புதிய தலைவர், பெரிய சவால்! | பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா குறித்த தலையங்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கும், அமித் ஷாவின் ஆளுமைமிக்க தலைமையும் இருந்தாலும்கூட, பாஜகவைப் பொருத்தவரை கட்சி கட்டுப்பாட்டுக்குத்தான் முன்னுரிமை என்பதை ஜெ.பி. நட்டா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நிரூபிக்கிறது. 59 வயது ஜெகத் பிரகாஷ் நட்டா, பாஜகவின் தேசியத் தலைவராக திங்கள்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கெனவே செயல் தலைவராக கடந்த ஆறு மாதங்களாகச் செயல்பட்டு வந்த ஜெ.பி. நட்டா, அமித் ஷாவிடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பது பாஜகவின் உள்கட்சி ஜனநாயகத்தின் அடையாளம் என்றுதான் கூற வேண்டும். 
கட்சிக்காகத்தான் தலைவர்கள் என்பதில் உறுதியாக இருப்பவை கம்யூனிஸ்ட் கட்சிகளும்,  பாஜகவும் என்பதால்  தலைமைப் பதவிகளுக்குக் கால வரைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டு முறைக்கு மேல் ஒருவர் தொடர்ந்து தலைமைப் பொறுப்பில் இருக்க முடியாது என்பதை பாஜக உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறது. கட்சித் தலைவரான அமித் ஷா கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டபோது, செயல் தலைவராக ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சிகளைப்போலவே பாஜகவும் பதவி அதிகாரத்தை தன்னுடைய கொள்கை இலக்கை அடைவதற்கான வழியாகத்தான் கருதுகிறது. 

ஜெகத் பிரகாஷ் நட்டாவின் அரசியல் தொடர்பு, அவரின் மாணவப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தில் தொடங்கி, இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவமோர்ச்சாவிலும் தீவிர ஈடுபாடு கொண்டவராகப் பணியாற்றியவர் ஜெ.பி. நட்டா. பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது ஊழலுக்கும், மாநில அரசின் நிர்வாக முறைகேடுகளுக்கும் எதிராக பிகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய இயக்கம்தான் அவரை அரசியலுக்குள் இழுத்தது. அப்போது அந்தப் போராட்டத்தில் ஜெ.பி. நட்டாவின் இயக்கத் தோழர்களாக இருந்தவர்கள்தான் இன்றைய பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர்.

அன்றைய இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எழுந்த போராட்டத்தில் இணைந்த ஜெ.பி. நட்டா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவும், அதன் பிறகு 1990-91-இல் அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் தேசியத் தலைவராகவும் உயர்ந்த ஜெ.பி. நட்டாவின் அரசியல் வாழ்க்கை, அடல் பிகாரி வாஜ்பாய், பைரோன் சிங் ஷெகாவத், லால் கிருஷ்ண அத்வானி ஆகியோரின் வழிகாட்டுதலில் வளர்ந்தது.

தனது சொந்த மாநிலமான ஹிமாசல பிரதேசத்தின் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ.பி. நட்டா, இரண்டு முறை மாநில அமைச்சரவையிலும் பதவி வகித்தவர். முதல்வர் பிரேம்குமார் துமலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு 2010-இல் இவரை மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு வலுக்கட்டாயமாக மாற்றியது. ஜெ.பி. நட்டாவை அப்போதைய பாஜக தலைவர் நிதின் கட்கரி தேசிய பொதுச் செயலாளராக நியமித்தார். 
ஜெ.பி. நட்டா மூன்றுவிதமான சவால்களை எதிர்கொள்கிறார். முதலாவது சவால், கட்சி ரீதியானது. இரண்டாவது சவால், கொள்கை ரீதியிலானது. மூன்றாவது சவால், தேர்தல் வெற்றிகளுடன் தொடர்புடையது. இந்த மூன்று சவால்களையும் புதிய பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதில்தான் அவருடைய வெற்றியும், பாஜகவின் வெற்றியும் அடங்கியிருக்கின்றன.

2019-இல் மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டாலும், அதற்குப் பிறகு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவால் மகாராஷ்டிரத்திலும், ஜார்க்கண்டிலும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. நீண்டநாள் கூட்டணிக் கட்சியான சிவசேனை விலகிச் சென்றிருக்கிறது. தேசிய அளவில் அமைப்பு ரீதியாகப் பல மாநிலங்களிலும் கட்சி வலுவிழந்து காணப்படுகிறது. பிரதமர் மோடியின் செல்வாக்கை மட்டுமே நம்பியிருக்கும் கட்சியாக அல்லாமல், மாநில அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய பெரும்பணி நட்டாவை எதிர்கொள்கிறது. 

தனது நீண்ட நாள் வாக்குறுதிகள் பலவற்றையும் பாஜக ஒன்றன்  பின் ஒன்றாக கடந்த ஆறு மாதத்தில் நிறைவேற்றும் முனைப்பில் இருக்கிறது. முத்தலாக் தடைச் சட்டம், ஜம்மு - காஷ்மீர் சிறப்புச் சலுகை விலக்கல், அயோத்தியில் ராமர் கோயில் என்று கொள்கை ரீதியாக அடைந்த வெற்றிகளை மேலும் தொடரவிடாமல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான எதிர்ப்பு தடுக்க முற்பட்டிருக்கிறது. பாஜகவின் ஹிந்து வாக்கு வங்கியை வலுப்படுத்தி அந்த எதிர்ப்பை தலைவர் ஜெ.பி. நட்டா எதிர்கொள்ளப் போகிறாரா அல்லது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த புரிதலை ஏற்படுத்தி விமர்சகர்களை சமாதானப்படுத்தப் போகிறாரா என்பது தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக பாஜக எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், அடுத்து வரவிருக்கும் தில்லி, பிகார் மாநில சட்டப்பேரவைத்  தேர்தல்கள். பாஜகவுக்கு உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றுத்தந்த பெருமை அந்த மாநிலத் தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஜெ.பி. நட்டாவுக்கு உண்டு. இப்போது தில்லி, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக அணிக்கு அதேபோன்ற வெற்றியை உறுதிப்படுத்தும் பெரும் பொறுப்புடன் தொடங்குகிறது ஜெ.பி. நட்டாவின் தலைமைப் பயணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com