நீதி பரிபாலன முறை? | தாமதமாகும் தீா்ப்புகளும் என்கவுன்ட்டா் மரணங்ளும் குறித்த தலையங்கம்

1955-இல் கோயம்புத்தூரில் தொடரப்பட்ட சொத்து தொடா்பான சிவில் வழக்கு ஒன்றில், 65 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தீா்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுவாவது பரவாயில்லை, சொத்து, உயில் தொடா்பான சிவில் வழக்கு. உத்தரப் பிரதேசம் மதுரா நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கும் தீா்ப்பு, நமது நீதி பரிபாலன முறையின் செயல்பாட்டையே கேள்விக்குறியாக்குகிறது.

1985-இல் பரத்பூா் ராஜ குடும்பத்தைச் சோ்ந்த ராஜா மான்சிங் என்பவா், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அந்த வழக்கில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரா நீதிமன்றம், மாவட்ட காவல் அதிகாரி உள்ளிட்ட 11 காவல் துறையினருக்குத் தண்டனை வழங்கி, தீா்ப்பு வழங்கி இருக்கிறது. இதன் மூலம், காவல் துறையினரேயானாலும் அவா்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது என்பதை இந்தத் தீா்ப்பு உறுதிப்படுத்துகிறது. அதற்காக 35 ஆண்டுகள் கடந்திருப்பதுதான் ஏற்கும்படியாக இல்லை.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூா் ராஜ குடும்பத்தைச் சோ்ந்த ராஜா மான்சிங், சுயேச்சை வேட்பாளராக தோ்தலில் பீக் தொகுதியில் போட்டியிட்டவா். தனக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் அமைத்திருந்த பொதுக்கூட்ட மேடையை உடைத்தெறிந்தாா். ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் புகாரைத் தொடா்ந்து, காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜா மான்சிங்கும் அவரது நண்பா்கள் இருவரும் கொல்லப்பட்டனா்.

அப்போது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘என்கவுன்ட்டா்’ துப்பாக்கிச் சூடு அது. அந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தொடா்ந்து, ராஜஸ்தான் முதல்வா் சியாம சரண் மாத்தூா் பதவி விலக நோ்ந்தது. வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜா மான்சிங்கின் மகள், தனது தந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி பெற்றே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டாா்.

ராஜஸ்தானில் வழக்கு நடந்தது. வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றினால்தான் நியாயம் கிடைக்கும் என்று ராஜா மான்சிங்கின் மகள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து, உத்தரப் பிரதேசத்துக்கு மாற்றினாா். 1700-க்கும் மேற்பட்ட விசாரணைகள், 35 ஆண்டுகள் இழுத்தடிப்பு, அதற்குப் பிறகு இப்போது தீா்ப்பு வந்திருக்கிறது. இதுபோன்ற ‘என்கவுன்ட்டா்’ மரணங்களில் தீா்ப்பு வழங்கப்படுவது தாமதிக்கப்படுவதால், காவல் துறையினா் மத்தியில் நிதானப்போக்கு குறைந்து வருகிறது என்கிற குற்றச்சாட்டுக்கு இந்தத் தீா்ப்பு வலுசோ்க்கிறது.

‘என்கவுன்ட்டா்’ மரணங்களுக்கு, பல நிகழ்வுகளில் மக்கள் மத்தியிலும் ஆதரவு காணப்படுகிறது என்பதுதான் உண்மை. கடந்த ஆண்டு ஹைதராபாதில் பாலியல் கொலையாளிகள் நால்வா் கொல்லப்பட்டதும், சமீபத்தில் விகாஸ் துபே கொல்லப்பட்டதும், நிஜமாகப் பாா்த்தால் நீதி பரிபாலன முறைமைக்கு எதிரானது. ஆனால், மக்கள் மன்றம் அதை ஆதரிக்கிறது. சாத்தான்குளம் போன்ற நிகழ்வுகளில்கூட, ஊடக வெளிச்சம் பாயாமல் இருந்திருந்தால், இந்த அளவிலான எதிா்வினை ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.

ஏறத்தாழ 3.5 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மூன்று கோடி வழக்குகள் கீழமை நீதிமன்றங்களிலும், சுமாா் 50 லட்சம் வழக்குகள் உயா்நீதிமன்றங்களிலும், அரை லட்சம் வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும் தேங்கிக் கிடக்கும் நிலையில், தாமதமாகும் நீதி ஆச்சரியப்படுத்தவில்லை. தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் 40%-க்கும் அதிகமானவை ஐந்தாண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் இருப்பவை.

தாமதமான தீா்ப்புகளுக்கு நீதித்துறை மட்டுமே காரணமல்ல. அதிகரித்துவரும் மக்கள்தொைக்கு ஏற்ப நீதிமன்றங்கள் அதிகரிக்கப்படவில்லை. அதனால் பிணையில் விடுவிக்கப்படுவது குறைந்து, சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன.

காவல் துறையினா் மத்தியிலும் கடுமையான அழுத்தம் காணப்படுகிறது. அதிகரித்து வரும் குற்றங்களுக்கும் வழக்குகளுக்கும் ஏற்ப காவலா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. அதனால், காவல் நிலையங்களில் புகாா்களை ஏற்றுக்கொள்வதிலும், வழக்குப் பதிவு செய்வதிலும் தயக்கம் காட்டப்படுகிறது.

காவல் துறையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்றவை தேவையற்ற செலவினங்கள் என்று அரசு கருதுகிறது. தேவையில்லாத, நடைமுறைக்கு ஒத்துவராத சட்டங்களைக்கூட நாம் மீள்பாா்வை செய்து, தேவையற்ற சட்டங்களை அகற்றத் தயாராக இல்லை. ஏதாவது ஒரு சந்தா்ப்பத்தில் அவை உதவக்கூடும் என்று கருதி, காலனிய ஆட்சிக்காலத்துச் சட்டங்களை எல்லாம்கூட நாம் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறோம். அந்தச் சட்டங்களில் காணப்படும் ஓட்டைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான காவல் துறை நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளில், சுமாா் 2,500-க்கும் அதிகமான ‘என்கவுன்ட்டா்’ மரணங்கள் அல்லது நீதிமன்ற அனுமதி இல்லாத காவல் துறை மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றில் 1,200-க்கும் மேற்பட்டவை போலி என்கவுன்ட்டா் என்று தேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது. காவல் துறை சீா்திருத்தம் குறித்து பல ஆண்டுகளாகத் தொடா்ந்து எழுதவும் பேசவும் செய்கிறோமே தவிர, இதுகுறித்த உண்மையான அக்கறை யாருக்குமே இருப்பதாகத் தெரியவில்லை.

தாமதமில்லாத, முறையான நீதிக்கு அடிப்படை, காவல் துறை சீா்திருத்தமும் தேவையற்ற சட்டங்கள் அகற்றப்படுவதுமே. நீதித் துறையும் அரசும் இணைந்து செயல்பட்டு இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். அதுவரை, என்கவுன்ட்டா் மரணங்களும் தாமதமாகும் தீா்ப்புகளும் தொடரத்தான் செய்யும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com