அதிகார போதை! | ரஷியாவின் திடீர் கருத்து வாக்கெடுப்பு குறித்த தலையங்கம்

தனது அதிபர் பதவிக்கால நீட்டிப்பை மட்டுமே  முன்வைத்து  கருத்து வாக்கெடுப்பு  அதிபர் புதினால் நடத்தப்படவில்லை.  அரசியல் சாசன சீர்திருத்தம் என்கிற பெயரில் பல திருத்தங்கள்  முன்மொழியப்பட்டு, அதில் ஒன்றாக


கம்யூனிஸத்திலிருந்து சர்வாதிகாரத்தைப் பிரிக்க முடியாது. அந்தத் தத்துவத்தின் அடிப்படையே சர்வாதிகார, எதேச்சதிகார கோட்பாடுதான். விளாதிமீர் லெனின் தலைமையில் ரஷியாவிலும், மாசேதுங் தலைமையில் சீனாவிலும், ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில்  கியூபாவிலும்  மட்டுமல்ல, உலகின் ஏனைய எல்லா நாடுகளிலும் அமைந்த கம்யூனிஸ ஆட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளாகத்தான் இருந்திருக்கின்றன.  சர்வாதிகாரிகள் தங்களை நிரந்தரமானவர்கள் என்று கருதிக் கொள்வதும், கடைசியில் அவர்களது உற்ற தோழர்களாலேயே வஞ்சிக்கப்படுவதும் வரலாறு பலமுறை மீண்டும் மீண்டும்  பதிவு செய்திருக்கும் உண்மை. 

21-ஆம் நூற்றாண்டில் சர்வாதிகாரம் ஒரு புதிய  உருவம் எடுத்திருக்கிறது. ஜனநாயகம் என்கிற போர்வையில்  தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அந்த முயற்சி ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு நாடுகளில் அரங்கேறி வருகிறது.  அதன்  சமீபத்திய எடுத்துக்காட்டு ரஷியாவில் 67 வயது  விளாதிமீர் புதின் தன்னை  நிரந்தர அதிபராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பது. 

ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு  சோவியத் யூனியனிலும், அது பிளவுபட்ட பிறகு  எஞ்சியிருக்கும் ரஷியாவிலும் தன்னை ஓர் அசைக்க முடியாத சக்தியாக மாற்றிக் கொண்டிருக்கிறார் அதிபர் புதின்.  அவர் தன்னை தேர்ந்தெடுத்துக் கொண்ட விதமும், சூழ்நிலையும் கடுமையான விமர்சனங்களுக்கு  உள்ளானாலும் கூட,  புதின் தனது நோக்கத்திற்கு அவை எதுவும் தடையாக இருக்க அனுமதிக்கவில்லை.

ரஷியாவில் நடந்த  கருத்து வாக்கெடுப்பு அடுத்த 16 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சிக்கு வழிகோலியிருக்கிறது. உலகம் முழுவதும் பொருளாதாரப் பிரச்னைகளாலும், கொவைட்-19 நோய்த் தொற்றுப் பிரச்னையாலும் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில்,  புதினின்  ஜனநாயக விரோத முயற்சியால் ரஷியாவில் ஸ்திரத்தன்மை என்கிற நன்மை விளைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 

முந்தைய சோவியத் யூனியனின் சர்வதேச உளவு அமைப்பான கேஜிபி-யின் ஒற்றராக இருந்த விளாதிமீர் புதின், 1999-இல் ரஷியாவின் அதிபரானபோது ஓர் அசைக்க முடியாத சக்தியாக உருவாகப் போகிறார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  2008-முதல் 2012-வரை  பிரதமராக இருந்த நான்கு ஆண்டுகளைத் தவிர ஏனைய ஆண்டுகளில் அவர்தான் ரஷியாவின் அதிபராக இருந்திருக்கிறார். 

ஆறு ஆண்டு பதவிக்காலம் உடைய அதிபர் பதவியில் மேலும் இரண்டு முறை பதவியில் தொடர அதிபர் புதினுக்கு கருத்து வாக்கெடுப்பு  அனுமதி வழங்கியிருக்கிறது. அவரது தற்போதைய பதவிக்காலம் முடிவடைய  இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில், புதிய அரசியல் சீர்திருத்தத்தின் பின்னணியில் 2036 வரை புதின் அதிபராகத் தொடர்வதற்குக் கருத்து வாக்கெடுப்பு வழிகோலுகிறது. 

