அறிக்கை எழுப்பும் எச்சரிக்கை! | பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், ஆய்வுகள் குறித்த தலையங்கம்

பருவநிலை மாற்றத்தால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மிகப்பெரிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம். இந்தப் பருவநிலை மாற்றத்துக்கு மிக முக்கியமான காரணம்,

 
மத்திய அரசின் புவி அறிவியல் துறை பருவநிலை மாற்றம் குறித்த ஓர் அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டிருக்கிறது. நாட்டிலுள்ள முக்கியமான ஆய்வு நிறுவனங்கள் பலவற்றின் அறிஞர்கள் இணைந்து தயாரித்திருக்கும் அறிக்கை இது. அடுத்த பதின் ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து அந்த அறிக்கை விரிவாகவே எடுத்தியம்புகிறது. இப்படியொரு விரிவான அறிக்கையை முதல்முறையாக இந்தியா தயாரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.நா. சபையின் பல்வேறு அமைப்புகள் இந்தியாவின் பருவநிலை மாற்றம் குறித்துத் தங்களது அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தாலும்கூட அவையெல்லாம் சர்வதேச அளவிலான ஆய்வுகளின் ஒரு பகுதியாக மட்டுமே காணப்படுகின்றன. இப்போதுதான் முதல்முறையாக இந்தியாவை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் ஐ.நா. சபை தயாரித்த அறிக்கைகளில் இமயமலையும் அதைச் சார்ந்த பகுதிகளும், அதனால் ஏற்படும் சூழலியல் பிரச்னைகளும் கூடுதலாக இடம்பெற்றிருந்தன. இந்தியா போன்ற பல்வேறு விதமான பருவங்களைக் கொண்ட பெரிய நாட்டுக்கு முழுமையான தனிப்பட்ட ஆய்வு ஒன்று தேவை எனத் தீர்மானித்து இந்த அறிக்கை இப்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் மாநில அளவிலும், அதற்குக் கீழேயுள்ள அளவிலும்கூட பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் அந்த பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் சிலவும் இடம்பெறுகின்றன.

கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்டிருந்த பருவநிலை குறித்த பல்வேறு பிரச்னைகளின் அடிப்படையிலும், அதனால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகளின் அடிப்படையிலும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் இந்த அறிக்கையின் முடிவுகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் சிந்தித்து செயல்பட்டாக வேண்டும்.

இந்த அறிக்கையின்படி, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் சராசரி வெப்பநிலை சுமார் 4.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரக்கூடும். 1901 -  2018 இடைவெளியில் இந்தியாவில் சராசரி வெப்பநிலை உயர்வு 0.7 டிகிரி செல்சியஸ் என்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 1951 முதல் 2015 வரையிலான சராசரி கடல்மட்ட வெப்பம், இந்து மகா சமுத்திரத்தில் 1 டிகிரி செல்சியஸ். அதுவே உலக சராசரியைவிட அதிகம். 

இந்த அறிக்கையின்படி, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பருவமழைப் பொழிவு மிகவும் குறையும். அதனால் வெப்பநிலை அதிகரிக்கும். அதன் விளைவாக கடல்மட்டம் உயர்ந்து கடுமையான வறட்சி, அதிக அளவிலான சூறைக்காற்று, புயல், வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதுபோல, மேலும் பல பருவநிலை மாற்ற விளைவுகள் ஏற்படக்கூடும். அதன் விளைவாக, விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி குறையலாம். தண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்படலாம். புயல், சூறைக்காற்று, சில இடங்களில் நிலநடுக்கம் ஆகியவற்றால் பொதுக் கட்டமைப்புகள் பாதிப்பை எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியாது. 

வெப்பம் அதிகரிப்பதால்,  இமயமலையின் பனிச் சிகரங்கள்  உருகத் தொடங்கும். அதன் விளைவாக, கங்கை நதி பாயும் சமவெளிப் பிரதேசங்களில் மட்டும் சுமார் 58 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதேபோல, 2100- க்குள் கடல்மட்டம் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயருமேயானால், இந்தியாவின் கடற்கரைகளையொட்டிய தாழ்வுப் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 17.7 கோடி மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிவரும். 2018- 19 இல் மட்டுமே வெள்ளப்பெருக்கு, புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களுக்கு 2,400 பேர் தங்களது உயிரை பலி கொடுத்துள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்படும் என்பதைத் திட்டவட்டமாக நாம் இப்போது கூறிவிட முடியாது; கணிக்கவும் முடியாது. ஆனால் அவை கடுமையாக இருக்கும் என்பதை மட்டும் உணர முடிகிறது. பருவநிலை மாற்றத்தால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மிகப்பெரிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம். இந்தப் பருவநிலை மாற்றத்துக்கு மிக முக்கியமான காரணம், மனிதர்களின் நடவடிக்கைகளும் வாழ்க்கை முறைகளும்தான் என்பதற்கான சாட்சியங்கள் பல இருக்கின்றன. 

சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கெனவே பல்வேறு அறிக்கைகளை பொருட்படுத்தாமல் கட்டமைப்பு வசதிகளுக்காகவும், தொழில் வளர்ச்சி என்ற பெயரிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களுக்கெல்லாம் அனுமதி வழங்கி வருகிறது. இப்பொழுது இப்படியொரு அறிக்கையைத் தயாரித்திருக்கின்ற அமைச்சகம் இந்த அறிக்கையின் எச்சரிக்கைகளைப் புரிந்துகொண்டு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள். 

இந்தியா மிகப் பெரிய நாடு. பல்வேறு பருவநிலைகளைக் கொண்ட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட சுற்றுச்சூழலைக் கொண்ட நாடு. ஆகவே எதிர்காலத்தில் வரவிருக்கும் பேரழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு இப்போதே நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டியது மத்திய அரசின், அதிலும் குறிப்பாக, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அவசரக் கடமை. கொவைட்- 19 கொள்ளை நோய்த் தாக்கம் அடுத்த சில மாதங்களில் போய்விடக் கூடும். ஆனால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் நிரந்தரமானவை. அவற்றை மாற்ற முடியாது. அவை மனிதர்கள் வாழத் தகுதியில்லாத உலகை உருவாக்கிவிடும் என்பதை அரசும் மக்களும் உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com