பாலைவனப் புயல்! | சச்சின் பைலட் பதவி நீக்கம் குறித்த தலையங்கம்

படித்தவர்; நன்றாக ஆங்கிலம் பேசக்கூடியவர்; காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர்; மத்திய அமைச்சராகத் திறம்பட பணியாற்றியவர்; சோர்ந்து கிடந்த ராஜஸ்தான் காங்கிரஸூக்கு


அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரவை, சச்சின் பைலட் உயர்த்திய போர்க்கொடியால் ஒரு மிகப்பெரிய புயலை எதிர்கொண்டது. ராஜஸ்தானின் துணை முதல்வர் பதவியில் இருந்தும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் அகற்றப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவருடன் அவரது ஆதரவாளர்களான விஷ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகிய இருவரும் அமைச்சரவையிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள். கல்வி அமைச்சரான கோவிந்த் சிங் டோதாஸ்ரா ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எண்ணிக்கை பலம் இல்லையென்றாலும்கூட தார்மிக ரீதியாக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியிருப்பதில் நியாயம் இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. 

கடந்த இரண்டு நாள்களாக நடத்தப்பட்ட எல்லா சமாதான முயற்சிகளும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சச்சின் பைலட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று காங்கிரஸ் தலைமை கூறினாலும்கூட, அவரது வெளியேற்றத்துக்குப் பின்னால் முதல்வர் அசோக் கெலாட்டின் திட்டமிட்ட சதி இருப்பதை உணர முடிகிறது. சச்சின் பைலட்டின் நீக்கம், காங்கிரஸில் இருக்கும் இளைய தலைமுறைத் தலைவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

கடந்த மார்ச் மாதம், மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா 22 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததும், இப்போது சச்சின் பைலட் தனது துணை முதல்வர் பதவியும், கட்சித் தலைவர் பதவியும் போனாலும் பரவாயில்லை என்று போர்க்கொடி தூக்கியதும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் எங்கேயோ மிகப்பெரிய தவறு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

ராஜஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு முதல்வர் அசோக் கெலாட்டும், துணை முதல்வர் சச்சின் பைலட்டும் மட்டுமே காரணமல்ல. அவர்கள் இருவருக்குமிடையே சுமுகமான உறவு இல்லை என்பது ஆரம்பத்திலிருந்தே தெரிந்தும் பாராமுகமாக இருந்த சோனியா காந்தியும் ராகுல் காந்தியும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். 

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து வெளியேறியது முதல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவரது துணை முதல்வர் சச்சின் பைலட் மீது அவநம்பிக்கையுடன் இருந்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. மாநில காவல் துறையையும், உளவுத் துறையையும் பயன்படுத்தி, சச்சின் பைலட் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அனைவரின் தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்பதை வழக்கமாக்கியிருந்தார் முதல்வர். அடிக்கொரு தரம் சச்சின் பைலட்டின் காங்கிரஸ் விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் முதல்வர் வெளியிட்ட சில கருத்துகள் சச்சின் பைலட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் போய்விட்டது என்பதுதான் உண்மை.

சச்சின் பைலட்டைப் பொருத்தவரை, நியாயமாக அவர்தான் முதல்வராகியிருக்க வேண்டும். அவரது தலைமையில்தான் தேர்தல் நடைபெற்றது. கடந்த தேர்தலுக்கு முன்னால் மூன்று ஆண்டுகள் ராஜஸ்தானின் வெப்பத்தையும் குளிரையும் பொருட்படுத்தாமல் கிராமம் கிராமமாகச் சென்று கட்சியை வளர்த்த பெருமை சச்சின் பைலட்டையே சாரும். அப்படியிருந்தும்கூட, தேர்தல் முடிந்து ஆட்சியமைக்கும் நிலை வந்த போது, மத்திய தலைமையிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சச்சின் பைலட்டை ஓரம்கட்டி முதல்வரானார் அசோக் கெலாட். 

1998 முதல் 2003 வரை ராஜஸ்தான் முதல்வராக இருந்த அசோக் கெலாட் தனது ஐந்தாண்டு ஆட்சியின் முடிவில் மக்களின் கடுமையான அதிருப்தியை எதிர்கொண்டதால் பாஜகவிடம் ஆட்சியை இழந்தார். அதைத் தொடர்ந்து, 2008-இல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, அவரே முதல்வரானார். இரண்டாவது முறையாக 2008-இல் முதல்வரானபோதும் அடுத்த ஐந்தாண்டுகளில் மீண்டும் அவர் ஆட்சியை இழக்க நேரிட்டது. இந்தநிலையில், 2018-இல் அவரை முன்னிறுத்தினால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால் 2015 முதலே சச்சின் பைலட்டை ராஜஸ்தான் காங்கிரஸின் முகமாக முன்னிறுத்தி முதல்வர் வேட்பாளராகத் தயார்படுத்தினார்கள். கடைசி நிமிடத்தில் அசோக் கெலாட் ஆட்சியைப் பிடித்தபோது அதை சச்சின் பைலட்டால் ஏற்றுக்கொள்ள முடியாததில் வியப்பொன்றுமில்லை.

சச்சின் பைலட்டால் பாஜகவில் இணைய முடியாது என்பது அசோக் கெலாட்டுக்கு நன்றாகவே தெரியும். அவரை அவமானப்படுத்தி, கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டால் அத்துடன் அவரது அரசியல் வருங்காலத்தை சூனியமாக்கிவிடலாம்  என்பது முதல்வர் கெலாட்டின் திட்டம். சச்சின் பைலட் அவசரப்பட்டிருக்க வேண்டாம். இன்னும் பொறுமை காத்திருக்கலாம். எண்ணிக்கை பலம் இல்லாத நிலையில், ஜோதிராதித்யாவுக்கு கிடைக்கும் மரியாதை பாஜகவில் சச்சின் பைலட்டுக்குக் கிடைக்கப் போவதில்லை. அவருடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. ஆனால், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ள இளைய தலைமுறை தலைவர்கள் மத்தியில், தாங்கள் ஓரம் கட்டப்படுகிறோம் என்கிற ஆதங்கம் இருக்கிறது. அவர்களுக்கு சச்சின் பைலட் வடிகாலாக மாறக்கூடும். 

படித்தவர்; நன்றாக ஆங்கிலம் பேசக்கூடியவர்; காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர்; மத்திய அமைச்சராகத் திறம்பட பணியாற்றியவர்; சோர்ந்து கிடந்த ராஜஸ்தான் காங்கிரஸூக்கு புத்துயிர் அளித்து 2018-இல் ஆட்சியைப் பிடிக்க வழிகோலியவர். யார் கண்டது? தேசிய அளவில் சச்சின் பைலட் சிறகை விரிப்பாரோ என்னவோ!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com