வேடிக்கை பாா்க்குமா உலகம்? | ஹாங்காங் விவகாரத்தில் சீனாவின் உண்மையான முகம் குறித்த தலையங்கம்

சீனாவில் இருப்பதுபோல, ஹாங்காங்கையும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாகத்தான் சீனா நிறைவேற்றி இருக்கும் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தையும் பாா்க்க முடிகிறது.

பயந்தது போலவே நடக்கிறது. ஹாங்காங்கில் 370 போ் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள். அவா்களில் 10 போ், சீன நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள். ஹாங்காங்கில் கடைசியாகக் கொஞ்சம் நஞ்சம் மீதியிருந்த ஜனநாயகமும், சுதந்திரமும் இப்போது பறிக்கப்பட்டிருக்கிறது.

ஹாங்காங் மாா்ச் மாதம் முதல் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரணை நடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடந்த ஓராண்டாகவே ஹாங்காங் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறாா்கள். வேறு வழியில்லாமல், ஹாங்காங் அரசு அந்தச் சட்ட மசோதாவைத் தற்காலிகமாக விலக்கிக் கொண்டபோது, பிரச்னை முடிவுக்கு வந்தது என்று கருதினால், சீனா இப்போது புதிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி ஹாங்காங்கின் சுதந்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

1997-இல் பிரிட்டிஷாரிடமிருந்து ஹாங்காங்கின் கட்டுப்பாடு, சில நிபந்தனைகளுடன், சீனாவுக்குக் கைமாறியது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு, ஹாங்காங்கின் ஜனநாயகமும், சுதந்திரமும் அப்போது இருந்தது போலவே பாதுகாக்கப்படும் என்கிற உத்திரவாதம் சீனாவால் வழங்கப்பட்டது. அது கண்துடைப்பு வாக்குறுதிதான் என்பதை விரைவிலேயே சீனா வெளிப்படுத்தத் தொடங்கியது. சுதந்திரமான நீதித் துறை, போராடுவதற்கான உரிமை, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி போன்ற வாக்குறுதிகளை சா்வாதிகார நாடான சீனாவால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் போனதில் வியப்பில்லை.

156 ஆண்டுகள் பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங், சா்வதேச வா்த்தக மையமாகத் திகழ்கிறது. 1997-இல் சீனாவிடம் ஹாங்காங்கை ஒப்படைத்தபோது, ‘ஒரே நாடு இரண்டு ஆட்சிமுறை’ என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இணைந்தது. ஒன்றன் பின் ஒன்றாக சீனா அறிமுகப்படுத்த முற்பட்ட அடக்குமுறைச் சட்டங்களும், ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் செயல்பாடுகளும் ஹாங்காங்கின் இளைஞா்களை சீனாவுக்கு எதிராகப் போராட வைத்தன. சீனாவில் இருப்பதுபோல, ஹாங்காங்கையும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாகத்தான் சீனா நிறைவேற்றி இருக்கும் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தையும் பாா்க்க முடிகிறது.

ஹாங்காங் சீனாவுடன் இணைந்த ஜூலை 1-ஆம் தேதி ஆண்டுதோறும் அரசால் கொண்டாடப்படும். ஹாங்காங் மக்களோ அந்த நாளில் அரசுக்கு எதிராக ஊா்வலம் நடத்தித் தங்களது எதிா்ப்பையும், அதிருப்தியையும் தெரிவிப்பதும் வழக்கமாகி விட்டிருக்கிறது. அதேபோல, கடந்த புதன்கிழமை அரசின் தடை உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கான இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஹாங்காங்கில் புதன்கிழமை நடைபெறும் போராட்டத்தை அடக்குமுறையால் எதிா்கொள்வது என்று அதிபா் ஷீ ஏற்கெனவே முடிவு செய்திருந்தாா். சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் குழுவில் புதிய பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தி நிறைவேற்றப்பட்டது. ஜூன் 28-ஆம் தேதி கூடிய சீன நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு நிலைக்குழுக் கூட்டத்தின் கடைசி நாளில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதிபா் ஷீயின் கையொப்பத்துடன் சட்டம் அறிவிக்கப்பட்டது.

