இங்கே இப்படி, அங்கே அப்படி! | உ.பி.யில் மாஃபியா கும்பல் காவல் துறையுடனான மோதல் குறித்த தலையங்கம்

காக்கிச் சட்டைக்கு மக்கள் மத்தியில் ஒரு கௌரவம் உண்டு. நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது,  அந்தக் காக்கிச் சட்டையை அணிபவர்களுக்கு அதன் கௌரவமும், மரியாதையும் புரியவில்லை


கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சரகத்தில் மாஃபியா கும்பலால் தாக்கப்பட்டு காவலர்கள் எட்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம், சாத்தான்குளம் போலவே ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மாஃபியா கும்பல் காவல் துறையுடன் மோதலில் ஈடுபட்டு சவால் விடுகிறது என்று சொன்னால், எந்த அளவுக்கு உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இதே நிலைமை இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் பரவத் தொடங்கினால் என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

கான்பூர் சரகம், செüபேபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட "பிக்ரு' என்கிற கிராமத்தில், "விகாஸ் துபே' என்கிற மாஃபியா கொள்ளைக்காரன் செயல்பட்டு வந்தான். அவனை வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் எதிர்பாராத விதமாக அந்தக் கிராமத்துக்குச் சென்று கைது செய்வது என்று காவல் துறை முடிவெடுத்தது. அதற்காக ஒரு தனி காவல் படையே புறப்பட்டது.  

"காவல் துறையினர் வரட்டும். அவர்கள் சவப் பெட்டியில்தான்  வீடு திரும்புவார்கள்' என்று திரைப்பட வில்லன்கள் பாணியில் சூளுரைத்திருக்கிறான் முன்பே விவரம் அறிந்த விகாஸ் துபே.

காவல் துறையினர் "பிக்ரு'  கிராமத்தை நெருங்குவதற்கு முன்னால் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளையர்கள் தாக்கினர். காவல் படை கைது செய்ய வருகிறது என்று சௌபேபூர் காவல் நிலையத்திலிருந்து விகாஸ் துபேக்கு தகவல் தரப்பட்டிருக்கிறது. தாக்குதல் நடப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் சௌபேபூர் மின்வாரிய அலுவலகத்துக்குக் காவல் நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. சௌபேபூர் காவல் நிலைய அதிகாரி வினய் திவாரி தலைமையிலான காவலர்கள், மாஃபியாக்களுக்கு எதிரான போராட்டத்தில்  தங்களது துப்பாக்கியைப் பயன்படுத்தவே இல்லை என்பதுதான் அதைவிட அதிர்ச்சி.  அதாவது, விகாஸ் துபேயின்  ஒற்றர்களாகக் காவல் துறையினரில் பலர் சௌபேபூர் காவல் நிலையத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுகிறது.

விகாஸ் துபேயின் வீட்டுக்குள் யாரும் நுழைய முடியாது. உள்ளூர் வாசிகள், வீட்டுக்கு வெளியே இருக்கும்  தோட்டத்திலோ அல்லது ஊருக்கு  வெளியிலோதான் அவனை சந்திக்க முடியும். காவல் துறையினர் அவனது வீட்டை முற்றுகையிட்டு  அநேகமாக  தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். வீட்டுக்குள் மிகப்பெரிய பதுங்குக் குழி ஒன்று  அமைக்கப்பட்டு, பல மாதங்களுக்குத் தேவையான  அத்தியாவசியப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வீட்டுக்குள் இருந்து அதே கிராமத்தில் இருக்கும் துபேயின் பழைய வீட்டுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து வெளியேற  ஐந்து வாசல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

விகாஸ் துபேயின் வீட்டைக் கைப்பற்றி அங்கிருக்கும் ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் தேடிப் பிடிப்பதற்கு பத்து மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்கிறது.  சுவருக்குள் 15 நாட்டு வெடி குண்டுகள், 6  நாட்டுத் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இப்படியொரு மாஃபியா கும்பல் செயல்படுகிறது என்பது குறித்து மேலதிகாரிகளை  சௌபேபூர் காவல் நிலையம் எச்சரிக்காமல்  இருந்திருப்பது,  உத்தரப் பிரதேச காவல் துறையின் செயல்பாடுகள் மாஃபியாக்களின்  ஆதிக்கத்தில்  இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஆட்சிகள்  மாறினாலும், மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம்  குறைவதில்லை. இந்த அளவுக்கு மாஃபியா கும்பல்கள் வளர்ந்ததற்கு முலாயம் சிங் யாதவின் ஆட்சி மிக முக்கியமான காரணம்.  மாயாவதி ஆட்சியின்போது காவல் துறைக்குக் கூடுதல் அதிகாரம் தரப்பட்டு, அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருந்ததால் மாஃபியாக்களின் ஆதிக்கம் சற்றுக் குறைவாக இருந்தன என்பது பரவலான கருத்து. யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மீண்டும் மாஃபியாக்கள் முன்புபோல ஆதிக்கம் செலுத்தத்  தொடங்கியிருக்கிறார்கள்.

மாஃபியாக்களும்,  சட்ட விரோதக் கும்பல்களும் அதிகரிக்கும்போது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சாமானிய மக்கள் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்துக் கொள்கிறார்கள்.  அரசியல்வாதிகள் தங்களுக்கு  இசட் பிரிவு, ஒய் பிரிவு என்று பாதுகாப்புக் கோருவது கௌரவம் என்று கருதுகிறார்கள். வசதி படைத்தவர்கள் எல்லோருமே முன்பெல்லாம் பண்ணையார்களும், ஜமீன்தார்களும் அடியாள்களை வைத்திருப்பதுபோல, உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் காவலர்கள் வைத்துக் கொள்வதை கௌரவ அடையாளமாகக் கருதுகிறார்கள். விளைவு? சட்ட விரோத ஆயுதத் தயாரிப்பு குடிசைத் தொழிலாக மாறியிருக்கிறது. 

ஆரம்பத்தில் பிகார் மாநிலம், முங்கர் பகுதியில் மட்டுமே காணப்பட்ட சட்ட விரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை தயாரிக்கும் தொழில், இப்போது தலைநகர் தில்லியை அடுத்த உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் வரை பரவியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கொலைகளில் 90% சட்ட விரோத துப்பாக்கிகளின் மூலம்தான் நடத்தப்படுகின்றன. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மிக அதிகமாக  துப்பாக்கிகளை தனி நபர்கள் வைத்திருக்கிறார்கள்.  

இந்தியாவிலுள்ள 7.1 கோடி தனியார் வசம் உள்ள துப்பாக்கிகளில் ஒரு கோடி மட்டும்தான்  பதிவு செய்யப்பட்டு உரிமம் தரப்பட்டவை. உலகிலேயே மிகக் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம்  இந்தியாவிலிருந்தும், 86% தனியார் வசம் உள்ள துப்பாக்கிகள் சட்ட விரோதமானவை. 

காக்கிச் சட்டைக்கு மக்கள் மத்தியில் ஒரு கௌரவம் உண்டு. நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது,  அந்தக் காக்கிச் சட்டையை அணிபவர்களுக்கு அதன் கௌரவமும், மரியாதையும் புரியவில்லை என்பது தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com