கிலானியின் விலகல்...| கிலானிக்கு பிந்தைய ஜம்மு - காஷ்மீர் அரசியலைப் பற்றிய தலையங்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தன்னாட்சி அங்கீகாரம் அகற்றப்பட்டது முதல் இன்று வரை இயல்பு வாழ்க்கை அந்த மாநிலத்தில், அதிலும் குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் திரும்பவில்லை என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த முடிவு காலத்தின் கட்டாயம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில் ஏறத்தாழ ஓர் ஆண்டு ஆகப்போகும் நிலையில், இனியும்கூட காஷ்மீரில் ஏனைய இந்தியப் பகுதிகளைப்போல இயல்புநிலை திரும்பாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
 இந்தப் பின்னணியில், ஹுரியத் மாநாட்டு அமைப்பு கிலானி பிரிவின் தலைமைப் பதவியிலிருந்து சையது அலி ஷா கிலானி ராஜிநாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு. 2003-முதல் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் கிலானி பிரிவுத் தலைவராக இருந்த சையது அலி ஷா, அரசியலுக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்திருப்பது காஷ்மீரின் பிரிவினைவாத அரசியலில் மிக முக்கியமான திருப்பம். தான் தலைமை வகிக்கும் ஓர் அமைப்பிலிருந்து விலகிக்கொள்வது என்பது சாதாரணமான முடிவாக இருக்க முடியாது. அவரது ராஜிநாமா கடிதம், காஷ்மீர் பிரிவினைவாத அரசியலில் காணப்படும் அரசியல் சந்தர்ப்பவாதம், தரம் தாழ்ந்த அரசியல் ஆகியவற்றை வெளிச்சம் போடுகிறது.
 இஸ்லாமிய அடிப்படைவாதியும், தீவிர பிரிவினைவாதியுமான சையது அலி ஷா கிலானி பாகிஸ்தானிலிருந்து இயங்கும் பிரிவினைவாதிகளைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். அவர்கள் மத்தியில் காணப்படும் ஊழலையும், அவர்கள் தன்னை கலந்தாலோசிக்காமல் எடுக்கும் முடிவுகளையும் விமர்சித்திருக்கிறார். தன்னுடைய அறிக்கைகளையும் பேச்சுகளையும் அவர்கள் தவறாக மாற்றிப் பரப்புவதாக குற்றம்சாட்டியிருக்கிறார். அவர்களை மட்டுமல்ல, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிரிவினைவாதிகளையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் கிலானி. ஆகஸ்ட் 5, 2019-இல் மத்திய அரசு காஷ்மீரின் சுயாட்சி அந்தஸ்தை அகற்றியபோது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிரிவினைவாதிகள் அனைவரும் ஒருங்கிணைந்து அதை எதிர்க்க முற்படவில்லை என்பது அவரது வருத்தம்.
 பாகிஸ்தான் அரசை தனது கடிதத்தில் நேரடியாக குற்றம் சாட்டவோ, பெயர் கூறி விமர்சிக்கவோ இல்லையென்றாலும், அந்த ராஜிநாமா கடிதத்திலிருந்து கிலானிக்கு பாகிஸ்தான் மீதிருந்த கடுமையான வருத்தம் வெளிப்படுகிறது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் மட்டுமல்லாது பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலிருந்து செயல்படும் பிரிவினைவாதிகளும் பாகிஸ்தானிய அரசின் முகவர்களாகத்தான் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால், கிலானியை கலந்தாலோசிக்காமல் அல்லது கிலானிக்கு மரியாதை தராமல் அவர்கள் செயல்படுகிறார்கள் என்றால், அது நிச்சயமாக பாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தூண்டுதல் இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
 சிறிது காலமாகவே, சையது அலி ஷா கிலானியை ஓரம்கட்டும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வந்தது. கிலானிக்கு வயதாகிவிட்டது என்பது அதற்கொரு முக்கியமான காரணம். அதேபோல, பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் புதிய இளைய தலைமுறை பிரிவினைவாதிகள் காஷ்மீரில் அதிகரித்துவிட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு கிலானியின் தயவு இனிமேலும் தேவையில்லை. அதனால்தான் அதை உணர்ந்த சையது அலி ஷா கிலானி தனது பங்குக்கு பாகிஸ்தானை தனது கடிதத்தின் மூலம் மறைமுகமாக திருப்பித் தாக்க முற்பட்டிருக்கிறார். இதுவொரு முக்கியமான திருப்பம். ஏனென்றால் பல ஆண்டுகளாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ஆதரவு அரசியலை முன்னின்று நடத்தியவர் கிலானி என்பதால் அவரது கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.
 கிலானியின் வெளியேற்றம் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிரிவினைவாத அரசியலில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். காஷ்மீர் பிரிவினைவாத அரசியலில் கிலானிக்கு இருக்கும் அளவு மரியாதையும் கௌரவமும் வேறு யாருக்கும் கிடையாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதேநேரத்தில், அவரது வெளியேற்றம் புதிய பல இளைய தலைமுறை பிரிவினைவாதிகளின் வளர்ச்சிக்கு வழிகோலக்கூடும். அதிலும் குறிப்பாக, மஸாரத் ஆலம் போன்ற பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் வலுப்பெறுவார்கள்.
 இந்தியாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டையும் பாகிஸ்தானுக்கு ஆதரவான செயல்பாட்டையும் கொண்ட இளைய தலைமுறை பிரிவினைவாதிகள் கையில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அரசியல் வீழ்ந்துவிடக் கூடும். அதன் விளைவு, இந்தியாவுக்கு எதிரான மோதல் போக்கு இன்னும் கடுமையாக அதிகரிக்கக் கூடும். பாகிஸ்தானும் அவர்களுக்கு எல்லா விதத்திலும் உதவக்கூடும்.
 சையது அலி ஷா கிலானி இல்லாத காஷ்மீர் அரசியல், எதிர்வரும் நாள்களில் எப்படி இருக்கப்போகிறது என்கிற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மோதல் போக்கு அதிகரிக்குமா அல்லது பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு ஏற்படுமா என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக் உள்ளிட்ட மிதவாத ஹுரியத் தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டிருக்கிறார்கள். மத்திய அரசும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, அவர்களை பிரிவினைவாத நிலைப்பாட்டிலிருந்து மாற்றவோ முயற்சிகள் எதுவும் எடுப்பதாகத் தெரியவில்லை. இதே நிலைமை தொடருமானால் பயங்கரவாதத் தலைவர்களின் கையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு சிக்கிவிடக் கூடும்.
 இதுவரை மத்திய அரசுடன் பிரிவினைவாதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தவர் சையது அலி ஷா கிலானி. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது மத்திய அரசுக்கு புதியதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com