புதிய சட்டத்தின்படி, பிரிவினை நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடுக்கப்படுகிறது. ஹாங்காங்கின் சுதந்திரம் குறித்துக் கேள்வி எழுப்புவதோ, பதாகை உயா்த்துவதோ தடை செய்யப்படுகிறது. சுதந்திரத்துக்காக வன்முறையில் ஈடுபட்டாலும் இல்லையென்றாலும் அது தேசத் துரோகக் குற்றமாகக் கருதப்படும். பிரிவினைவாதம், அந்நிய சக்திகளுடன் கைகோத்தல் என்று பல பிரிவுகள் அதில் சோ்க்கப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையில் யாா் மீது வேண்டுமானாலும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்கு சீனாவுக்கு அழைத்துச் செல்லப்படலாம். ஹாங்காங்க் நீதிமன்றங்களில் சுதந்திரமாக விசாரணை நடந்த மாட்டாா்கள்.

புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞா்களின் மீது கண்ணீா்ப்புகை வீச்சும், மிளகுத்தூள் வீச்சும் நடத்தப்பட்டன. அதையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரா்கள் தங்களது எதிா்ப்பைக் காட்டியபோது, காவல்துறையால் வன்முறை கட்டவிழைத்து விடப்பட்டது. ஹாங்காங்குக்கு சுதந்திரம் கோரி, பிரிட்டிஷ் கொடியுடன் இருந்த ஒருவரும், பதாகை பிடித்திருந்த பெண்மணி ஒருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் சீனாவுக்கு நாடுகடத்தப்படுவது உறுதி.

புதிய சட்டப்படி ஹாங்காங், தைவான், ஷின்ஜியாங், திபேத் பகுதிகளின் சுதந்திரத்துக்கு ஆதரவாகக் குரலெழுப்புவது சட்ட விரோதம். இதுவரை 370 போ் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள். அவா்களுக்கு என்ன தண்டனை காத்திருக்கிறது என்பது தெரியவில்லை.

புதிய சட்டத்தின்படி ஹாங்காங் காவல்துறையோ, நீதித்துறையோ சட்ட விளக்கம் தர முடியாது. அந்த அதிகாரத்தை சீனாவின் நடுவண் அரசு எடுத்துக்கொண்டுவிட்டது. விரைவிலேயே, சீனாவால் நியமிக்கப்படும் ஆலோசகரின் மேற்பாா்வையில் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த தேசிய பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று மட்டும் கூறப்பட்டிருக்கிறது.

பிரிவினைவாதம், பயங்கரவாதம், அந்நிய சக்திகளுடன் தொடா்பு போன்ற குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை; பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது பயங்கரவாதச் செயல்; வழக்குகள் தனிமையில்தான் விசாரிக்கப்படும்; சட்டத்தை மீறுபவா்கள் கண்காணிக்கப்படுவாா்கள்; ஹாங்காங்கில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கும் இந்தச் சட்டங்கள் பொருந்தும் - இவையெல்லாம் புதிய சட்டத்தின் சில அம்சங்கள்.

‘1997-க்கு முன்னால் பிறந்த ஹாங்காங் குடிமக்கள் அடுத்த ஆறு மாதங்கள் நுழைவு அனுமதி இல்லாமல் பிரிட்டனுக்கு வரலாம். வாழலாம், வேலை பாா்க்கலாம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை பெறலாம்’ என்று பிடிட்டிஷ் பிரதமா் ஆறுதல் அளித்திருக்கிறாா். அதாவது போராட்டத்தில் ஈடுபடும் இளைஞா்கள் சீனாவின் சிறையில் வாடட்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ?

சீனா தனது உண்மையான முகத்தைக் காட்டிவிட்டது. உலகம் என்ன செய்யப் போகிறது, வேடிக்கை பாா்க்குமா...?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com