ஒரேயடியாகக் காங்கிரûஸப் புறக்கணித்து ஆம் ஆத்மி கட்சிக்கோ, பாஜகவுக்கோ வாக்களித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இறுதிச் சுற்றில் போட்டி பாஜகவுக்கும் (நரேந்திர மோடி),
   ஆம் ஆத்மி கட்சிக்கும் (அரவிந்த் கேஜரிவால்) இடையேதான்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai