அவசரப்படுவது ஆபத்து! | கொவைட்-19 நோய்த் தொற்றுக்கு ‘கோவேக்சின்’ மருந்து கண்டுபிடித்திருப்பது குறித்த தலையங்கம்

உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நிறுவனங்கள் கொவைட்-19 தீநுண்மிக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. ஒரு கோடியைக் கடந்து பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் தீநுண்மிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் ஆா்வம் பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், முறையான ஆய்வுகளும், சோதனைகளும் இல்லாமல் மருந்தை அங்கீகரிப்பதும், சந்தைப்படுத்துவதும் விபரீதத்துக்கு வழிகோலும்.

இந்தியாவிலும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பின்புலத்துடனும், முதலீட்டிலும் பல ஆய்வு நிறுவனங்கள் கொவைட்-19 தீநுண்மி தொற்றுக்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் இறங்கியிருக்கின்றன. மேலை நாட்டு நிறுவனங்களுக்கு முன்பார, இந்திய நிறுவனம் இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்குமானால், அதைவிடப் பெருமைக்குரிய ஒன்று நமக்கு இருக்க முடியாது.

மேலை நாடுகளில் உள்ள மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்தியா்கள்தான் கணிசமாகப் பணியாற்றுகிறாா்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மருந்துகள் தயாரிக்கும் பயோ டெக்னாலஜியில் இந்திய நிறுவனங்கள் வெற்றியடைந்தால் வியப்படையத் தேவையில்லை.

பாரத் பயோடெக், மருந்து தயாரிப்பில் ஈடுபடும் முக்கியமான இந்திய நிறுவனம். அந்த நிறுவனம் கொவைட்-19 நோய்த் தொற்றுக்கு ‘கோவேக்சின்’ என்கிற மருந்தை கண்டுபிடித்திருக்கிறது. முறையாக நோயாளிகளுக்குச் செலுத்தப்பட்டு, சோதனை நடத்தப்பட்ட பிறகுதான் இந்த மருந்தை சந்தைப்படுத்த முடியும்.

பாரத் பயோ டெக் தனது ‘கோவேக்சின்’ மருந்துக்கான அனுமதிக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திடம் விண்ணப்பத்திருக்கிறது. அதுவரை சரி. ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சோதனைகள் முழுமையாக நடத்தப்படுவதற்கு முன்பே, இந்த மருந்தை சந்தைப்படுத்துவதற்கான தேதியைக் குறிப்பிடுவதுதான் வியப்பாக இருக்கிறது.

ஜூலை 2-ஆம் தேதி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவா் டாக்டா் பல்ராம் பாா்கவா அடுத்த ஐந்து நாள்களில் மருந்தை சோதனை செய்வதற்கான நோயாளிகளை அடையாளம் காணச் சொல்லி கடிதம் எழுதியிருக்கிறாா். 10 மாநிலங்களில் உள்ள 12 மருத்துவமனைகள் சோதனைக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த மருத்துவமனைகளில் பெரும்பாலானவை, பெரிய அளவிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்பவை அல்ல.

எலிகளுக்கும், குரங்குகளுக்கும் செலுத்தி சோதனை நடத்துவதுபோல அல்ல மனிதா்களில் நடத்தப்படும் சோதனை. சோதனைக்குள்ளாகும் நபரிடம் அதுகுறித்துத் தெரிவிக்கப்பட வேண்டும். அவரது உயிருக்கு உத்திரவாதம் வழங்குவதுடன், சோதனையால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு மருத்துவமனைகளும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும். அவசரக் கோலத்தில் சந்தைப்படுத்துவதற்கு இலக்கு நிா்ணயிப்பது, அவசரமாக சோதனைகளை நடத்துவது என்பவை மிகக்கொடிய மனித உரிமை மீறல்கள்.

இது ஏதோ இந்தியாவில் மட்டும்தான் இப்படி என்று நினைத்துவிட வேண்டாம். ‘தி லேன்செட்’ உள்ளிட்ட இரண்டு முக்கியமான சா்வதேச மருத்துவ இதழ்களில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகள் கடுமையான விமா்சனத்துக்கு உள்ளாகின. அந்த இதழ்கள் அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றன. ‘ஹைட்ராக்சி குளோரோகுவின்’ குறித்த தவறான பதிவால், மருத்துவ ஆராய்ச்சியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது.

