கை கொடுக்கும் விவசாயம்! | நம்மைக் காப்பாற்ற இருப்பது விவசாயிகளும் விவசாயமும்தான் குறித்த தலையங்கம்

நம்மைக் காப்பாற்ற இருப்பது விவசாயிகளும் விவசாயமும்தான் என்பதை உணர்ந்து செயல்பட்டால் மட்டும்தான், பட்டினிச் சாவுகள் இல்லாமல் பொது முடக்கத்தையும் கொவைட் - 19 தீநுண்மி கொள்ளை நோயையும் நாம் வெற்றிகரமாக...

பொருளாதாரம் நிலைகுலைந்து, வேலைவாய்ப்பு இல்லாமலாகி, அனைத்துத் தொழில்களும் முடங்கிக்கிடக்கும் நிலையிலும்கூட, மிகப்பெரிய கொள்ளை நோய்த் தாக்கத்திலிருந்து காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பதற்கு நமது விவசாயிகளுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக, இந்தியா முடங்கிக் கிடந்த நிலையில், இதற்குள் பல லட்சம் பேர் பசி - பட்டினியால் மடிந்திருக்க வேண்டும். அப்படி மடியாமல் நம்மைக் காப்பாற்றியது வேளாண் துறையும், கையிருப்பில் இருந்த உணவுப் பொருள்களும்தான். 

ஜூலை முதல் வார நிலவரப்படி, 55 விழுக்காடு பரப்பளவில் காரீப் பருவ ஆரம்பக்கட்ட வேலைகள் முடிந்திருக்கின்றன. வழக்கமாக, உழுது விதை விதைக்கும் ஆரம்பக்கட்டப் பணிகள் இவ்வளவு விரைவாக நடப்பதில்லை. கடந்த ஆண்டு இதே நேரத்தில், காரீப் சாகுபடி பரப்பளவில் 33% மட்டும்தான் ஆரம்பக் கட்டப் பணிகள் நிறைவடைந்திருந்தன. பெரும்பாலான பணிகள் ஜூலை மாதத்தின் பாதிக்கு மேலும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலும்தான் நடந்து முடிந்தன. இந்த ஆண்டு 55% சாகுபடிப் பரப்பில் ஆரம்பக்கட்டப் பணிகள் முடிந்துவிட்டிருக்கின்றன என்பது மிகவும் நம்பிக்கையளிக்கும் செய்தி. 

இந்த ஆண்டு விரைந்து சாகுபடிப் பணிகள் தொடங்கியதற்கு ஒரு முக்கியமான காரணம், சரியான நேரத்தில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியதுதான். கடந்த இரண்டு வாரங்களில், சராசரி பருவ மழையைவிட 14% அதிகமாக மழை பெய்திருக்கிறது. கடந்த பத்தாண்டு சராசரியுடன் ஒப்பிடும்போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் ஏரி, குளங்களிலும் இருக்கும் தண்ணீரின் அளவு 146% அதிகம். பருவ மழை அல்லாத மழைப்பொழிவுகளால் நிலத்தடி நீர்மட்டமும் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கிறது. இவையெல்லாம் நமது விவசாயிகளுக்கு காரீப் பருவ சாகுபடிப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு பயன்பட்டிருக்கின்றன. 

கடந்த காரீப் பருவத்தைவிட இந்த முறை எல்லாப் பயிர்களுமே அதிகமான அளவில்  பயிரிடப்பட்டிருக்கின்றன. இம்முறை பருவ மழை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பதால், நெல், பருப்பு வகைகள், சோளம், சோயா பீன்ஸ், கடுகு, நிலக்கடலை, பருத்தி என்று எல்லாப் பயிர்களும் வழக்கமான சாகுபடிப் பரப்பைவிட அதிகமான அளவில் பயிரிடப்பட்டிருக்கின்றன. இதன் விளைவு அதிகரித்த மகசூலில் முடியும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.    

பருவ மழை நன்றாகவே தொடங்கியிருக்கிறது. இப்படியே தொடர்ந்தாக வேண்டும். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திலும், செப்டம்பர் மாதத்திலும் பருவ மழை பொய்க்காமல் இருக்குமேயானால், அடுத்த இரண்டாண்டுகளுக்கு இந்திய நாட்டில் நமது தேவைக்கு அதிகமான உணவுப் பொருள்கள் சேமிப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல, வெட்டுக்கிளிகளின் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டுமென்றும் நமது விவசாயிகள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடைசி வாரம் வரை பெரிய அளவிலான மழைப் பொழிவு இருக்கவில்லை. அதற்குப் பிறகு ஒரேயடியாக கடுமையான மழை தொடங்கிவிட்டது. அதனால், கடந்த ஒரு நூற்றாண்டில் மிகப்பெரிய மழைப் பொழிவை எதிர்கொண்ட ஆண்டாக  2019 இந்தியாவுக்கு இருந்திருக்கிறது. அதற்கு  எதிர்மாறாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் தேவைக்கேற்ற அளவிலான மழைப் பொழிவு, குறித்த காலத்தில் தொடங்கியிருக்கிறது. இது பின்பகுதியில் மழைப்பொழிவு குறைந்து வறட்சியாக மாறிவிடாமல் இருக்க வேண்டுமென்பதுதான் மிகப்பெரிய கவலை. அதேபோல, வெட்டுக்கிளிகளின் தாக்கத்தை நாம் மிக உன்னிப்பாகவும் கூர்மையாகவும் கவனித்தாக வேண்டும். 

உலக உணவு விவசாய நிறுவனம், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் தொடங்கியிருப்பதாக எச்சரித்திருக்கிறது. அதன் விளைவாக, முதல் தலைமுறை வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கில் உருவாகக்கூடும்.  அடுத்த நான்கு - ஐந்து வாரங்களில் இதுகுறித்து முழுமையான கண்காணிப்பை முடுக்கிவிட்டு, திட்டமிட்ட நடவடிக்கைகளால் வெட்டுக்கிளிகள் பயிர்களைப் பாதித்துவிடாமல் அரசு காப்பாற்ற வேண்டும். குறிப்பாக, ராஜஸ்தானின் பாலைவனப் பகுதிகளில் வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் நடக்கும் இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் மருந்துகள் தெளிக்கப்பட்டு, ஆரம்பத்திலேயே வெட்டுக்கிளிகள் அழிக்கப்படாவிட்டால், விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்திருக்கும் பயிர்கள் பாதிக்கப்பட்டுவிடும். 

இந்த ஆண்டு ராபி பருவ அறுவடை எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்படுவதற்கு நரேந்திர மோடி அரசு உதவியிருக்கிறது. அதேபோல கோதுமை, நெல், பருப்பு வகைகள் போன்ற பொருள்களுக்கு அடிப்படை ஆதரவு விலைகள் நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டார்கள்.

இதுவரை உரங்களுக்கு எந்தவிதத் தட்டுப்பாடும் இருப்பதாகச் செய்தியில்லை. அதேபோல, விதைகளுக்கும், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்பட ஏனைய தேவைகளுக்கும் காரீப் பருவத்திலும் பிரச்னை இருக்க வழியில்லை. பருவ மழை இதுவரை சாதகமாக இருந்திருக்கிறது. இனியும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதற்காக மெத்தனமாக இருந்துவிட முடியாது. நம்மைக் காப்பாற்ற இருப்பது விவசாயிகளும் விவசாயமும்தான் என்பதை உணர்ந்து செயல்பட்டால் மட்டும்தான், பட்டினிச் சாவுகள் இல்லாமல் பொது முடக்கத்தையும் கொவைட் - 19 தீநுண்மி கொள்ளை நோயையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com