இன்னும் நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில், இப்போது திடீரென்று கருத்து வாக்கெடுப்புக்கு அதிபர் புதின்  முன்கூட்டியே தயாரானதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ரஷியாவில் கொவைட்-19 நோய்த் தொற்றுப் பரவல் ஆரம்பத்திலேயே கவனிக்கப்படாமல் மெத்தனமாக விடப்பட்டதால்,  மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருந்த பொருளாதாரம் இப்போது சீர்குலைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதிபர் புதினின் செல்வாக்கும், வரலாறு காணாத வீழ்ச்சியை எதிர்கொள்கிறது. 

இப்படிப்பட்ட  சூழலில் அதிபர் புதின் வாக்கெடுப்பில்  எப்படி வெற்றியடைந்தார் என்கிற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை. ஆனால், உலக வல்லரசுகள் கொவைட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், ரஷியாவில் நடக்கும் தேர்தல் குறித்துக் கவலைப்பட அவர்களுக்கு நேரமில்லை.

கருத்து வாக்கெடுப்பு நேர்மையான முறையில் நடத்தப்படவில்லை.  பல விதிமுறை மீறல்களும், முறைகேடுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. கொவைட்-19 நோய்த் தொற்றைக் காரணம் காட்டி எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. வாக்காளர்களில் பலருக்கும் அரசியல் சாசன சீர்திருத்தங்களை ஆதரித்து வாக்களிப்பதற்காக வெகுமதிகள் லஞ்சமாக வழங்கப்பட்டன. வாக்கெடுப்பில்  ஒரு பகுதி இணைய வழியிலும் நடத்தப்பட்டது. வாக்கெடுப்பைக் கண்காணிக்கவோ, வாக்குகளை சரிபார்க்கவோ வழியில்லாத நிலையில், அதிபர் புதினின் முடிவை மக்கள் முடிவாக அங்கீகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

தனது அதிபர் பதவிக்கால நீட்டிப்பை மட்டுமே  முன்வைத்து  கருத்து வாக்கெடுப்பு  அதிபர் புதினால் நடத்தப்படவில்லை.  அரசியல் சாசன சீர்திருத்தம் என்கிற பெயரில் பல திருத்தங்கள்  முன்மொழியப்பட்டு, அதில் ஒன்றாக அதிபர் பதவியில் தொடர்வதற்கான  காலவரம்பை அகற்றுவதும் இணைக்கப்பட்டிருந்தது. வாக்காளர்கள் ஆம், இல்லை என்கிற பதிலைத்தான் அளிக்க முடியும். அந்தச் சீர்திருத்தங்களில்  ஓய்வூதியத்தை அதிகரிப்பது,  குறைந்தபட்ச ஊதியம், ஒருபாலர் திருமணங்கள் மறுப்பு ஆகியவை மட்டுமல்லாமல், இறை நம்பிக்கையையும் ரஷிய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை  அம்சங்களில் ஒன்றாக  இணைப்பதும் முக்கியமானவை. 

அனைத்து சீர்திருத்தங்களையும் இணைத்துத்தான் ஆதரவு தெரிவிக்க முடியும் அல்லது நிராகரிக்க முடியும். அதனால், பலரும் இறை நம்பிக்கைக் கோட்பாடு, ஓய்வூதியம் உள்ளிட்டவைக்காக வாக்களித்தார்களே தவிர, அதிபர் புதின் 2036 வரை பதவியில் தொடர்வதற்காக வாக்களித்தார்கள் என்று கருதிவிட முடியாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தேசிய மக்கள் காங்கிரஸ் அந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் காணப்பட்ட   தடைகளை நீக்கி, அதிபர் ஷி ஜின்பிங் வாழ்நாள் அதிபராகத் தொடர அனுமதித்தது. இப்போது  கண்துடைப்பு கருத்து வாக்கெடுப்பின் மூலம்  தன்னை நிரந்தர அதிபராக  அறிவித்துக் கொள்ள முற்பட்டிருக்கிறார் அதிபர் புதின்.

லெனின், ஸ்டாலின், மாவோ, ஏன் ஹிட்லர், முசோலினி என்று  எல்லோரும் தங்களை  நிரந்தரமாக  அதிகாரத்தில் தக்கவைத்துக் கொள்ளத்தான் விழைந்தார்கள். அதிகாரம் அனுமதித்தாலும்  காலம் அனுமதிக்க வேண்டுமே...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com