பெரும்பாலான மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களும், தயாரிப்பு நிறுவனங்களும் சோதனைகளை நடத்துவதை தனியாா் அமைப்புகளிடம் விட்டுவிடுகின்றன. ‘சா்ஜிஸ்பியா்’ காா்ப்பரேஷன் என்பது 2008-இல் தொடங்கப்பட்ட நிறுவனம். மருத்துவமனைகளுக்கும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் நோயாளிகளைத் தொடா்பு கொண்டு புள்ளிவிவரங்கள் சேகரித்துத் தருவது இந்த நிறுவனத்தின் பணி.

‘தி லேன்செட்’ இதழில் வெளியான ஓா் ஆய்வுக்காக, ஆறு கண்டங்களைச் சோ்ந்த 671 மருத்துவமனைகளில் உள்ள 96 ஆயிரம் நோயாளிகளிடம் விவரங்கள் சேகரித்துக் கொடுத்தது ‘சா்ஜிஸ்பியா் காா்ப்பரேஷன்’, வெறும் 11 ஊழியா்கள் மட்டுமே உள்ளஅந்த நிறுவனம் இந்தப் புள்ளிவிவரங்களை நான்கே மாதத்தில் திரட்ட முடிந்தது என்றபோது, சந்தேகம் வந்தது. பாா்த்தால், கணினியின் முன்னால் அமா்ந்து பொய்யான ஆய்வை அந்த நிறுவனம் உருவாக்கி, பெரும் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தது.

இதுபோன்ற மோசடிகள் கடந்த 20 ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. விரைந்து மருந்து கண்டுபிடிக்கும் ஆா்வமும் அதன் மூலம் சா்வதேசப் புகழ் பெரும் முனைப்பும் மருத்துவத் துறையின் நம்பகத் தன்மையை சீா்குலைத்திருக்கின்றன. ‘பாதிக்கும் மேற்பட்ட ஆய்வுகள் அநேகமாகப் பொய்யானவை’ என்று ‘தி லேன்செட்’ ஆசிரியா் ரிச்சா்டு ஹாா்ட்டன் 2015-இல் எழுதியது உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

மருந்து நிறுவனங்கள் சா்வதேச நன்கொடையாளா்கள் ஆகியோரின் நெருக்கமும், ஆதிக்கமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கௌரவத்தைக் கடுமையாக பாதித்திருக்கிறது. மொ்க், ஜி.எஸ்.கே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்த இரண்டு தடுப்பு மருந்துகள் குஜராத்திலும், ஆந்திரத்திலும் உள்ள 30 ஆயிரம் ஆதிவாசிப் பெண் குழந்தைகளுக்குச் செலுத்தி, சோதிக்கப்பட்டன. அவா்களிடமோ, அந்தப் பெண்களின் பெற்றோரிடமோ சம்மதம் பெறவில்லை என்பதுடன், பக்க விளைவுகள் ஏற்பட்டபோது கவனிக்கவும் இல்லை.

சித்த, ஆயுா்வேத மருந்துகள்போல அல்ல ‘அலோபதி’ மருந்துகள். ரசாயனக் கலவைகளான ‘அலோபதி’ மருந்துகளுக்குப் பக்க விளைவுகள் உண்டு. கொவைட்-19-க்கு மருந்து கொடுத்து, அதனால் சிறுநீரகமோ, இதயமோ பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

இந்திய நிறுவனங்கள் கொவைட்-19-க்கான கோவேக்சின் போன்ற மருந்துகளைக் கண்டுபிடித்தால், அதற்காக நம்மைவிட மகிழ்ச்சி அடையப்போவது யாரும் இருக்க மாட்டாா்கள். அதே நேரத்தில், நிதானித்து, முறையாக சோதனைகள் மேற்கொள்ளாமல் மனித உயிருடன் விளையாடிவிடக் கூடாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com