மாற்றத்துக்கான காற்று! சிங்கப்பூர் தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

சிங்கப்பூரில் மாற்றத்துக்கான காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. என்னதான் நல்லாட்சி அமைந்தாலும் இளைய தலைமுறை வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது.


தைவானையும், தென் கொரியாவையும் தொடர்ந்து, சிங்கப்பூரும் வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி இருப்பது, ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியப் பார்வை பார்க்க வைத்திருக்கிறது. 1959- இல் தனி நாடான சிங்கப்பூர், தன்னை முழுமையான சுதந்திர ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டது என்னவோ 1965- இல்தான். இப்போது நடைபெற்றிருப்பது 18- ஆவது பொதுத் தேர்தல். சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட பிறகு நடைபெற்ற 13- ஆவது தேர்தல் இது. 

எதிர்பார்த்ததுபோலவே ஆளும் "பீப்புள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி' தொடர்ந்து 15- ஆவது தடவையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை சிங்கப்பூரில் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் பெரிய அளவிலான எதிர்ப்பு எதையும் எதிர்கொள்ளாமல் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஆளும் கட்சி, இந்த முறை ஓர் வலுவான எதிர்க்கட்சியை எதிர்கொள்ள இருக்கிறது என்பதுதான் தேர்தல் முடிவு தெரிவிக்கும் முக்கியமான செய்தி.

மார்ச் 1, 2020 அன்று 21 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கட்டாயமாக வாக்களித்தாக வேண்டும் என்பது சிங்கப்பூர் ஜனநாயக விதிமுறை. 11 கட்சிகளைச் சேர்ந்த 192 வேட்பாளர்கள் இந்த முறை சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் களமிறங்கி இருந்தனர். ஒரு சுயேச்சை உள்பட 73 புதிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தல் நடந்த 93 இடங்களில் 83 இடங்களில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான ஆளும் "பீப்புள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி'  வெற்றி பெற்றது என்றால், ஏனைய 10 இடங்களில் முதன்முதலாகத்  தேர்தலில் களம் கண்ட தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருப்பது எதிர்பாராத திருப்பம். 1966- க்குப் பிறகு சிங்கப்பூரில் இந்த அளவிலான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதே இல்லை.

ஆளும் கட்சி 61.24% வாக்குகளைத்தான் பெற முடிந்திருக்கிறது. 2011- க்குப் பிறகு இந்த அளவுக்கு ஆளும் கட்சியின் செல்வாக்குக் குறைந்திருப்பது இப்போதுதான். கொவைட்- 19 தீநுண்மி தொற்றை எதிர்கொண்ட விதமும், பெரிய அளவிலான ஊதிய இழப்போ, வேலை இழப்போ இல்லாமல் பார்த்துக் கொண்டதும், ஆளும் கட்சிக்கு சாதகமான தேர்தல் முடிவுகளைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும்.

எதிர்மாறாக, எதிர்க்கட்சியின் வாக்குகள் சற்றும் எதிர்பாராத அளவில் அதிகரித்திருக்கிறது. 1991 தேர்தலில், எதிர்க்கட்சியான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி பெற்ற வாக்குகளைவிட, இப்போது தொழிலாளர் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றிருப்பது ஆளும் கட்சியை நிலைகுலைய வைத்திருக்கிறது. இந்த அளவில் தொழிலாளர் கட்சி செல்வாக்குப் பெறும் என்று ஆளும் கட்சி எதிர்பார்க்கவில்லை. 

தேர்தலில் ஏற்பட்டிருக்கும் சிறிய பின்னடைவையும், தொழிலாளர் கட்சியின் வளர்ச்சியையும் பிரதமர் லீ சியன் லூங் ஆக்கபூர்வமாகவே அணுகி இருப்பது ஜனநாயக முதிர்ச்சியின் வெளிப்பாடு. "நாடாளுமன்றத்தில் பல்வேறு தரப்பினரின் குரல்களும், பிரச்னைகளும் எதிரொலிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவது புரிகிறது. அதே நேரத்தில், சிங்கப்பூர் பீப்புள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி ஆட்சியில் தொடர வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள். இளைய தலைமுறை வாக்காளர்கள் கூடுதல் எண்ணிக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டும் என்று கருதுவதாகத் தெரிகிறது. அவர்களது முடிவை நாங்கள் மனமுவந்து ஒப்புக் கொள்கிறோம்' என்கிற பிரதமர் லீயின் அறிக்கை பொறுப்பான அரசியல் தெளிவு.

பிரதமர் தனது கூற்றை உறுதிப்படுத்துவதுபோல, தொழிலாளர் கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கிற்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்குவதாக அறிவித்திருக்கிறார். முதல்முறையாக, சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்க இருக்கிறார்.

வாக்கு விகிதம் குறைந்திருப்பதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகரித்திருப்பதும் மட்டுமே ஆளுங்கட்சியின் வருத்தத்துக்குக் காரணங்களல்ல;  வேறு சில காரணங்களும் இருக்கின்றன. துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட், பிரதமர் லீயின் வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்தவர். 2004- இல் லீ பிரதமரானபோது, 2022 பிப்ரவரி மாதம் தனக்கு 70 வயதாகும்போது பிரதமர் பதவியிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாக அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு துணைப் பிரதமர் கியட்டை தனது வாரிசாகவும் அறிவித்தார்.

கியட் மிகக் குறைந்த வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது என்பது, ஆளும்கட்சி எதிர்கொள்ளவிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு. இப்போதைய பிரதமரும் சரி, இவருக்கு முன்னால் பிரதமராக இருந்த கோசோக் போங்கும் சரி, முதல் பிரதமர் லீ குவான் யூவும் சரி, தேசிய சராசரியைவிட மிக அதிகமான வாக்கு விகிதம் பெற்று வெற்றி பெறுவதுதான் வழக்கம். அவர்கள் 70%- க்கும் குறைந்த வாக்குகள் பெற்றதில்லை என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஜூலை 10 சிங்கப்பூர் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கும் இன்னொரு வியப்பு, கூடுதல் அளவிலான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது. 2015- இல் 21 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள் என்றால், இப்போது 93 பேர் கொண்ட அவையில் 27 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 

சிங்கப்பூரில் மாற்றத்துக்கான காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. என்னதான் நல்லாட்சி அமைந்தாலும் இளைய தலைமுறை வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது.  தங்களைச் சுற்றியிருக்கும் இந்தியா, இலங்கை, மலேசியாவை  மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த தலைமுறை போய், உலகம் முழுவதையும் பார்த்துக் கொண்டிருக்கும் தலைமுறை சிங்கப்பூரில் உருவாகிவிட்டது. அதன் தாக்கம் தேர்தல் முடிவுகளில் தெரிகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com