Enable Javscript for better performance
நேர்கொண்ட பார்வை...| ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே பத்திரிகையாளர் சந்திப்பு குறித்த தலை- Dinamani

சுடச்சுட

  

  நேர்கொண்ட பார்வை...| ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே பத்திரிகையாளர் சந்திப்பு குறித்த தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 15th January 2020 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  இந்திய ராணுவத்தின் 28-ஆவது தலைமைத் தளபதியாகப் பதவியேற்றிருக்கிறார் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணே. இதற்கு முன்பு 40-ஆவது ராணுவ துணைத் தளபதியாகப் பணியாற்றிய ஜெனரல் நரவணே, 39 ஆண்டுகால பணி அனுபவம் பெற்ற ராணுவ அதிகாரி. 

  இவரது தந்தையார் இந்திய விமானப் படையின் அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தாயார், அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக இருந்தவர். இவரது மனைவி, ஆசிரியையாகக் கால் நூற்றாண்டுகால அனுபவசாலி. நரவணேவுக்கும் சென்னைக்கும்கூட ஒரு தொடர்பு உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதுதான் அது.

  இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாகக் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, ஜெனரல் நரவணே பத்திரிகையாளர்களை கடந்த வியாழக்கிழமை சந்தித்தார். ராணுவ தினத்தை முன்னிட்டு, தலைமைத் தளபதிகள்  ஊடகவியலாளர்களைச் சந்திப்பது வழக்கம். இந்த முறை புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெனரல் நரவணே, அந்தச் சந்திப்பை ஊடகவியலாளர்களுடனான தனது முதல் சந்திப்புக்குப் பயன்படுத்திக் கொண்டார். 

  வழக்கமான ஊடகச் சந்திப்பிலிருந்து ஜெனரல் நரவணேயின் இந்தச் சந்திப்பு சற்று வித்தியாசப்பட்டது. நான்கு முக்கியமான கருத்துகளை இந்தச் சந்திப்பின் மூலம் ஜெனரல் நரவணேயால் பதிவு செய்ய முடிந்தது.
  தற்போது முப்படைத் தளபதியாகப் பதவியேற்றிருக்கும் ஜெனரல் விபின் ராவத், ராணுவ தலைமைத் தளபதியாக இருந்தபோது வெளியிட்ட சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பின. ராணுவத் தலைமைத் தளபதி தன்னுடைய அதிகார வரம்பிற்கு வெளியே அரசியல் நிகழ்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்தது வன்மையான கண்டனத்துக்கு உள்ளானது. அந்தப் பின்னணியில்தான் புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் நரவணேயின் ஊடகச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் காஷ்மீர் பிரச்னை, எல்லையில் காணப்படும் பதற்றம், முப்படைகளுக்குமான கூட்டுத் தலைமை ஏற்படுத்தப்பட்டிருப்பது உள்ளிட்ட பிரச்னைகளும் ஜெனரல் நரவணேயின் ஊடகச் சந்திப்பில் எழுப்பப்பட்டன. 

  இந்திய ராணுவம் எதிர்கொள்ளும் சவால்களை மிகவும் தெளிவாக விளக்கி, இந்திய ராணுவத்தின் பங்கு குறித்த தனது தெளிவான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார் புதிய தலைமைத் தளபதி ஜெனரல் நரவணே. எல்லா ராணுவத் தளபதிகளும் அரசியல் சாசன வரம்புக்குள்தான் பணியாற்றுகிறார்கள். 
  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அனைவருக்கும் சமமான நீதி என்கிற அடிப்படையில் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் வகுத்திருக்கும் பாதையில் பயணிப்பதுதான், இந்திய ராணுவத்தை வழி நடத்தும் குறிக்கோள்களாக இருக்கும் என்று தெளிவுபடுத்தினார் ஜெனரல் நரவணே.
  ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகள் நிரம்பிய பகுதிகளில்  பாதுகாப்பை ராணுவம் கையாளும் நிலைமை காணப்படுகிறது.

  ராணுவத்தினர் மீது அவ்வப்போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவும், தேச விரோத சக்திகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் சில கடுமையான நடவடிக்கைகளை ராணுவம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறது.
  இத்தனைக்கும் நடுவிலும், காஷ்மீரில் பல நிகழ்வுகளில் பொது மக்களைப் பாதுகாக்கும் பணியில் இந்திய ராணுவம் மிக சிறப்பாகச் செயல்பட்டதை மனசாட்சியுள்ள எவருமே மறுக்க முடியாது. ஜெனரல் நரவணே தனது ஊடகச் சந்திப்பில் கூறியிருப்பதுபோல, அரசியல் சாசன விதிமுறைகளுக்கு உட்பட்டு ராணுவம் செயல்படுமேயானால், விமர்சனங்களும் எதிர்வினைகளும் முற்றிலுமாக இல்லாமல் போகும்.

  எல்லைப் பாதுகாப்பில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலை தலைமைத் தளபதி தனது ஊடகச் சந்திப்பில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேற்குப் பகுதியில் பாகிஸ்தானையும், வடக்குப் பகுதியில் சீனாவையும் கொண்ட பகுதியாக சியாச்சின் காணப்படுவதால், எல்லைப் பாதுகாப்புக்கு அது முக்கியமானது. சீனப் படைகளும், பாகிஸ்தான் படைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து இந்தியாவைத் தாக்க முடியாமல் இருப்பதற்கு அந்த இரு நாடுகளையும் பிரிக்கும் பகுதியாக சியாச்சின் பனிச்சிகரங்கள் இருப்பதுதான் காரணம். சியாச்சினைப் பாதுகாப்பதும், நமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தியிருக்கிறார் ஜெனரல் நரவணே.

  உலகின் மிக அதிகமான குளிர் காணப்படும் பகுதியான சியாச்சின் பனிச்சிகரங்களுக்குத்தான் ஜெனரல் நரவணே தனது முதல் அலுவல் முறைப் பயணத்தை மேற்கொண்டார் என்பதிலிருந்து எல்லைப் பாதுகாப்புக்கு அவர் அளிக்கும் முன்னுரிமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாடாளுமன்றம் உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் காஷ்மீர்ப் பகுதியை மீட்டெடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது என்கிற தலைமைத்  தளபதியின் அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.

  இந்திய ராணுவம் எல்லைப் பகுதிகளில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தயாரிப்புகளை முன்னெடுத்து வருவதாகவும், எல்லைப் பாதுகாப்பு இந்திய ராணுவத்தின் முன்னுரிமையாக இருப்பதாகவும் தெளிவுபடுத்தினார் அவர். 


  முப்படைகளுக்கும் கூட்டுத் தலைமை ஏற்படுத்தப்பட்டிருப்பது ராணுவ தலைமைத் தளபதியால் வரவேற்கப்பட்டிருக்கிறது. மிகத் தெளிவான கண்ணோட்டத்துடன் இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல்படி செயல்படப் போவதாகக் கூறும் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதிக்கு வாழ்த்துகள். 


  இன்று ராணுவ தினம்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai