கோரிக்கை அல்ல, வேண்டுகோள்! |சென்னை புத்தகக் கண்காட்சி குறித்த தலையங்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் கடந்த 9-ஆம் தேதி முதல் நடந்து வந்த 43-ஆவது புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பதின்மூன்று நாள்கள் நடந்த இந்தப் புத்தகக் கண்காட்சியைக் காண ஏறத்தாழ 15 லட்சம் வாசகர்கள் வந்திருந்தார்கள். ரூ.20 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகி இருக்கின்றன. 

வாசகர்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன், குறிப்பாகக் குழந்தைகளுடன் புத்தகக் கண்காட்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருக்கின்றனர். வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்கிற கவலையில் தமிழ்ச் சமூகம் ஆழ்ந்திருக்கும் நேரத்தில், ஆர்வத்துடன் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் மீதான ஆர்வத்தை சென்னை புத்தகக் கண்காட்சி ஏற்படுத்தி இருப்பது, இதயம் குளிர்விக்கும் செய்தி. 

சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்த 43-ஆவது புத்தகக் கண்காட்சியில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஐந்து கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்பட்டன. 

புத்தக விற்பனையில் பழைய எழுத்தாளர்களின் நாவல்கள், அதிலும் குறிப்பாக சரித்திர நாவல்கள் வாசகர்களால் விரும்பி வாங்கப்பட்டன என்பதும், நாவல்களுக்கு அடுத்தபடியாக வரலாறு தொடர்பான நூல்களை வாங்குவதில் வாசகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆன்மிக நூல்கள் இதுவரை இல்லாத அளவில் விற்பனையாகி இருக்கின்றன.

43-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழக அரசின் தொல்லியல் துறை அமைத்திருந்த "கீழடி தொல்லியல் ஆய்வரங்கம்' பாராட்டுக்குரியது. குழந்தைகளும், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் நமது தொல்லியல் ஆய்வுத் துறையின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள வழிகோலப்பட்டது சீரிய முயற்சி. கீழடிக்கு நேரில் சென்று, அங்கே நடைபெறும் அகழ்வாராய்ச்சிகள் குறித்துத் தெரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு, தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டிருந்த "மெய்யுணர்வுக் காட்சி' மெய்சிலிர்க்க வைத்தது. "கீழடி' ஆய்வு குறித்த நூல் ஓர் ஆவணம்.

புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அடுத்த ஆண்டு முதல் புத்தகக் கண்காட்சி நடத்த தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கும் என்று அறிவித்திருக்கிறார். நிறைவு விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனது தனிக் கொடையாக ரூ.5 லட்சம் அறிவித்திருக்கிறார். இதுவரை, திரைப்பட விழாக்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கிவந்த தமிழக அரசு, இப்போது புத்தகத் திருவிழாவுக்கும் நிதியுதவி வழங்க முற்பட்டிருப்பதை "தினமணி' சிரக்கம்பம் செய்து வரவேற்று மகிழ்கிறது.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழாவில், பதிப்புத் துறையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பங்களித்து வரும் 20 பதிப்பாளர்கள் துணை முதல்வரால் சான்றிதழ் வழங்கிப் பாராட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டுவது என்பது தமிழ் அன்னையை மகிழ்விப்பது என்பதாகத்தான் இருக்கும்.
சர்வதேச அளவில் ஏறத்தாழ 90 புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான சர்வதேசப் புத்தகக் கண்காட்சிகள் ஏப்ரல், மே, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் நடைபெறுகின்றன. ஜனவரி மாதம் புதுதில்லி, எகிப்து தலைநகர் கெய்ரோ, கொல்கத்தா; மார்ச் மாதம் லண்டன், பாரீஸ்; ஜூலை மாதம் ஹாங்காங்; செப்டம்பர் மாதம் ரஷியத் தலைநகர் மாஸ்கோ; அக்டோபர் மாதம் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட்,  சுவிட்சர்லாந்தின் ஜெனீவா; நவம்பர் மாதம் வளைகுடா பகுதியில் அமைந்த ஷார்ஜா நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகள் சர்வதேச அளவில் வாசகர்களைக் கவரும் திருவிழாக்கள்.

இந்தத் திருவிழாக்களில் பதிப்பாளர்கள் மட்டுமல்ல, உலக அளவிலான எழுத்தாளர்களும், புத்தகப் பிரியர்களும் வந்து குவிகிறார்கள். அந்த அளவில் இல்லாவிட்டாலும், தேசிய அளவில் தில்லி, கொல்கத்தா புத்தகத் திருவிழாக்களைப்போல நமது சென்னை புத்தகத் திருவிழா அமையாதது பெருங்குறையாக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், பதிப்புத் துறைக்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் அரசு வழங்காமல் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

புத்தகத் திருவிழாவில் பங்குகொண்ட பதிப்பகத்தினரில் 99% பேரும், விற்பனையாகாமல் இருந்த பல புத்தகங்களை விற்க முடிந்தது என்று மகிழ்ச்சி அடைகிறார்களே தவிர,  அரங்கத்துக்காகச் செலவிட்ட பணத்தை ஈட்டியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். புத்தகக் கண்காட்சியும் சரி, போதுமான காற்றோட்ட வசதியோ, வாகன நிறுத்த வசதியோ இல்லாமல்தான் இருந்தது என்கிற உண்மையை உரக்கச் சொல்லியாக வேண்டும்.

கோயம்பேட்டில் காய்கறிக்குச் சிறப்பங்காடி அமைக்க அரசால் முடிகிறது. சென்னை பாண்டிபஜாரில் நடைபாதை வணிகர்களுக்கு விற்பனை வளாகம் அமைத்துத்தர முடிகிறது. சர்வதேசத் தரத்தில் நிரந்தரப் புத்தக விற்பனைக்கான வளாகம் ஏற்படுத்தவும், கண்காட்சி அரங்கு அமைக்கவும் ஏன் முடியவில்லை? நந்தம்பாக்கம் வர்த்தக மையம்போல, சென்னையின் மையப்பகுதியில் அனைத்து வசதிகளுடனும், பிரம்மாண்டமான புத்தக விற்பனை மையத்தை ஏன் ஏற்படுத்தாமல் இருக்கிறோம்?

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அரசின் வரலாற்றுக் கொடையாக "சென்னை புத்தக விற்பனை மையம்' அமைக்கப்பட வேண்டும் என்பது "தினமணி' நாளிதழ் முன்வைக்கும் கோரிக்கை... வேண்டுகோள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com