கவனக்குறைவு கூடாது! | கொவைட்-19 தீநுண்மித் தொற்று விழிப்புணர்வு குறித்த தலையங்கம்

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், கொவைட்-19 அழிந்துவிடாது. ஏனைய தீநுண்மிகளை நாம் எதிர்கொண்டு வாழ்வதுபோல, இதுவும் நமது கட்டுக்குள் அடங்கி, அவ்வப்போது தலைதூக்கி மறைந்து கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்க


கொவைட்-19 தீநுண்மித் தாக்குதல் 11 லட்சத்தைக் கடந்து உலகில் மூன்றாவது அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடாக இந்தியாவை மாற்றியிருக்கிறது. ரஷியாவைக் கடந்து, அமெரிக்காவுக்கும், பிரேசிலுக்கும் அடுத்தபடியாக இந்தியா உயர்ந்திருப்பது சற்று கவலையை அளிக்கிறது. முதல் பத்து லட்சம் பாதிப்பை எட்ட மூன்று மாதங்கள் எடுத்தன என்றால், அடுத்த ஒரு லட்சம் பாதிப்புக்கு மூன்று நாள்கள்தான் பிடித்திருக்கின்றன என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் கூடுதல் அளவிலான பரிசோதனைகள் நடத்தப்படுவதுதான் காரணம் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதுவே  திருப்தியளிக்கும் பதிலோ, ஆறுதல் அளிக்கும் செய்தியோ அல்ல. மேலும் கூடுதல் சோதனைகள் நடத்தினால் இன்னும் கணிசமான பாதிப்புகள் கண்டறியப்படும் என்பதுதான் அது வெளிப்படுத்தும் உண்மையான செய்தி. ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்திருக்கிறார்கள் என்பது வேண்டுமானால், நாம் சற்று ஆறுதலடையும் தகவலாக இருக்கும், அவ்வளவே.

இந்தியாவில் மகாராஷ்டிரத்தில்தான் அதிகப்படியாக 3,18,695 பேருக்கு கொவைட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உயிரிழப்பும் அங்குதான் அதிகம் (12,030). அடுத்தபடியாக, தில்லியும், தமிழகமும் பாதிப்பு எண்ணிக்கை வரிசையில்  இருக்கின்றன. தமிழகத்தில் இதுவரை 1,80,643 பேர் பாதிப்புக்கு உள்ளாகி, 1,26,670 பேர் குணமாகியும் இருக்கிறார்கள். இதுவரையிலான உயிரிழப்பு, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 2,626 பேர்.

ஒருபுறம், கொவைட்-19 தீநுண்மித் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போனாலும், இன்னொருபுறம், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது குணமாகும் விகிதம், அதிகமாகவே காணப்படுகிறது. அதேபோல, உயிரிழந்தோர் விகிதம் ஏனைய நாடுகளைவிட மிகவும் குறைவு. கடந்த வாரம், 2.67% ஆக இருந்த இறப்பு விகிதம், இப்போது 2.5% ஆக மேலும் குறைந்திருக்கிறது. உலக சராசரியைவிட இது 1.78% குறைவு என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இதற்குப் பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது ஒரு முக்கியமான காரணம். ஆரம்ப கட்டங்களில் இருந்ததுபோல அல்லாமல், இந்திய மருத்துவர்கள் விரைவிலேயே கொவைட்-19 பாதிப்பை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை அனுபவரீதியாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். நோயின் பாதிப்பு குறித்தும், இந்தத் தீநுண்மியை எதிர்கொள்ளும் பரிசோதனைகள் குறித்தும், அதன் போக்கு குறித்தும் அவர்கள் தெரிந்து  வைத்திருப்பதால்தான், லட்சக்கணக்கில் நோயாளிகள் அதிகரித்தும்கூட அதை எதிர்கொள்ளும் திறமையைப் பெற்றுவிட்டனர். ரத்தம் கட்டாமல் இருப்பதற்காக "ஹைப்பாரின்' பயன்படுத்துவதையும், நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்வதற்காக "டெக்ஸா மெத்தஸோன்' கையாள்வதையும் மேலை நாட்டு மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கொவைட்-19 தீநுண்மித் தொற்று குறித்த புரிதலில்லாததும், தேவையற்ற அச்ச உணர்வும் அதை  எதிர்கொள்வதற்குப் போதுமான முன்னெச்சரிக்கை இன்னும்கூட இல்லாமல் இருப்பதும்,  நமது ஊடகங்கள் தங்கள் கடமையை சரிவர ஆற்றவில்லை என்பதைத்தான் தெரியப்படுத்துகிறது. "வைரஸ்' என்கிற தீநுண்மி குறித்த சரியான புரிதல் இருந்தால், கொவைட்-19 பரவல் குறித்து இந்த அளவுக்கு அச்சப்படத் தேவையில்லை. தற்காப்பு நடவடிக்கையில் கவனமாக இருந்து, நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற்று குணமாகிவிட முடியும்.

காற்று மண்டலத்தில் பல கோடி தீநுண்மிகள் (வைரஸ்) இருந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம் காற்றை சுவாசிக்கும்போது அவை மூச்சுக்குழாய் வழியே நுரையீரலுக்குள் நுழைகின்றன. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வந்த ஸ்பானிஷ் ஃப்ளூவில் தொடங்கி காலரா, மலேரியா, காசநோய் எனப்படும் ட்யூபர்குளோசிஸ், சிக்குன் குனியா, டெங்கு, சார்ஸ், இப்போதைய கொவைட்-19 இவை எல்லாமே தீநுண்மிகள்தான். நமது உடல் ஆரோக்கியமாக இருந்து, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், இந்தத் தீ நுண்மிகளை  நமது உடலே எதிர்கொண்டு விரட்டி விடும்.  பலருக்கும் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உடலில் உருவாகிவிடும். அப்படி உருவாகாமல் போனால், தீநுண்மி நம்மைத் தாக்குகிறது. இதுதான் பின்னணி.

ஃபுளூ, காச நோயில் தொடங்கி  ஏனைய தீநுண்மிகள் எதற்குமே அவற்றை முற்றிலுமாக அழிப்பதற்கான மருந்து கிடையாது. ஆனால், நமது உடலில் அவற்றை எதிர்கொள்வதற்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. கொவைட்-19-க்கும் அப்படியொரு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் உலகம் அதிதீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியொரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், கொவைட்-19 அழிந்துவிடாது. ஏனைய தீநுண்மிகளை நாம் எதிர்கொண்டு வாழ்வதுபோல, இதுவும் நமது கட்டுக்குள் அடங்கி, அவ்வப்போது தலைதூக்கி மறைந்து கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும். எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை மட்டுமே  பாதிக்கும்.

முறையாக மூச்சுப் பயிற்சி செய்து நுரையீரலை வலுவாக வைத்திருப்பது, பீடி, சிகரெட், மதுபானம்  பழக்கத்தால் நுரையீரல் பலவீனமாகி விடாமல் பாதுகாப்பது, இருமல், காய்ச்சல், மூச்சிரைப்பு வந்தால் உடனடியாக கொவைட்-19 சோதனை செய்து கொண்டு மருத்துவ சிகிச்சைப் பெறுவது - இவற்றில் கவனமாக இருந்தால் உயிரிழப்புகள் குறையும்; பாதிப்பும் குறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com